Skip to main content

நீதிக்கட்சி திராவிடர் கழகம் ஆனது!

Published on 05/10/2017 | Edited on 05/10/2017


 

1940 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி திருவாரூரில் நடைபெற்ற நீதிக்கட்சிமாநாட்டில் தந்தை பெரியார் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த மாநாட்டில்தான் திராவிடநாடு திராவிடருக்கே என்ற முழக்கம் முன்வைக்கப்பட்டது.

திராவிடர்களுடைய கலை, நாகரிகம், பொருளாதாரம் ஆகியவை முன்னேற்றமடைய திராவிடர்களின்அகமாக கருதப்படும் சென்னை மாகாணம் பிரிட்டிஷ் இந்தியாவுக்கான அமைச்சரின் நேரடிப் பார்வையில்தனிநாடாக பிரிக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



கி.ஆ.பெ.விசுவநாதம்


இதற்கான திட்டங்களை வகுக்க பெரியார், முனி கன்னையா நாயுடு, கி.ஆ.பெ.விசுவநாதம், டபிள்யு.பி.ஏ.சவுந்தரபாண்டியன், பி.டி.ராஜன், ராஜா சர் முத்தையா செட்டியார் உள்ளிட்டோர்அடங்கிய குழுவை அமைக்கவும் மாநாடு தீர்மானித்தது. இந்த தீர்மானத்தை பி.பாலசுப்பிரமணியம்முன்மொழிய, அறிஞர் அண்ணாவும், சி.பாசுதேவும் வழிமொழிந்தனர்.

இந்தி எதிர்ப்பு போராட்டம் மக்கள் மத்தியில் தங்களுடைய பாரம்பரிய பெருமைகளைஉணர வழி அமைத்திருந்தது. தாளமுத்து-நடராஜன் ஆகியோர் உயிர்த்தியாகம் செய்திருந்தனர்.எனவே, திராவிடநாடு கோரிக்கைக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகியது. 1941 ஜூலை மாதம்1 ஆம் தேதி திராவிடநாடு பிரிவினை நாள் அனுசரிக்க முடிவு செய்தனர். அறிஞர் அண்ணாவின்உரைகள் தமிழ் மக்களிடையே குறிப்பாக இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தைஏற்படுத்தியது.

இந்நிலையில்தான் நீதிக்கட்சியின் பொதுச்செயலாளராக பணியாற்றிய கி.ஆ.பெ.விசுவநாதம்தந்தை பெரியாருடன் முரண்பட்டு, அவர்மீது 14 குற்றச்சாட்டுகளைச் சுமத்திவிட்டு விலகினார்.அவர் விலகியதைத் தொடர்ந்து பொதுச்செயலாளர் பதவிக்கு அறிஞர் அண்ணா நியமிக்கப்பட்டார்.

அண்ணா பொதுச்செயலாளர் ஆனபிறகு 1942 ஆம் ஆண்டு சென்னை மாவட்ட நீதிக்கட்சிமாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் மாவட்ட கட்சித் தலைவராக டி.சண்முகமும், செயலாளராகஎன்.வி.நடராஜனும் தேர்வு செய்யப்பட்டனர். அப்போதிருந்து சென்னை மாவட்டத்தில் பிரச்சாரக்கூட்டங்களும், வட்டங்களில் கிளை அமைப்புப் பணியும் தீவிரமடைந்தன.

நீதிக்கட்சி என்றால் பெரிய சீமான்களின் கட்சி, மிராசுதார்களின் கட்சிஎன்ற தோற்றத்தை துடைத்தெறிய அண்ணா பல்வேறு திட்டங்களைத் தீட்டி சாமான்யர்களின் கவனத்தைஈர்க்கத் தொடங்கினார். நீதிக்கட்சி ஒழிந்துவிட்டது என்று நினைத்த காங்கிரஸ் தலைவர்களும்,பழமை விரும்பிகளும் அச்சம் கொண்டனர். நீதிக்கட்சிக்கு மக்கள் மத்தியிலும், இளைஞர்கள்மத்தியிலும் ஆதரவு பெருகியது. நீதிக்கட்சியை தங்களுடைய சுயநலத்துக்கு பயன்படுத்தியவர்கள்கட்சிக்குள்ளேயே அண்ணாவின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்டுவந்தனர்.



