Skip to main content

மோடியின் டிஜிட்டல் இந்தியா லட்சணம்!

Published on 05/01/2018 | Edited on 05/01/2018
மோடியின் டிஜிட்டல் இந்தியா லட்சணம்! 

இனி இந்தியாவை டிஜிட்டல்தான் வழிநடத்தும் என்ற மாயை பெருமுதலாளிகளால் கட்டமைக்கப்பட்டபோது, டிஜிட்டல் மீதான மோகம் அதிகரித்தது. அதே பெருமுதலாளிகளால் ‘குஜராத் மாடல்’ என வார்க்கப்பட்ட ஒரு பிம்பம் உருவாக்கப்பட்டு, அவர்தான் இந்திய எதிர்காலத்தை மாற்றப்போகும் ரட்சகர் என சாமான்ய மக்களுக்கு மத்தியில் நம்பவும் வைக்கப்பட்டது.



கிட்டத்தட்ட ரூ.30 ஆயிரம் கோடி முதலீட்டில் டீம் அமைத்து, அனிமேஷன், அகண்ட பாரதம் போன்ற பில்டப்புகளைக் கொடுத்து மோடி என்ற தனிமனிதர் மக்கள் மனதில் விதைக்கப்பட்டார். தான் வந்த பாதையை மறக்காமல், தொடர்ந்து டிஜிட்டல் சார்ந்த சேவைகளை ஊக்குவிக்கவேண்டும் என்ற முழக்கங்களை எழுப்பினார் மோடி. அவர் பிரதமரான பின்பு பல இந்திய பிராண்டுகளுக்கு மத்தியில் டிஜிட்டல் இந்தியாவும் மிடுக்கான இடத்தைப் பிடித்தது.

மோடி எந்த டிஜிட்டல் சாதனங்கள் மூலமாக கட்டமைக்கப்பட்டாரோ, அதே டிஜிட்டல் சாதனங்கள் மூலமாக அவருடைய பிம்பமும் இப்போது உடைந்து நொறுங்கத் தொடங்கியிருக்கிறது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

இனி டிஜிட்டலுக்கு மாறப்போகிறோம் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருந்தாலும், அதற்கான சூழல் இது இல்லை என்பதை பணமதிப்பு இழப்பு நடவடிக்கை காலகட்டம் உணர்த்தியது. டிஜிட்டலில் எந்தளவுக்கு சாதகம் இருக்கிறதோ.. அதே அளவு பாதகம் இருப்பதை ஆதார் விவரங்கள் லீக் ஆனபோது ஒட்டுமொத்த இந்தியாவும் உணர்ந்தது, உணர்ந்து கொண்டிருக்கிறது.



இந்த டிஜிட்டல் இந்தியா மக்களின் மத்தியில் போய்ச் சேர்ந்ததா? தோற்றுப் போனதா? என்ற விவாதங்கள் ஒரு புறம் எழுப்பப்பட்டாலும், பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எந்தளவுக்கு டிஜிட்டலாக மாறியிருக்கிறார்கள் என்ற கேள்வியையும் எழுப்ப வேண்டியுள்ளது.

தொடர்ந்து சமூக வலைதளங்களில் துடிப்புடன் செயல்படும் பிரதமர் மோடி, அதையே தன் மந்திரிகளிடமும் எதிர்பார்த்திருக்கிறார். ஆனால், தனது பெயரிலான ‘நமோ’ (NaMo) செயலி வழியாக தினமும் செய்திகளைப் பகிர்ந்து எந்த பதிலும் கிடைக்காத போதுதான், பெரும்பாலான பாஜக எம்.பி.க்கள் அதைப் பயன்படுத்தவேயில்லை என்ற கசப்பான உண்மை மோடியின் செவியைச் சென்றடைந்திருக்கிறது.

