Skip to main content

புதிய கவர்னர் உள்ளும் – புறமும்!

Published on 01/10/2017 | Edited on 01/10/2017
புதிய கவர்னர் உள்ளும் – புறமும்!



ஓராண்டுக்கு பின் தமிழகத்துக்கு புதிய கவர்னர் நியமிக்கப்பட்டுள்ளார். பெரும் சர்ச்சைகளுக்குள் சிக்கிய தமிழகத்தின் பொறுப்பு கவர்னரான வித்யாசாகர்ராவ் விடுவிக்கப்பட்டு புதிய கவர்னராக பன்வாரிலால் புரோகித் நியமிக்கப்பட்டுள்ளார்.

1940 ஏப்ரல் மாதம் 16ந்தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜின்ஜின் என்கிற கிராமத்தில் பகவான்தாஸ்க்கு மகனாக பிறந்தார் பன்வாரிலால் புரோகித். புரோகித் என்பது சாதிப்பெயர். வட இந்திய பார்ப்பனர் சாதியை சேர்ந்தவர். இவர் பிறந்தது கிராமமாகயிருந்தாலும் படித்தது, வளர்ந்ததுயெல்லாம் மகாராஷ்ட்ரா மாநிலம் நாக்பூரில்.

நாக்பூரில் உள்ள ஜீ.எஸ் கல்லூரில் பி.காம் படித்தவர் ஆரம்பத்தில் பார்வார்டு பிளாக் கட்சியில் இருந்தார். அதன் பின்பே காங்கிரஸ் கட்சிக்கு வந்தார். முதல் முறையாக அதாவது 1978ல் கிழக்கு நாக்பூர் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக தேர்வானார். 1980ல் தெற்கு நாக்பூர் தொகுதியில் போட்டியிட்டவர் இந்த முறை ஊரக வளர்ச்சி துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். 1984ல் வந்த பாராளமன்ற தேர்தலில் நாக்பூர் தொகுதியில் போட்டியிட்டு எம்.பியாக வெற்றி பெற்றார். 1989லும் அதே தொகுதியில் இருந்து எம்.பியாக தேர்வானார். அதன்பின் இவருக்கும் முன்னால் பிரதமர் ராஜிவ்காந்திக்கும் முட்டள் மோதல் வந்தது. இதனால் கட்சியில் இருந்து ஒதுங்கி வைக்கப்பட்டு இருந்தார்.

இந்த நேரத்தில் தான் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ஆர்.எஸ்.எஸ் தீவிரமாக இருந்தபோது, அதற்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்ததோடு பண உதவியும் பெருமளவில் செய்தார். இதனால் காங்கிரஸ் கட்சியில் இவருக்கு எதிர்ப்புகள் அதிகரித்தால் கட்சியில் இருந்து விலகினார். பாஜகவில் இணைந்து 1996ல் பாஜக சார்பில் எம்.பி தேர்தலில் நின்று மூன்றாவது முறையாக எம்.பியாக தேர்வானார். பாஜகவின் முன்னால் பிரதமர் வாஜ்பாயின் நம்பிக்கைக்குரிய மத்திய அமைச்சராகவும், பாஜகவின் நிதி பாதுகாவலராகவும் இருந்த பிரமோத்மகாஜனுடன் மோதல் வந்து பாஜகவில் இருந்து விலகி 2003ல் விதர்பா ராஜ்ய கட்சி என்கிற கட்சியை சொந்தமாக தொடங்கி நடத்த துவங்கினார் பன்சாரிலால்.

விதர்பா பெயரில் கட்சி தொடங்கினாலும் அந்த விதர்பா பகுதியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துக்கொண்டு மடிந்துப்போனதுக்கு பெரியதாக எந்த உதவியும் செய்யாதவர் இவர். 2009ல் தனது கட்சியை மீண்டும் பாஜகவிலேயே இணைந்துவிட்டு 2009 எம்.பி தேர்தலில் சீட் வாங்கி நின்று தோல்வியை சந்திக்க அமைதியாகிவிட்டார். 2014ல் அதே நாக்பூர் தொகுதி வேண்டும்மென கேட்டார் தரப்படவில்லை.  பாஜக மீண்டும் பதவிக்கு வர ஆர்.எஸ்.எஸ் ஆதரவுடன் 2016 ஆகஸ்ட் 17ந்தேதி அசாம் கவர்னராக பொறுப்பு ஏற்றுக்கொண்டார். கடந்த ஆண்டு மேகாலயா கவர்னராக இருந்த சண்முகநாதன் பாலியல் சர்ச்சையில் சிக்கி பதவியை விட்டு விலகியதால் மேகாலயா கவர்னர் பதவியையும் கூடுதலாக பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில் தான் தமிழக கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.  