பெரியாருடன் அண்ணா 



அண்ணாவின் கட்சி வளர்ச்சித் திட்டங்களை ஆலோசிக்க 1944 ஆம் ஆண்டு சேலத்தில்நீதிக்கட்சி மாநாடு கூடியது. இந்த மாநாட்டில் அண்ணாவின் திட்டங்களுக்கு மாற்றுக் கருத்துகொண்டவர்களும் வந்தனர். சேலம் நகரம் அதுவரை அப்படி ஒரு கூட்டத்தை கண்டதில்லை எனும்படிமக்கள் திரண்டனர்.

அண்ணாவின் தீர்மானம் குறித்து 35 மணி நேரம் விவாதிக்கப்பட்டது. மிரட்டல்,உருட்டல், அச்சுறுத்தல் எல்லாவற்றையும் மீறி அண்ணாவின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.பொது மாநாட்டிலும் மக்களின் ஆதரவோடு நிறைவேறியது. எதிர்க்கருத்து கொண்டவர்களும் மக்கள்ஆதரவைக் கண்டு எதிர்த்து வாக்களிக்கவில்லை.

அண்ணா கொண்டுவந்த தீர்மானங்கள் இவைதான்…

1.  பிரிட்டிஷ் ஆட்சியில் தரப்பட்ட சர், ராவ்பகதூர், திவான் பகதூர், ராவ்சாகேப் போன்ற கவுரவ பட்டங்களைத் துறக்க வேண்டும்.

2.  வெள்ளையர் ஆட்சியில் வகிக்கும் பதவிகளில் இருந்து விலக வேண்டும்.

3.  பெயருக்கு பின்னால் உள்ள சாதிப் பெயர்களை விட்டொழிக்க வேண்டும்.

4.    தென்னிந்திய நல உரிமைச் சங்கம் (ஜஸ்டிஸ் கட்சி) என்ற பெயரை மாற்றி திராவிடர்கழகம் என்று பெயரிட வேண்டும்.

 

அண்ணாவின் இந்த தீர்மானங்கள் நாடு முழுவதும் கட்சிக்கு புதிய எழுச்சியைஉருவாக்கியது. வீழ்ச்சியடைந்த கட்சியின் வளர்ச்சி புத்தெழுச்சி பெற்றது. பட்டம் பதவிவிரும்பியவர்கள் அண்ணாவின் தீர்மானம் செல்லாது என்றும், ஜஸ்டிஸ் கட்சி சாகவில்லை என்றும்கூச்சல் எழுப்பிக் கொண்டிருந்தனர். ஆனால், அவர்களுடைய கூச்சல் எடுபடவில்லை.

சர்.பி.டி.ராஜன், சி.ஜி.நெட்டோ, சேலம் ரத்தினசாமி, திருச்சி திருமலைச்சாமி,டி.ஆர்.கோதண்டராம் முதலியார், பி.பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் சென்னை தேனாம்பேட்டசன் தியேட்டரில் கூடி, சேலம் மாநாட்டுக்கு போட்டியாக மாநாடு நடத்தினர்.

அந்த மாநாடு குழப்பத்தில் முடிந்தாலும், ஜஸ்டிஸ் கட்சியை தொடர்ந்துநடத்த முடிவு செய்து, தலைவர்களை நியமித்தனர். சண்டே அப்சர்வர், நகர தூதன் என்ற இருபத்திரிகைகளை தொடங்கினர்.

