Skip to main content

சிறைக்கைதிகள் தயாரிக்கும் உணவுக்கு கிராக்கி!

Published on 06/11/2017 | Edited on 06/11/2017

சிறைக்கைதிகள் தயாரிக்கும் உணவுக்கு கிராக்கி!

சமீப காலமாக ஒரு மாநில அரசு மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருக்குமானால், சட்டென நினைவிற்கு வருவது கேரளாதான். அங்கு மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு நடவடிக்கைகளும் கேட்போரைக் கொண்டாடச் செய்கின்றன. அந்த வகையில், சமீபத்திய ருசிகரமான செய்தி ஒன்று மீண்டும் கேரளாவைப் பற்றி பேச வைத்திருக்கிறது.


அது கேரள சிறைக்கைதிகளால் தயாரிக்கப்படும் பிரியாணி பற்றியதுதான். ‘ஃப்ரீடம் ஃபுட்’ என்ற பெயரில் கேரளாவின் சிறைகளில் தண்டனை பெற்றுவரும் கைதிகளால் தயாரிக்கப்படும் பிரியாணி மற்றும் சப்பாத்தி போன்ற உணவுகள் கேரள மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுவருகின்றன. சிறையில் தயாரிக்கப்பட்டு வெளியில் உள்ள உணவகங்களில் இந்த உணவுகள் விற்பனை செய்யப்படுகின்றன. சிறைக்கைதிகளால் தயாரிக்கப்படும் இந்த பிரியாணிக்கு பொதுமக்களிடத்தில் கிராக்கி ஏற்பட்டிருப்பதற்கு அதனால் கிடைத்திருக்கும் வருவாயே சான்று.

கடந்த ஒரு ஆண்டில் கேரள சிறைக்கைதிகளால் அரசுக்கு கிடைத்த வருவாய் மட்டும் ரூ.3 கோடி. இதில் முக்கியப்பங்கு வகித்தது கண்ணூர் மாவட்டத்தில் உள்ள சிறை. இந்த சிறையில்தான் 2012ஆம் ஆண்டு முதன்முதலாக சிறைக்கைதிகளை வைத்து உணவு தயாரிக்கும் வேலைகள் தொடங்கப்பட்டன. இது தொடங்கிய ஐந்து ஆண்டுகளில் ரூ.8.5 கோடி வரை வருவாய் ஈட்டிக் கொடுத்துள்ளனர் சிறைக்கைதிகள்.


தளசேரி மற்றும் தளபரம்பா உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் உணவகங்களைத் திறந்துள்ள நிலையில், இனி கண்ணூர் சிறையின் மாதவருவாய் மட்டும் ரூ.1 லட்சத்தைத் தொடும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது கேரள அரசு. தளசேரியில் கடந்த மாதம் மட்டும் ரூ.75,000-க்கு பிரியாணி விற்றுத்தீர்ந்ததாக கணக்கு காட்டப்படுகிறது. இதில் கூடுதல் சுவாரஸ்சியம் சேர்க்கும் விஷயமே உணவுப் பொருட்களின் விலைதான். கடந்த ஐந்து ஆண்டுகளில் சப்பாத்தியின் விலை ரூ.2ல் இருந்து உயர்த்தப்படவேயில்லை. பிரியாணி, சில்லி சிக்கன் மற்றும் சிக்கன் கபாப் ஆகியவற்றின் விலை ப்ளேட் ஒன்றிற்கு ரூ.60 மட்டுமே.

விய்யூர் பகுதியில் உள்ள சிறையில் தயாரிக்கப்படும் உணவுகள், மாதம் ஒன்றுக்கு ரூ.1.5 லட்சம் வருவாயைத் தருகின்றன. இங்கு சப்பாத்தி, பிரியாணி மட்டுமல்லாது ஐந்து விதமான கேக் வகைகளும் தயாரிக்கப்படுகின்றன. பூஜாப்புரா பகுதியில் உள்ள சிறையில் கடந்த ஆண்டில் மட்டும் ரூ.1.10 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. வெறும் ஆறு மாதங்களில் இந்த சிறையின் சார்பில் ரூ.4 லட்சம் ஈட்டியிருப்பது சாதனைப் பட்டியலிலும் சேர்ந்துள்ளது. குறைந்த விலை என்றாலும், அதிக வருவாயை ஈட்டித்தந்திருப்பதுதான் கேரள சிறைக்கைதிகளின் சமையலுக்குக் கிடைத்த வெற்றி.


இந்த சமையல் வேலைகளில் ஈடுபடும் சிறைக்கைதிகளுக்கு நாளொன்றுக்கு ரூ.150 முதல் ரூ.200 வரை ஊதியமாக தரப்படுகிறது. நாளொன்றுக்கு 62 பேர் இரண்டு வேளைகளில் சமையல் வேலைகளைக் கவனித்துக் கொள்கிறார்கள். இது மட்டுமல்லாமல் உணவு பரிமாறும் வேலைகளுக்காக மட்டும் சாதாரண பொதுமக்களை நியமித்துள்ளனர்.

சமீபத்தில் திஹார் சிறையில் தண்டனை பெற்று வரும் சிறைக்கைதிகளுக்கு, பட்டயத்துடன் கூடிய ஃபேஷன் டெக்னாலஜி பயிற்சியை அளித்தது சிறை நிர்வாகம். சிறையில் இருக்கும்வரை அவர்களை அவர்களாக மீட்டெடுப்பதற்கு இதுமாதிரியான பல வழிகள் உருவாக்கித் தரப்படுவது பாராட்டிற்குரியது. சிறையில் இருந்து மீண்டு வருபவர்களுக்கு வெளியில் இருப்பது இரண்டாம் உலகம். அதில் அவர்கள் சந்திக்கும் பாகுபாடுகளுக்கு எல்லையே கிடையாது. அப்படி வெளிவருவபர்களிடம் இருந்து இதே சுவையையும், தரத்தையும் மக்கள் அப்போதும் எதிர்பார்த்து, ஏற்றுக்கொள்ள வேண்டும்.

- ச.ப.மதிவாணன்   

சார்ந்த செய்திகள்