Skip to main content

“மிகுந்த கவலையளிக்கிறது..” -  தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ஆந்திர துணை முதல்வர்!

Published on 06/05/2025 | Edited on 06/05/2025

 

AP Deputy CM pawan kalyan speaks out for Tamil Nadu fishermen

தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதோடு மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இந்த துயரச் சம்பவங்களுக்கு இடையே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்களும் அவ்வப்போது தாக்குதலும் நடத்தி வருகின்றனர்.

அந்தவகையில், அண்மையில் நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவர்கள் கிராமத்தைச் சேர்ந்த 20 மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தினர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான வலை, மீன்கள், ஜி.பி.எஸ் உள்ளிட்டவற்றையும் பறித்துக்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தமிழக மீனவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமீபத்தில் 5 வெவ்வேறு சம்பவங்களில், 24 இந்திய மீனவர்கள் இன்னல்களுக்கும், தாக்குதலுக்கும் உள்ளாகியிருப்பது மிகவும் கவலையளிக்கிறது. குறிப்பாக நாகப்பட்டினத்தைச் சேர்ந்த நமது மீனவர்கள் தாக்குதலுக்குள்ளாகி, காயமடைந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது மிகுந்த கவலையளிக்கிறது. இந்தியா மற்றும் இலங்கை இடையே உள்ள தூதரக நல்லுறவுகளை அடிப்படையாகக் கொண்டு, இது போன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க, நமது வெளியுறவுத் துறை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகள் மூலமும், பரஸ்பர ஒத்துழைப்பின் மூலமும், இரு நாடுகளும் இது போன்ற நிகழ்வுகள் மீண்டும் ஏற்படாத வகையில் துரிதமான தீர்வை காண வேண்டும். எல்லைகள் மதிக்கப்பட வேண்டும். அதே வேளையில், இரு நாடுகளின் மீனவர்களின் கண்ணியமும், மனித உரிமைகளும் பாதுகாக்கப்பட்டு, நல்லிணக்கத்தின் மூலமும், பரஸ்பர ஒத்துழைப்பின் மூலமும், மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்