Skip to main content

பெரியார் சிலையைத் தொட்டுப் பார்க்கட்டும். தி.மு.கழக தோழர்கள் தாங்கள் யார் என்பதைக் காட்டும் தருணம் வரும்! ஸ்டாலின்

Published on 07/03/2018 | Edited on 07/03/2018

 

இனி கற்பனையிலும் அல்லது கனவிலும் கூட பெரியார் சிலைகளை அகற்றுவோம் என்கிற எண்ணம் எவருக்கும் ஏற்படாது. இன்னும் எவரேனும் இதே எண்ணத்துடன் மிச்சமிருந்தால், பெரியார் சிலையைத் தொட்டுப் பார்க்கட்டும். திராவிட இலட்சியங்களைக் காக்கும் பெரியாரின் பேரப்பிள்ளைகளான தி.மு.கழக தோழர்கள்  தாங்கள் யார் என்பதைக் காட்டும் தருணம் வரும் என கூறியுள்ளார் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்.

இதுதொடர்பாக அவர் கட்சியினருக்கு எழுதியுள்ள கடிதத்தில், 

பலநூறு ஆண்டுகளாக அடக்கி, ஒடுக்கி, ஓரங்கட்டப்பட்ட மக்களுக்கு உண்மையான சமூக விடுதலையைப்  பெற்றுத்தந்த தந்தை பெரியார் அவர்கள் மறைந்து 45 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. ஆனால், இனப் பகைவர்களுக்கு இன்றைக்கும்கூட அவர் பெயரைக் கேட்டால் அடிவயிறு கலங்குகிறது. நெஞ்சுக்கூட்டில் பயம் எனும் பந்து உருள்கிறது. அதனால்தான் அரண்மனையில் இருந்து ஆட்சி செய்வோரின் அருகில் இருக்கிறோம் என்கிற அகந்தையில், அரசியலின் கழிசடைகள் ஒரு சிலர் அய்யா பெரியாரின் சிலைகளை அகற்றப்போவதாக வக்கிரமாகக் கொக்கரித்து, மானமுள்ள தமிழ்ச் சமுதாயத்திடம் சகட்டுமேனிக்கு வாங்கிக் கட்டிக்கொண்டு, வாய்ப்பொத்தி மூலையில் முடங்கும் நிலைமைக்கு ஆளாகியிருக்கிறார்கள். 

எங்கிருந்து இவர்களுக்கு இந்தத் திமிர் எட்டிப்பார்த்தது? திரிபுரா மாநிலத்தில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக அசைக்க முடியாத ஆட்சி புரிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசை, பிரிவினைவாத சக்திகளுடன் கைகோர்த்துக் கொண்டு ஏராளமான பணம் செலவு செய்து,  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் குழப்பத்தைப் புகுத்தி மிகச்சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, பா.ஜ.க.வின் ஆட்சி அமைந்தவுடன், ஜனநாயக நெறிமுறைகள் புல்டோசர்களால் இடித்துத் தள்ளப்பட்டு, மதவெறியாளர்களும், பயங்கரவாதிகளும் ஆட்டம் போடத் தொடங்கியுள்ளனர். திரிபுராவில் நிறுவப்பட்டிருந்த, மாபெரும் புரட்சியாளர் மார்க்ஸ் சித்தாந்தத்திற்குச் செயல்வடிவம் தந்து, பொதுவுடைமைப் பூமியைப் படைத்த புத்துலகச் சிற்பி லெனின் அவர்களுடைய சிலைகளை, புதிய ஆட்சியாளர்கள் தகர்த்தெறியும் காட்சிகள்,  இதயத்தை இடிதாக்குவது போல அமைந்துள்ளன. திரிபுராவில் புதிய அரசின் துணையுடன் புரட்சியாளர் லெனின் சிலைகள் சேதப்படுத்தப்பட்டதற்கு தி.மு.கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்து, இதற்குக் காரணமானவர்கள் மீது சட்டரீதியான கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். 

