Skip to main content

பெண்கள் சக்தியை புறக்கணிக்கிறதா திமுக?

Published on 22/01/2018 | Edited on 23/01/2018
பெண்கள் சக்தியை புறக்கணிக்கிறதா திமுக? 

திராவிடர் கழகத்திலிருந்து திமுக, அதிமுக காலம் வரை இந்தக் கட்சிகள் பெண்களின் வாக்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தன. ஆனால், இப்போது அதிமுகவில் பெண்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் திமுகவில் கொடுக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு மகளிர் அணியினர் மத்தியில் எழுந்துள்ளது.

அதிமுகவில் எந்த நிகழ்சி என்றாலும் பெண்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அவர்கள் இயல்பாக கூட்டத்திற்கு வருபவர்கள் அல்ல. பணம் செலவழித்து அழைத்து வரப்படுபவர்கள்தான். ஆனால், அவர்களை அழைத்து வருபவர்கள் அதிமுகவின் மகளிர் அணி நிர்வாகிகள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அடுத்தபடியாக திமுகவில்தான் விவரமான மகளிர் அணி நிர்வாகிகள் அதிகமாக இருந்திருக்கிறார்கள். ஆனால், சமீப காலமாக மகளிர் அணியை பலப்படுத்துவதற்கு திமுக தலைமை முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்ற கருத்து பரவி வருகிறது.

இத்தனைக்கும் திமுக தலைவரின் மகளும், செயல்தலைவரின் தங்கையுமான கனிமொழிதான் மகளிர் அணிக்கு பொறுப்பாளராக இருக்கிறார். பிறகு ஏன் மகளிர் அணியை பலப்படுத்துவதில் என்ன தயக்கம்?

ஒரு இயக்கத்தில் பல்வேறு அணிப் பிரிவுகள் இருக்கின்றன. அத்தனை அணிகளும் இயக்கத்தைப் பலப்படுத்தும் நோக்கத்தில் செயல்பட வேண்டும். இல்லையென்றால் அவை பிணிகளாக மாறிவிடும் என்று திமுக தலைவர் கலைஞர் ஒருமுறை கூறியிருக்கிறார்.

மாணவர்கள் அமைப்பிலிருந்து உருவானதுதான் திமுக. மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் ஆதரவில்தான் திமுக ஆட்சியையே பிடித்தது. ஆனால், பின்னர் வந்த காலகட்டத்தில் மாணவர் அணியைப் பலப்படுத்துவதிலும், இளைஞர் அணியை பலப்படுத்துவதிலும் திமுக தலைமை சுணக்கம் காட்டியது.



அதன் விளைவாக கட்சிக்கு ஏற்பட்ட பலவீனத்தை சரிக்கட்டவே, இளைஞர் அணையை உருவாக்கினார் கலைஞர். அந்த அமைப்பை உருவாக்கும்போது இளைஞர் அணியில் 40 வயதுக்கு உட்பட்டவர்கள்தான் உறுப்பினர்களாக இருக்க முடியும் என்றார். ஆனால், 60 வயதுவரை அந்த அமைப்பின் செயலாளராக இருந்தார் ஸ்டாலின்.

மாணவர் அமைப்பின் செயலாளராக 60 வயது வரை இள புகழேந்தி இருந்தார். இவர்கள் எப்படி காலத்திற்கேற்றபடி இளைஞர்களிடமும், மாணவர்களிடமும் இணக்கமாக இருக்க முடியும் என்று விமர்சனங்கள் எழுந்தன.

இப்போது அந்த அமைப்புகளின் பொறுப்பாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். மகளிர் அணியின் தலைவியாக இருந்த சற்குணபாண்டியன், மாநில பொதுச்செயலாளர் ஆன நிலையில் அவருடைய பொறுப்பு திண்டுக்கல் நூர்ஜஹான் பேகத்துக்கு வழங்கப்பட்டது. ஆனாலும், கடலூர் மகளிர் மாநாட்டுப் பேரணிக்கு சற்குணபாண்டியன்தான் தலைமை ஏற்றுச் சென்றார். அந்த அளவுக்கு அவருக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது. ஆனாலும் மகளிர் அணி தீவிரமாக செயல்பட வேண்டும் என்று விரும்பிய கலைஞர் 2015ல் கனிமொழிக்கு மகலிர் அணிப் பொறுப்பை வழங்க முடிவு செய்தார். அதற்கு பிறகு அந்த அணிக்கு புதிய முகம் கிடைத்தது.

மாவட்ட அளவில் பல்வேறு மாவட்டங்களில் படித்த பெண்கள் பலர் மகளிர் அணிச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அவர்களுக்குத் தனிப்பொறுப்பு கொடுக்கப்பட்டு, மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் பொறுப்பாளர்களை நியமிக்கும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.

திமுக குடும்பங்களைச் சேர்ந்த, அல்லது திமுகவில் ஆர்வமாக செயல்படக்கூடிய குடும்பங்களில் படித்த பெண்களை தேர்வுசெய்து நிர்வாகிகளாக நியமிக்க வேண்டும். அப்படி நியமிக்கப்படும் நிர்வாகிகளுடன் மாதம் ஒருமுறை ஆலோசனைக் கூட்டங்களை நடத்தவும், கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் செய்யவும், பேச்சாற்றலை வளர்க்கும் வகையிலும் திட்டமிட்டு செயல்படச்  செய்ய வேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ள நிலையில் கட்சியிலும் பெண்களுக்கான பொறுப்புகளை சதவீத அடிப்படையில் உயர்த்த வேண்டும். இதுதான் திமுகவின் தோற்றத்தை காலத்துக்கு ஏற்றபடி மாற்றி அமைக்க உதவும்.

ஒரு சில மாவட்டச் செயலாளர்களே மகளிர் அணிச் செயலாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக கூறப்படுகிறது. கட்சி நிகழ்ச்சிகளில் பெண்களை அதிக அளவில் அழைத்துவந்து பங்கேற்கச் செய்வதால், அவர்களுக்கு திமுகவைப் பற்றிய அறிவும் புரிதலும் அதிகரிக்கும் என்று சில மகளிர் அணி நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

எப்படியானாலும், ஒரு இயக்கம் வலுவடைய மகளிர், இளைஞர், மாணவர் அமைப்புகள் மிகவும் வலுவாக இருக்க வேண்டும். இவர்கள்தான் கட்சிக்காக உழைக்கக்கூடியவர்கள் என்பதை தலைமை புரிந்துகொள்ள வேண்டும்.

அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்றபடி, இந்த அமைப்புகள் செயல்பட கட்சித்தலைமை உதவி செய்ய வேண்டும். மாவட்டச்  செயலாளர்களுடன் அலோசனை நடத்தவுள்ள திமுக செயல்தலைவர் மகளிர் அணி நிர்வாகிகளையும் சந்திக்க வேண்டும் என்று அவர்கள் வேண்டுகோள் விடுத்திருக்கின்ஹனர்.

மாவட்ட வாரியான சந்திப்புகளிலேயே மகளிர் அணிச் செயலாளர்களையும் வரச்செய்து சந்தித்தால் அவர்களுக்கும் ஊக்கமளிப்பதாக அமையும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

திமுக செயல்தலைவர் ஸ்டாலின் அவர்களுடைய கோரிக்கையையும் கவனத்தில் கொண்டால் அவருடைய சந்திப்பில் உபயோகமான சில ஆலோசனைகள் கிடைக்கலாம்.

-சோவன்னா

சார்ந்த செய்திகள்