சண்டே அப்சர்வருக்கு பி.பாலசுப்பிரமணியம் செயல்பட்டார். இவர்தான் அண்ணாவைஅரசியல் பாதைக்கு திருப்பியவர் என்று கூறப்படுகிறது. அந்தச் சமயத்தில் நடைபெற்ற மக்கள்சபைத் தேர்தலில் காங்கிரஸை எதிர்த்து நீதிக்கட்சி சார்பில் பி.பாலசுப்பிரமணியம் போட்டியிட்டுதோற்றார்.

பி.பாலசுப்பிரமணியம் திராவிடர் கழகத்தை தாக்கி கடுமையான அவதூறுக் கட்டுரைகளைஎழுதுவார். திராவிடர் கழகம் சார்பில் அவற்றுக்கு டி.எம்.பார்த்தசாரதி பதில் எழுதுவார்.

பல்வேறு போட்டிகளுக்கு இடையே, திராவிடர் கழகம் சிற்றூர், பேரூர் எனபட்டி தொட்டிகள் அனைத்திலும் கிளைகளைப் பரப்பி வேரூன்றத் தொடங்கியது.

இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம், நாட்டின் அன்றாட நிகழ்ச்சிகளில்கட்சி அக்கறையுடன் கவனம் செலுத்தியது. தமிழ்ப் பற்றுடன், மக்கள் பிரச்சனைகளுக்காக குரல்கொடுத்தது. நல்ல தமிழில் நாட்டு மக்களை சந்தித்து பணிகளைச் செய்தது.

தொடக்கத்தில் கொட்டகைகளில் நடத்திய கூட்டங்கள் பின்னர் நெடுஞ்சாலைகளிலும்,கடற்கரை, பூங்காக்கள் உள்ளிட்ட திறந்தவெளிகளில் நடத்த வேண்டிய அளவுக்கு மக்கள் திரண்டனர்.

மாவட்டங்கள் தோறும் கட்சி அமைப்பு பலப்படுத்தப்பட்டது. கட்சியின் பிரமாண்டமான வளர்ச்சியைத் தொடர்ந்து, திருச்சியில் இரண்டு நாள் மாநில மாநாடு நடைபெற்றது.

இந்த மாநாட்டில்தான் திராவிடநாடு பிரிவினை குறித்து அறிஞர் அண்ணா, திராவிடநாடு ஏன் அவசியம் என்பது குறித்து மிக விளக்கமான உரையை நிகழ்த்தினார்.

அந்த உரையின் சுருக்கத்தை அறிவது அவசியமாக இருக்கும். ஏனெனில் இந்தத்தொடரில் அண்ணாவின் கருத்துக்களின் வீரியம் இன்றைய காலம் வரைக்கும் தொடர்வதை உணருவீர்கள்…




“இந்தியா என்பது ஒரு கண்டம். எனவே, அது பல நாடுகளாகப் பிரிக்கப்பட வேண்டும்.ஐரோப்பா கண்டத்தில் 32 நாடுகள் உள்ளன. (அன்றைய நிலையில்) ஐரோப்பா முழுமையும் ஒரே குடையின்கீழ் இருக்க வேண்டும் என்று யாரும் கூறவில்லை. இந்தியாவும் ஒரே குடையின் கீழ் இருக்கவேண்டுமென்ற அவசியமில்லை.

இந்தியாவில் தனித்தனி இனங்கள் உண்டு. அவற்றை மூன்று பெரும் பிரிவுகளாகபிரிக்கலாம். திராவிடர், முஸ்லீம், ஆரியர் என்று இந்த மூன்று இனங்களில் திராவிடரும்முஸ்லீமும் இன இயல்புகளில் அதிகம் வித்தியாசம் இல்லாதவர்கள். ஆரிய இன இயல்புகளுக்கும்மற்ற இரண்டு இன இயல்புகளுக்கும் துளியும் பொருத்தம் கிடையாது. பகைமை பெரிதும் உண்டு.இந்த தனித்தனி இன இயல்புகள் இருப்பதால் இனவாரியாக இந்தியா பிரிக்கப்பட்டால்தான் அந்தந்தஇனத்துக்கென இடமும் ஆட்சியும் கிடைக்கும். இல்லையென்றால், எந்த இனம் தந்திரத்தாலும்சூது சூழ்ச்சியாலும் தனது நலத்துக்காக பிறரை நசுக்கும் திறமையில் தேர்ந்து இருக்கிறதோஅந்த இனத்திற்கு மற்ற இனங்கள் அடிமைப்பட்டு வாழவேண்டிய நிலை வரும்