திரிபுராவில் பேர அரசியல் நடத்தி ஆட்சியைப் பிடித்தது போல, தமிழ்நாட்டிலும் பினாமிகள் மூலம் மதவெறி ஆட்சியைக் கொண்டு வந்துவிடலாம் என மனப்பால் குடிப்பவர்களின் சிந்தனைக் கறையான்கள், எப்படியும் எப்பக்கத்திலும் உள்ளே நுழைய முடியாதபடி இன்றைக்கும் எஃகு கோட்டையாகத் திகழ்கிறார் தந்தை பெரியார். அவர் முன்னிறுத்திய திராவிடக் கொள்கைகளால் அனைத்துத்தரப்பு மக்களும் பயன்பெற்று, பண்படுத்தப்பட்டுள்ள தமிழக மண்ணில் மதவெறி சக்திகளுக்கு இடமில்லாமல் போனதால், திராவிடக் கொள்கைகளை நேரடியாக வீழ்த்த முடியாமல், எவரெவர் தயவையோ நாடி, திராவிட இயக்கத்தைச் சிதைத்து விடலாம் என நினைக்கிறார்கள். அதற்கு இன்றுவரை இடமில்லை - இனியும் வாய்ப்பில்லை என்பதால்தான், உச்சந்தலைக்குப் பித்தம் ஏறியதுபோல, பெரியார் சிலையை அகற்றுவதாகச் சொல்லி, ஆப்பு அசைத்த மந்தியாக அவதிப்படுகிறார்கள். 

தந்தை பெரியாருக்காக தமிழகத்தில் உள்ள அனைத்து அமைப்புகளும் ஒன்று திரண்டு பேருருக்கொண்டு நிற்பதைக் காணும்போது, அந்தப் பகுத்தறிவுச் சூரியனின் மகத்தான ஆற்றல் அவர் மறைவுக்குப் பிறகும் மாணிக்கச்சுடராய் வெளிச்சம் பாய்ச்சுவதை உணர முடிகிறது. திராவிடத்தையும், திராவிட உணர்வுகளையும் அழிக்க நினைப்பவர்களுக்கு, தன் மறைவுக்குப் பிறகும் சிம்மசொப்பனமாகப் பெரியார் இருக்கிறார் என்பதை இந்த மண் மீண்டும் மீண்டும் மறக்கமுடியாத பாடமாக உணர்த்திக் கொண்டிருக்கிறது. 

பொட்டுப் பூச்சிகளாய், புன்மைத் தேரைகளாய் அடக்கப்பட்டு அலைக்கழிக்கப்பட்டு உதாசீனப்படுத்தப்பட்டு ஒடுக்கப்பட்டு உரிமைகள் பறிக்கப்பட்டிருந்த திராவிட இன மக்களின் உரிமைக்கும், விடுதலைக்கும் தோன்றிய இயக்கமே திராவிட இயக்கம். உலகத்தின் பல நாடுகளிலும் அடிமைப்படுத்தப்பட்ட மக்களை மீட்டெடுக்கப் பலர் போராடியுள்ளனர். கிரேக்கத்தின் ஸ்பார்டகஸ் தொடங்கி, அமெரிக்காவின் மார்ட்டின் லூதர் கிங் வரை மகத்தான போராளிகளும், புரட்சியாளர்களும் அடிமைத்தளைகளை அறுத்தெறிவதற்காகக் கடும்  போராட்டங்களை நடத்திய குருதி தோய்ந்த தியாக வரலாறுகளை ஏடுகளில் காண முடியும். அந்தவகையில், திராவிட இன மக்களின் விடுதலைக்காக உதித்தெழுந்த பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் வருகைக்குப் பிறகு, திராவிட இயக்கத்தின் எழுச்சியும் ஏற்றமும் உலக வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தது. 

