Skip to main content

உயிரைப் பறித்த ஃபோன் கால்...

Published on 23/01/2018 | Edited on 24/01/2018
உயிரைப் பறித்த  ஃபோன் கால்...  



ஹல்லோ சார்/மேடம், நாங்க பேங்க்ல இருந்து பேசுறோம். உங்களுடைய ஆதார் எண்ணை உங்க  அக்கௌன்ட்டோட லிங்க் பண்ணனும். இல்லைனா, உங்க அக்கௌன்ட்ட  க்ளோஸ் பண்ணிருவாங்க...

அப்படியா சார், நான் இன்னும் இணைக்கவில்லை. இப்போ என்ன சார் பண்றது... 

ஓக்கே ஒன்னும் பிரச்னையில்லை நீங்க ஆதார் எண்ணை கொடுங்க நானே சேர்த்திடுறேன், உங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை, அலைச்சல் மிச்சம்...

நன்றி சார் எண்ணை தர்றேன் சேர்த்திடுங்க....

அடுத்து," எஸ்.எம்.எஸ்ல  ஓ.டி.பி. வந்திருக்கும், அதை சொல்லுங்க....

ஓ இதோ சொல்றேன் சார்....

அவ்வளவுதான் அடுத்து நம் சேமிப்பு கணக்கில் இருக்கும் பணத்தை லாவகமாக வாரி எடுத்துக்கொண்டு சென்றுவிடுவார்கள் இந்த  ஆன்லைன் திருடர்கள். இந்த மாதிரி  நிறைய சம்பவங்கள், நிறைய பேருக்கு நடந்திருக்கும், இன்றும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. 



சமீபத்தில்,  சென்னை அண்ணா நகரில் 71 வயது மூதாட்டியான ஜெயலட்சுமி என்பவரிடம் ஆன்லைன் திருடர்கள் தங்களது கைவரிசையை காட்டியுள்ளனர். மேலே எழுதப்பட்ட உரையாடல் போன்றே அந்த மூதாட்டியை ஏமாற்றி அவரின் கணக்கில் இருந்து 90,000 பணத்தை திருடியுள்ளனர். இந்த சம்பவம் நடந்து முடிந்த அடுத்த நாளும் அவரது கணக்கில் இருக்கும் மீதிப்  பணத்தை எடுக்க அவரிடம் இதே போன்று உரையாடியிருக்கின்றனர். அப்போது அவருடன் உறவினர்கள் இருந்ததால் உஷார் ஆகிவிட்டனர். அடுத்த நாளும் மூதாட்டி அவர்களிடம் ஏமாந்த சோகத்திலேயே இருந்ததால் நெஞ்சு வலி ஏற்பட்டு இறந்துவிட்டார். இதுபோன்ற ஆன்லைன் திருட்டு என்பது நூதனமாக பரவியிருக்கிறது. முன்பெல்லாம் உடலை வருத்தி, அடுத்தவரை தாக்கி திருடி கொண்டிருந்தவர்கள். காலத்திற்கேற்ப தங்கள் அறிவை வளர்த்துக்கொண்டு திருட ஆரம்பித்துவிட்டார்கள்.



இந்த இரண்டு வருடங்களில் மட்டும் மாநகர காவல்துறை 1000 கிரெடிட் கார்டு மோசடி வழக்கும், 2000 டெபிட் கார்டு மோசடி வழக்கும் பதிவுச்செய்துள்ளனர். அதில் 25% பணம் மட்டுமே மீட்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள். ஆன்லைன் திருட்டுகள் என்றால் இவ்வாறு தொடர்புகொண்டு திருடுவது மட்டுமல்ல, நமக்கு வரும் எஸ். எம். எஸ். மூலமும் ஆன்லைனில் போலியான வங்கி வலைத்தளம் மூலமும் இவர்களின் கைவரிசையை காட்டுகிறார்கள். 2016ல் ஆன்லைன் மூலம் 531 திருட்டுகளும், 2017ல் 175 திருட்டுகளும் நடந்துள்ளது. அதேபோன்று 2016ல் 16,12,04,200 ரூபாய் பணமும், 2017ல் 7,15,98,058 ரூபாய் பணமும் திருடப்பட்டுள்ளது. அதில் 2016ல் 25% பணமும், 2017ல் 20% பணமும் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆன்லைன் திருடர்களின் திருட்டைப்  பற்றி ஒரு நாளுக்கு 10 முதல் 15 புகார்களே வருகிறது அவர்களின் கைபேசி எண்ணைக் கொண்டு தேடினாலும் வெகுவிரைவில் அதை மாற்றிவிடுகின்றனர். இதுபோன்ற திருட்டை டெல்லி, நொய்டா, குருகிராம் போன்ற ஊர்களில் இருந்து செய்கின்றனர்.



 சென்னையை சேர்ந்த மூதாட்டி ஜெயலட்சுமியிடம் தொடர்புகொண்டவரை டிரேஸ் செய்தபோது, அது உத்தரகாண்ட்டில் இருந்து வந்துள்ளது. இந்தியாவில் எங்கோ ஒரு நுனியில் இருந்துகொண்டு அவர்கள் லாவகமாக திருடிவருகின்றனர். சைபர் கிரைம் கமிஷனர் எஸ்.ஆர். செந்தில் குமார் கூறுகையில், "ஆன்லைன் திருட்டு நடைபெற்றால், அதனை 24 மணிநேரங்களுக்குள் தெரிவியுங்கள். வங்கி நிர்வாகிகளை கொண்டு அந்த பணத்தை மீட்டுவிடலாம்" என்றார். 



ஆதார் கார்டு வந்த பிறகு ஒருவரை பற்றிய அனைத்து தகவல்களும் எளிதாக ஒருவருக்கு கிடைக்கின்றது என்ற குற்றச்சாட்டு நாடு முழுவதும் உள்ளது. ஆனால் ஆதார் வருவதற்கு முன்பே நம்மைப் பற்றிய அனைத்து விவரங்களையும் நாம் கூகுளுக்கும், பேஸ்புக்கிற்கும் கொடுத்துவிட்டோம். யோசியுங்கள், உங்களது மெயிலிற்கு சம்மந்தமில்லாமல் ஏதோ ஒரு நிர்வாகத்தின் விளம்பரம் மெசேஜாக வருகிறது. உங்கள் விவரங்கள் எல்லாம் விற்கப்படுகிறது. அடுத்த நிமிடத்தில்கூட யாரோ ஒருவர் நம் விவரங்களை எடுத்துவிட்டு, நம்மிடம் தொடர்பு கொள்ள இருக்கலாம். மெசேஜ் மூலம் அந்த லிங்கை தொடுங்கள் என்று சொல்லலாம்... உஷார் உஷார் ! 

-சந்தோஷ் குமார் 

சார்ந்த செய்திகள்