முரண்பாடுள்ள இயல்புகளைக் கொண்ட இனங்களை ஒன்றாக இணைத்துக் கட்டுவதால்கலவரமும், தொல்லைகளுமே வளர்கின்றன. எதிர்காலத்தில் தொல்லைகள் வளர்ந்து இந்தியா ரத்தக்காடாகாமல்இருக்க வேண்டுமானால் இப்போதே சமரசமாக இனவாரியாக இந்தியாவைப் பிரிக்க வேண்டும்.

இன வாரியாக நாடு பிரிக்கப்படுவது புதியது இல்லை. ஏற்கெனவே இந்தியாவில்பிரிட்டிஷ் இந்தியா, சுதேச இந்தியா, பிரெஞ்சு இந்தியா, டச்சு இந்தியா என பல இந்தியாக்கள்இருக்கின்றன. அதுபோல முஸ்லிம் இந்தியா, திராவிட இந்தியா, ஆரிய இந்தியா என்று மூன்றுதனித்தனி வட்டாரங்கள் தேவை எனக் கேட்பது தவறல்ல.

இந்தியாவில் சுதேச சமஸ்தானங்கள் மட்டும் 574 இருந்தன. அசோகர், கனிஷ்கர்,ஹர்ஷர், சமுத்திர குப்தர், அக்பர் போன்ற மன்னாதி மன்னர்கள் காலத்தில்கூட இந்தியா ஒரேநாடாக இருந்ததில்லை. அப்போதும் திராவிடநாடு எனத்தகும் தனி நாடு இருந்தது.

இந்தியா ஒரே நாடாக இருக்கிறது என்று கூறித்தான் ஆரியர்கள் இமயம் முதல்குமரிவரை இந்தியாவை தங்களுடைய வேட்டைக்காடாக்கி உள்ளனர். அரசியலில் அதிகாரிகளாகவும்,கல்வியில் ஆசான்களாகவும், மதத்தில் குருமார்களாகவும், சமுதாயத்தில் பூதேவர்களாகவும்,பொருளாதாரத்தில் பாடுபடாமல் உல்லாச வாழ்வு வாழக் கூடியவர்களாகவும் இருக்கிறார்கள்.மற்ற இனத்தவர்கள் அவர்களுக்கு தாசர்களாகவும், பாட்டாளிகளாய் உழைத்து உருத்தெரியாமல்சிதைபவர்களாகவும் வாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தியா இனவாரியாக பிரிய வேண்டுமென்று இந்தியாவை இனப்போர்க்களமாக காணக்கூடாதுஎன்ற நல்ல நோக்கம் கொண்டவர்கள் நினைக்கிறார்கள். இதை ஏற்க மறுப்பவர்கள் சரித்திரத்தைமறந்தவர்களாகத்தான் இருக்க வேண்டும்.

வடக்கே பாகிஸ்தான் ஏற்பட்டுவிட்டது. அவர்கள் தீர்மானம் போடுவதற்கு முன்பேநாம் திராவிட நாடு தீர்மானம் நிறைவேற்றிவிட்டோம். பாகிஸ்தான் தேவை எனக் கூறப்பட்டதற்கானகாரணங்களை விட, திராவிட தனி அரசு தேவை என்பதற்கு உண்டான காரணங்கள் அதிகமாக உள்ளன”

மாநாட்டில் அண்ணாவின் இந்த முழக்கத்தை 50 ஆயிரம் மக்கள் கேட்டார்கள்.