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சாதியின் பெயராலும், பிறப்பின் அடிப்படையிலும் பெரும்பான்மை மக்களை அடிமைப்படுத்தி வைத்திருந்த வைதீகக் கோட்டைகளை புதுயுகச் சிந்தனை வெடிவைத்துத் தகர்த்துத் தரைமட்டமாக்கியவர் தந்தை பெரியார். அரிமாவென அவர் ஆர்த்தெழுந்தபோது, மக்களை அடிமைப்படுத்திய நரிகள் திசைதெரியாமல் தெறித்து ஓடின. போராட்டக் களங்கள் அவரது வாழ்வின் ஒரு பகுதியானது. சிறைவாசம் அவருக்கு இலவம்பஞ்சு மெத்தையானது. மக்கள் நலனுக்கு எதிரான சட்டங்களை எரித்து கைதானபோதும், நீதிமன்றங்களில் அவர் வாய்தா கேட்கவில்லை. கொடுக்கின்ற தண்டனையை விரைவாகக் கொடுக்கும் வகையில் விசாரணையை வேகமாக நிறைவு செய்து, சிறைக்கு அனுப்புங்கள் என மனத்திடத்தோடு முழங்கியவர். 

குடுகுடு கிழவன் என அவரை நினைத்தவர்களும் அதிரும் வகையில், சமூகநீதிக் கொள்கையை நிலைநிறுத்துவதற்காக பெரியார் நடத்திய போராட்டங்களால் அரசாங்கங்கள் கிடுகிடுத்ததன் விளைவாக, இந்திய அரசியல் சட்டத்தில் முதல் திருத்தம் செய்யப்பட்டு இடஒதுக்கீட்டுக்கான வகுப்புவாரி உரிமை நிலைநாட்டப்பட்டது. பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட விளிம்புநிலை மக்களுக்கும் கல்வி, வேலைவாய்ப்பு, சம உரிமை, சமநீதி என்பதற்காக அவர் நடத்திய போராட்டங்கள் அனைத்தும் சட்டங்களாகவும், அரசாணைகளாகவும் மாறின. தேர்தல் அரசியலைப் புறக்கணித்தவர் தந்தை பெரியார். ஆனால், தேர்தல் களத்தில் நின்றவர்கள் எவராலும் அவரைப் புறக்கணிக்க முடியவில்லை என்பதே வரலாறு. 

கருத்தில் – சிந்தனையில் - கொள்கையில் தந்தையின் தனயனாகச் செயலாற்றிய பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையில் உருவான திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபோது, கழக ஆட்சியே பெரியாருக்கு காணிக்கை ஆக்கப்பட்டது. வெறும் வார்த்தைகளால் காணிக்கையாக்கப்படவில்லை. ஆதிக்க சமுதாயத்தின் அடையாளங்களுடன் கூடிய சடங்குகளற்ற சுயமரியாதைத் திருமணமுறைக்கு சட்ட அங்கீகாரம் அளித்து நிறைவேற்றி, அதனைப் பெரியாருக்குக் காணிக்கை ஆக்கியவர் பேரறிஞர் அண்ணா. அதுபோல, இந்தி ஆதிக்கத்திற்கு இன்பத் தமிழ் மண்ணில் இடமில்லை எனத் தாய்மொழி காக்கும் வேலியாக இருமொழிக் கொள்கையை நிறைவேற்றியவர் பெரியாரின் பேரன்புக்குரிய அண்ணா. 

அந்த அண்ணாவின் வழியில் ஆட்சியைத் தொடர்ந்த தலைவர் கலைஞர் அவர்கள், தந்தை பெரியாரின் ஈரோடு குருகுலத்தில் பயின்ற கொள்கை மாணவரல்லவோ! பெரியாரின் வேகமிகு செயல்பாடுகளைக் கசடறக் கற்றுத் தேர்ந்த தலைவர் கலைஞர் அவர்கள், சாதியின் பெயரால் கடவுளின் கருவறைக்குள் நுழைய முடியாமல் தடுக்கப்படும் ஆயிரமாயிரம் ஆண்டுகால அநீதியைத் தகர்த்தெறியும் வகையில், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தை நிறைவேற்றி, பெரியாரின் நெஞ்சில் இருந்த முள்ளை அகற்றும் இலட்சியப்பணியை மேற்கொண்டார். 