கடந்த வாரம் இதுகுறித்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் பேசிய மோடி, இனி நமோ செயலி பயன்பாட்டைக் கட்டாயப்படுத்தவேண்டும். முதலில் அனைத்து உறுப்பினர்களும் அந்த செயலியை தங்களது செல்போன்களில் நிறுவியிருக்க வேண்டும் என்று கட்டளையிட்டார். பாவம்.. இந்தியாவை டிஜிட்டல் தலைமுறையாக மாற்ற இருக்கும் முந்தைய தலைமுறையைச் சேர்ந்த கட்சி உறுப்பினர்கள் பலருக்கு, செல்போன்களில் அதை எப்படி நிறுவுவது என்பதுகூட தெரியாமல் போனது.  

பாஜகவின் ஐ.டி. விங்கில் இருந்து வந்தவர்களின் உதவியோடு 250 எம்.பி.க்களின் செல்போன்களில் நமோ செயலி ஒருவழியாக நிறுவப்பட்டது. மீதமிருக்கும் எம்.பி.க்களில் பலர் இரண்டு செல்போன்களைப் பயன்படுத்துவதாலும், அதில் ஒன்றை அவர்களது உதவியாளர்கள் வைத்திருப்பதாலும் நமோ செயலியை நிறுவ முடியாமல் போனது. கூடிய விரைவில் விடுபட்ட எம்.பி.க்களின் செல்போன்களிலும் நமோ செயலியை நிறுவிவிடுவோம் என பாஜக ஐ.டி. விங் உறுதியளித்துள்ளது.

பாஜக தலைமை அனைத்து எம்.பி.க்களும் தினமும் தங்கள் தொகுதி குறித்த விவாதங்களையும், தகவல்களையும், கோரிக்கைகளையும் நமோ செயலியில் பதிவிட வேண்டும் என கட்டளையிட்டுள்ளது. ஆனால், எத்தனை வார்த்தைகள், என்ன வடிவம் என எப்படி அவற்றை அனுப்புவது என்று தெரியாமல் பல எம்.பி.க்கள் விழிக்கின்றனர்.

மாநிலங்களவை எம்.பி.க்கள், மக்களவை எம்.பிக்கள், அமைச்சர்கள் கவுன்சில் மற்றும் பாஜக கட்சி அலுவலக உறுப்பினர்கள் என நான்கு விதமான குழுக்களை அமைத்து, இனி அதன்வழியாக தினமும் கட்சி செயல்பாடுகளை அப்டேட் செய்ய வேண்டும் என்ற உத்தரவும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் எல்லாம் ‘2019ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான கட்சி செயல்பாடுகளுள் அடக்கம்’ என கட்சிக்குள்ளேயே பேசிக்கொள்கின்றனர்.



‘ஐ.டி. உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு இல்லாத நிலையில், ஜி.எஸ்.டி.யை என் பிணத்தின் மீது அமல்ப்படுத்துங்கள்’ என்று அப்போதைய காங்கிரஸ் அரசின் மீது பாய்ந்தவர் மோடி. பின்னர், அதன் அனுகூலங்களை உணர்ந்த அவர், அவசர அவசரமாய் ஜி.எஸ்.டி.யை நடைமுறைக்குக் கொண்டுவந்தார். அந்த சமயத்தில் மத்தியப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக அமைச்சர் ஓம் பிரகாஷ் துருவே ஜி.எஸ்.டி பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது என்று கூறியதை இங்கு நினைவுகூரலாம்.

டிஜிட்டல் என்ற சொற்பதத்தைத் தவறாக புரிந்துகொள்ளக் கூடாது. அதன் மீதான முறையான செயல்பாடுகள், மக்களை அதன் மீதான புரிதலோடு உந்துதல் என எதையும் நாம் கையாளவில்லை என்பதை பாஜக எம்.பி.க்களே மோடிக்கு உணர்த்திக் கொண்டிருக்கின்றனர்.

- ச.ப.மதிவாணன்

சார்ந்த செய்திகள்