திராவிட திருநாட்டிலே ஆரிய அரசா? அதற்கு பார்ப்பன முரசா? என்று கூட்டத்தினர்முழக்கம் எழுப்பும் வகையில் அண்ணாவின் விளக்கம் எளிமையாக அமைந்திருந்தது.

இத்தனைக்கும் திராவிடர் கழகம் தேர்தல் அரசியலில் ஈடுபடுவதில்லை என்றுமுடிவெடுத்திருந்தது. அந்த சூழலிலும் மக்கள் ஆதரவு பெருகியதற்கு இன உணர்வுதான் காரணமாகஅமைந்தது.

திராவிடர் கழகம் இளைஞர்களையும், மாணவர்களையும், பெண்களையும் கவரும்வகையில் தனது வேலைத்திட்டத்தை வகுத்திருந்தது. மாணவர்கள் மத்தியில் மட்டுமின்றி கல்வியாளர்கள்மத்தியிலும் அண்ணாவுக்கு பெருமதிப்பு உருவாகியது.

புதிய புதிய எழுத்தாளர்களும், கவிஞர்களும் திராவிடர் கழகத்தில் பெருகினார்கள்.நல்ல தமிழில் பேசக்கூடியவர்கள் நாடு முழுவதும் கொள்கை முழக்கமிட்டனர்.

மாணவர் அமைப்பு, மகளிர் அமைப்பு, இளைஞர் அமைப்பு, எழுத்தாளர் அமைப்புஎன பல்வேறு அமைப்புகள் உருவாக்கப்பட்டன.

கருப்புச்சட்டை பிரிவும் தொடங்கப்பட்டது. ஒருகட்டத்தில் கருஞ்சட்டைப்படைமாநாட்டுக்கு காங்கிரஸ் அரசாங்கம் தடை விதிக்கும் அளவுக்குச் சென்றது. அதையும் பெரியார்உடைத்தெறிந்தார்.

1939 ஆம் ஆண்டு முதல் 1945 ஆம் ஆண்டு வரை இரண்டாம் உலகப்போர் நடைபெற்றதுஎன்றால், 1937 ஆம் ஆண்டு முதல் 1946 ஆம் ஆண்டு வரையில் பெரியாரின் பிடியில் வந்த நீதிக்கட்சிசென்னை மாகாணத்தில் புதிய போராட்டத்துக்கு அடித்தளம் அமைத்தது.

1937 ஆம் ஆண்டு நடைபெற்ற சுயாட்சித் தேர்தலுக்கு பிறகு இரண்டாம் உலகப்போர்தொடங்கியதால் அந்த அரசாங்கமே தொடர்ந்து நீடித்தது. போர் முடிந்த நிலையில் 1946 ஆம்ஆண்டு சென்னை மாகாண சட்டமன்றத்துக்கு தேர்தல் நடைபெற்றது.

அந்தத் தேர்தலில் திராவிடர் கழகம் போட்டியிடவில்லை. காங்கிரஸ் கட்சியும்,முஸ்லிம் லீக்கும், 1934 முதல் 1942 வரை தடை செய்யப்பட்டிருந்த இந்திய கம்யூனிஸ்ட்கட்சியும் போட்டியிட்டன.

(1946 தேர்தல் முடிவும், இந்திய விடுதலை அறிவிப்பும் குறித்து திங்கள்கிழமை பார்க்கலாம்)

-ஆதனூர் சோழன்

 முந்தைய பகுதிகள் :

16. எல்லா மக்களுக்கும் ஒரே உரிமை என்ற நீதிக்கட்சி!

15. முதல் இந்தி எதிர்ப்பு போராட்டம் - பெரியாரின் பிடியில் நீதிக்கட்சி!



சார்ந்த செய்திகள்