அடிமைத்தளைகளை அறுத்தெறிவதற்காக உலகில் தோன்றிய தியாகத் தலைவர்கள் பலரும் தங்களின் கொள்கைகள் நிறைவேறுவதை தங்கள் வாழ்நாளில் காண முடியாதபடி காலம் அவர்களைப் பறித்துக்கொண்டது. அவர்களின் கொள்கைகள் நிறைவேற தலைமுறை தலைமுறையாகப் போராட்டங்கள் நடைபெற வேண்டி இருந்தது. ஆனால், திராவிட இயக்கத்தின் மாபெரும் தலைவரான தந்தை பெரியார் அவர்கள் தனது 95 ஆண்டு வாழ்வில், தன் கண்முன்பாகவே தனது கொள்கைகளும், இலட்சியங்களும் நிறைவேறுவதைக் காண முடிந்த சாதனையும் முழுமையானது. 

இந்தச் சாதனைகள் ஒவ்வொன்றும் சரித்திர ஆவணங்கள். வருணாசிரம - வேதாந்த முறையிலான சாதிரீதியான ஒடுக்குமுறைகளை உடைத்து நொறுக்கிய வரலாற்றுப் பெருமிதங்கள். இன்று தமிழ்நாட்டில் ஏறத்தாழ ஒவ்வொரு குடும்பத்திலும் பொறியாளர்கள் இருக்கிறார்கள். சொந்தபந்தங்களில் ஓரிருவர் மருத்துவர்களாக இருக்கிறார்கள். மற்ற பல தொழில்படிப்புகளைப் பயின்று அரசாங்கத்திலோ, தனியார் நிறுவனங்களிலோ, அயல்நாடுகளிலோ நல்ல ஊதியத்துடனான பணிகளில் இருக்கிறார்கள். அல்லது சொந்தமாக தொழில் செய்து சிறப்புற வாழ்கிறார்கள். இத்தகைய குடும்பங்களில் எத்தனை பேரின் முன்னோர்கள் இன்ஜினியர்களாக, டாக்டர்களாக இருந்தார்கள்? எத்தனை பேருடைய தாத்தாக்கள் பள்ளிக்கூடம் சென்றிருக்கிறார்கள்? எத்தனை பேரின் தந்தையர் கல்லூரி வாசலை மிதித்திருக்கிறார்கள்? எத்தனை குடும்பங்களில் முந்தைய தலைமுறைப் பெண்கள் படிப்பு வாசனை அறிந்திருக்கிறார்கள்? 

இன்றைய தலைமுறை கல்வி கற்று - உரிமை பெற்று தலைநிமிர்ந்து நிற்கிறதென்றால் அதற்குக் காரணமானவர் தந்தை பெரியார். அவர் கொள்கைகளை நிறைவேற்றியது திராவிட இயக்கம். குறிப்பாக, திராவிட முன்னேற்றக் கழகம். பெரியார் இருந்தபோதும், மறைந்தபிறகும் அவருடைய கொள்கைகளை உறுதியாக நிறைவேற்றும் உரம் நிறைந்த  தலைவராக கலைஞர் அவர்கள் இருந்த காரணத்தால்தான், மகளிருக்கு குடும்ப சொத்தில் சமபங்கு கிடைத்தது. சாதி ஒடுக்குமுறைகளைத் தகர்த்து அனைவரும் சம உரிமையுடன் வாழும் சமத்துவபுரங்கள் உருவாக்கப்பட்டன. அதற்குத் தந்தை  பெரியாரின் பெயரையே சூட்டி, அங்கே அவரது சிலைகளை நிறுவி பெருமை சேர்த்தவர் தலைவர் கலைஞர். 

தந்தை பெரியார் தனது போராட்டங்களால் நிலைநாட்டிய சமூக நீதிக்கொள்கையின் அடிப்படையில் இடஒதுக்கீட்டு அளவு தமிழ்நாட்டில் 69% என்கிற நிலைக்கு உயர்ந்தது.  தலைவர் கலைஞர் அவர்கள், சமூக நீதிக்காவலர் வி.பி.சிங் அவர்கள் பிரதமராக இருந்தபோது மண்டல் கமிஷன் பரிந்துரைகள் அடிப்படையில் இந்திய அளவில் மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இடஒதுக்கீடு கிடைக்கச் செய்யும் வகையில் துணை நின்றதன் காரணமாக, தந்தை பெரியாரின் சமூகநீதிக் கொள்கை தமிழகத்தில் மட்டுமல்ல, இந்திய அரசியலின் தவிர்க்க முடியாத கொள்கையாக மாறியது. 

