Skip to main content

சூப்பர் மூன் பற்றி தெரியுமா?

Published on 02/12/2017 | Edited on 02/12/2017
சூப்பர் மூன் பற்றி தெரியுமா?

நிலா என்றுமே விசித்திரமான ஒன்றுதான். அதைப் பார்க்கும் போதெல்லாம் அதன் வசீகரிக்கும் அழகால் நம்மை ஈர்த்துவிடும். கருநீல வானில் முழு நிலவை ரசித்திருப்பதே அலாதி இன்பம்தான். அதே நிலவு உங்களுக்கு மிக நெருக்கமாக வருவது இனிப்பான இன்பம்தானே? இன்பத்திற்கு தயாராகுங்கள்... ஆம், நாளை (டிசம்பர் 3) இரவு வானில் இந்த ஆண்டின் முதலும் கடைசியுமான சூப்பர் மூன் வரவிருக்கிறது.



சூப்பர் மூன் என்றால்..

பூமியின் ஒரே துணைக்கோளான நிலா அதன் சுற்றுவட்டப்பாதையில் பூமியைச் சுற்றி வருகிறது. இந்த சுற்றுவட்டப்பாதை இயல்பாகவே நீள்வட்டம் (Ellipse) போல் இருக்கும். பூமியிலிருந்து உச்சபட்ச தொலைவில் உள்ள நிலவின் நீள்வட்டப்பாதைப் புள்ளி அபோஜி (Apogee) எனப்படும். பூமிக்கு மிக நெருக்கமாக இருக்கும் நீள்வட்டப்பாதைப் புள்ளி பெரிஜி (Perigee) எனப்படும். அபோஜி பூமியிலிருந்து சராசரியாக 4 லட்சத்து 5 ஆயிரத்து 500 கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கும். பெரிஜி பூமியிலிருந்து சராசரியாக 3 லட்சத்து 63 ஆயிரத்து 300 கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கும். பூமியை தனது சுற்றுவட்டப்பாதையில் 27 நாட்களுக்கு ஒருமுறை சுற்றிவரும் நிலா, அதன் பெரிஜி புள்ளியில் வந்தடையும்போது பூமியிலிருந்து பார்ப்பவருக்கு மிக அருகிலும், பெரியதாகவும் தெரியும். இதையே சூப்பர் மூன் என வானவியலாளர்கள் அழைக்கின்றனர்.

நிலவில் என்ன மாற்றம் இருக்கும்?

பூமியிலிருந்து பார்க்கும் போது சாதாரண நாட்களை விட 14% பெரியதாகவும், 40% பிரகாசமாகவும் சூப்பர் மூன் தெரியும். ஆனால், சாதாரண கண்களால் மிகப்பெரிய மாற்றங்களைக் காண முடியாது. டெலிஃபோட்டோ லென்சுகள், பைனாக்குலர்கள் மற்றும் சக்திவாய்ந்த தொலைநோக்கிகள் மூலமாக பார்க்கும்போது தெளிவான மாற்றங்களை உணரமுடியும்.

இதனால் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதா?

பொதுவாக பவுர்ணமி நாட்களில் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும். ஆனால், சூப்பர் மூன் நாளில் மிகப்பெரிய பாதிப்புகள் இருக்காது. நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு, பருவநிலை மாற்றம் மற்றும் சுனாமி போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் இல்லை என்பதால் அச்சம் கொள்ளத் தேவையில்லை.



டிசம்பர் 3-க்குப் பிறகு சூப்பர் மூன் எப்போ வரும்?

வரும் 2018ஆம் ஆண்டு ஜனவரி 2 மற்றும் 31 தேதிகளில் மீண்டும் சூப்பர் மூனை நாம் பார்க்க முடியும். இதில் 31ஆம் தேதி வரும் சூப்பர் மூனுக்கு ப்ளூ மூன் (Blue Moon) என்ற இன்னொரு பெயரும் உண்டு. அந்த மாதத்தில் இரண்டாவது முழுநிலவு அது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு வேளை இந்த சூப்பர் மூன் வரும்போது பார்க்க வாய்ப்பிள்ளாதவர்கள் ஆன்லைன் மூலமாகவோ, நாசாவின் இணையதளத்திலோ பார்க்கலாம். 

- ச.ப.மதிவாணன்

சார்ந்த செய்திகள்