Skip to main content

தினகரன் வரும்போது எடப்பாடி எழுந்து நிற்பார்

Published on 04/01/2018 | Edited on 04/01/2018
 தினகரன் வரும்போது எடப்பாடி எழுந்து நிற்பார் - நாஞ்சில் சம்பத்! 



அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் நடந்தது பற்றியும், அந்தக் கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டி குறித்தும்  தினகரன் ஆதரவாளரான நாஞ்சில் சம்பத்திடம் நக்கீரன் இணையதளம் கேள்வி எழுப்பியது. அவை உங்கள் பார்வைக்கு:-

சட்டசபைக்கு  தினகரன் வரும்போது அதிமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் வணக்கம் செலுத்துவதோ, சிரிப்பதோ, தலையாட்டுவதோ கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறதே?

இப்படித்தான் அன்றைக்கு கவுரவர்கள் சபைக்கு கண்ணன் வந்தான். கவுரவர்கள் சபைக்கு உள்ளே கண்ணன் வருகிறபோது யாரும் எழுந்திருக்கக் கூடாது என்று துரியோதனன் சொன்னான். ஆனால் கவுரவர்கள் சபைக்குள்ளே கண்ணன் வந்தபொழுது முதலில் எழுந்து நின்றவன் துரியோதனன். அதுதான் தமிழ்நாட்டில் நடக்கப்போகிறது.

சசிகலாவாலும், தினகரனாலும் அரசியலில் வாழ்வு பெற்ற இந்த அடிமைகள் இன்றைக்கு ஆரவாரம் செய்கிறார்கள். டி.டி.வி.தினகரனுக்கு நேருக்கு நேராக நிற்கிற தகுதி இவர்களுக்கு இல்லை. ஆகவே அச்சத்தில் உறைந்து கிடக்கிற இந்த அடிமைகளின் புலம்பலை 8ஆம் தேதி நாம் கேட்கத்தான் போகிறோம்.

சட்டப்பேரவையில் தினகரன் வருகையால் எந்த மாற்றமும் நிகழாது. நாம் ஒருவர் நமக்கு ஒருவர் கதைபோலவே அது இருக்கக்போகிறது. மு.க.ஸ்டாலின், தினகரன் உள்ளிட்ட யார் நினைத்தாலும் இந்த அரசை கவிழ்க்கவோ, ஊறுவிளைவிக்கவோ முடியாது என்று ஜெயக்குமார் கூறியிருக்கிறாரே?

இந்த ஆட்சி இப்போதே நீதிமன்றத்தின் படிக்கட்டில் குற்றுயிரும் குலையுயிருமாய் கிடக்கிறது. தேர்தல் ஆணையமே 111 பேர் என்று எண்ணிக்கையை வெளிப்படையாக சொன்ன பிறகு அந்த 111 பேரையும் நேற்றைக்கு காணவில்லை. அதில் 7 பேர் தொலைந்து போய்விட்டார்கள். இனி உயர்நீதிமன்றம் என்ன சொல்லப்போகிறது என்று நாடு எதிர்பார்க்கிறது. நான் எதிர்பார்க்கிறேன். ஆகவே குற்றுயிரும் குலையுயிருமாய் நீதிமன்றத்தின் படிக்கட்டில் கிடக்கிற இந்த ஆட்சிக்கு ஆயுள் மிகக்குறைவு. இது எப்போது கவிழும் என தெரியாது. ஆனால் காலன் வந்துவிட்டான். எப்போது இந்த ஆட்சியை கைப்பற்றப்போகிறான் என்று தெரியாது என்றார்.

-வே.ராஜவேல்

சார்ந்த செய்திகள்