ஈரோட்டில் பிறந்தவர், அண்ணல் அம்பேத்கர் போன்று, இந்தியாவில் உள்ள ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களுக்குமான தலைவராக உயர்ந்து நிற்கிறார். அவருடைய கொள்கைகளும், தொலைநோக்குப் பார்வையும் இன்றைய தலைமுறையை சுயமரியாதை மிக்க சமுதாயமாக  மேம்படுத்தி, தங்களின் உரிமைகளுக்குத் துணிவுடன் குரல் கொடுக்கும் நிலைக்கு உயர்த்தியிருக்கிறது. ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் களம் கண்டு - உறுதி காத்து வெற்றி பெற்ற மாணவர்களும், இளைஞர்களும் கருப்புச்சட்டை அணிந்து போராடினார்கள் என்றால், அது அவர்கள் நேரில் பார்த்திராத பெரியார் கடைப்பிடித்த உத்தி. நமது உரிமைகள் பறிக்கப்படும்போது எதிர்ப்பின் அடையாளமாக கருப்பு உடையை அணிந்து களம் கண்டவர் பெரியார். 

அவர் விதைத்த கொள்கைகள் இன்று  ஆலமரமாய் வளர்ந்து அனைத்துத் தரப்பு மக்களுக்கும் குடையாக - நிழலாக - ஊன்றுகோலாகப் பாதுகாப்பு தருகிறது. மானமுள்ள தமிழர்களுக்கு இப்போதும் அவரது கொள்கைகளே ஆயுதம். இன எதிரிகளுக்கோ இப்போதும் அவர் பெயரைச் சொன்னால் அச்சம். பெரியார் சிலைகளை அகற்றுவோம் என்பவர் எவராக இருந்தாலும், தமிழர்கள் பெற்றுள்ள உரிமைகளாலும் உயர்வாலும் வயிறு எரிகிறார் என்றே அர்த்தம். அதுவும், டெல்லிவரை தமக்கான ஆட்சி இருக்கிறது என்பதால் வெளிப்படுகிறது வாய்த்துடுக்குச் சவடால். பாதுகாப்பு வளையத்திற்குள்ளே இருக்கிறோம் என்ற வக்கணையில் உளறும் கசடர்கள் சிலரைப் பார்க்கும் போது, "மந்திரி குமாரி" திரைப்படத்தின் கற்பனைக் காட்சி ஒன்றில் தலைவர் கலைஞர் அவர்கள், "அரண்மனை நாயே.. அடக்கடா வாயை", என்று எழுதியிருந்த வசனம் பலருடைய நினைவுக்கு வருவதைத் தடுக்கமுடியாது அல்லவா? அதனை இந்த நேரத்தில் நினைவூட்டி, தந்தை பெரியாரின் புகழ் காக்கும் பணியில் ஆர்ப்பாட்டக் களமிறங்கியிருக்கும் அனைத்துத் தரப்பினருக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவர் என்ற முறையில் என் உளமார்ந்த வாழ்த்துகளையும், ஆதரவினையும் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன். இனி கற்பனையிலும் அல்லது கனவிலும் கூட பெரியார் சிலைகளை அகற்றுவோம் என்கிற எண்ணம் எவருக்கும் ஏற்படாது. இன்னும் எவரேனும் இதே எண்ணத்துடன் மிச்சமிருந்தால், பெரியார் சிலையைத் தொட்டுப் பார்க்கட்டும். திராவிட இலட்சியங்களைக் காக்கும் பெரியாரின் பேரப்பிள்ளைகளான தி.மு.கழக தோழர்கள்  தாங்கள் யார் என்பதைக் காட்டும் தருணம் வரும்!

சார்ந்த செய்திகள்