1959 ஜீலை 14ந்தேதி புஷ்பாதேவி என்கிறவரை திருமணம் செய்துக்கொண்ட பன்சாரிலால்க்கு இரண்டு மகள்கள், ஒரு மகள். பெரும் தொழிலதிபர். கண்ணாடி தொழிற்சாலை, சிமெண்ட் தொழிற்சாலை, ஆட்டோமொபைல்ஸ், கல்லூரிகள் என பல தொழில்கள் நடக்கின்றன. இந்துத்துவாதியும், காங்கிரஸ்காரராக இருந்து நாட்டு விடுதலைக்காக போராடிய கோபால கிருஷ்ணா கோகலே தொடங்கிய தி ஹிட்டவாடா பத்திரிக்கை இவர் கட்டுப்பாட்டில் இருந்தது, இப்போது இவரது மகன் ராகேஷ் நடத்துகிறார்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்சின், இந்திய பார்வார்டு பிளாக் கட்சியில் தனது அரசியல் வாழ்வை தொடங்கி, காங்கிரஸ் கட்சிக்கு வந்து கலந்தாலும், அவரது ரத்தத்தில் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம் தான் ஓடிக்கொண்டு இருந்தது. இதை எப்போதும் அவர் மறைத்துக்கொண்டதில்லை. அதனால் தான் காங்கிரஸ்சில் இருந்து விலகி பாஜகவில் அடைக்கலமானபோதும், அடைக்கலமாகி பின்பு தனி கட்சி நடத்தியபின்பு அதுவும் போணியாகாமல் மீண்டும் பாஜக கதவை தட்டியபோது, மீண்டும் இணைத்துக்கொண்டு கவர்னர் பதவி வரை தந்துள்ளது பாஜக.

அரசியல் விளையாட்டில் தேர்ந்தயிவர். பின்னணி பேரம் நடத்துவதில் கைதேர்ந்த பிஸ்னஸ்மேன். 1989ல் ஆர்.எஸ்.எஸ் கரசேவை தொடங்கும் முன்பு பல கட்சிகளிடம் ஆதரவு கேட்டது. அப்போது முன்னால் பிரதமராக இருந்த இராஜிவ்காந்தியை ஆர்.எஸ்.எஸ் தலைவர் பாலாசாகோப் ரகசியமாக சந்தித்து ஆதரவு கேட்டார். இரு தலைவர்களை ரகசியமாக சந்திக்க வைத்ததை பின்னாளில் பெருமையாக அரசியல் அரங்கில் வெளிப்படுத்தியவர், ஆர்.எஸ்.எஸ்க்கு மறைமுகமாக ராஜிவ்காந்தி ஆதரவு தந்தார் என்றார். இன்று தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு குழப்பத்தின் உச்சத்தில் உள்ளது. மத்தியில் ஆளும் பாஜக தன் விரும்படியெல்லாம் அதை ஆட்டிவைத்துக்கொண்டுள்ள சூழ்நிலையில் தமிழக கவர்னராக வந்துள்ளார் பன்வாரிலால் புரோகித்.

புரோகித் என்கிற புரோகிதர் வகுப்பை சேர்ந்த கவர்னர், தமிழகரசு நடக்க அதிமுக அரசுக்கு சுபகாரியம் செய்ய போகிறாறா அல்லது காரியம் செய்து வைத்து சுத்தமாக முடிக்கபோகிறாறா என்பது இனிதான் தெரியவரும்.

- ராஜ்ப்ரியன்

சார்ந்த செய்திகள்