Skip to main content

கால தாமதம் இல்லா அவசர சிகிச்சைப் பிரிவுக்கு ஒதுக்கிய ரூ.120 கோடி எங்கே?

Published on 10/01/2018 | Edited on 10/01/2018
கால தாமதம் இல்லா அவசர சிகிச்சைப் பிரிவுக்கு ஒதுக்கிய ரூ.120 கோடி எங்கே? 

சாலை விபத்துகளின் கூடாரமாக மாறிவிட்டது தமிழகம். இங்கு விபத்து நடைபெறும் இடத்தில் நிகழும் மரணங்களுக்கு நிகராக, மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டும் சிகிச்சை கிடைக்காமல் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை இருக்கிறது. ‘பத்து நிமிஷம் முன்னாடி கொண்டு வந்திருந்தா காப்பாத்தி இருக்கலாம்’ என்கிற வசனத்திற்குப் பின்னால் விலைமதிப்பற்ற லட்சக்கணக்கான உயிர்களுக்கு சொந்தமான உறவுகளின் பரிதவிப்பும் இருக்கிறது.

இந்த அவல நிலையைத் தடுப்பதற்காக பல்வேறு அமைப்புகள் கோரிக்கைகள் விடுத்ததை அடுத்து, கடந்த தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், விபத்துகளில் அடிப்பட்டு வருபவர்களுக்கு உடனடி சிகிச்சை வழங்கும் ‘கால தாமதமில்லா அவசர சிகிச்சைப் பிரிவை’ அமைக்க தமிழக அரசு முடிவுசெய்தது. இதற்காக ரூ.120 கோடியை நிதியாக ஒதுக்க ஒப்புதலும் அளித்தது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் அதிக அளவில் விபத்து மரணங்கள் நிகழும் 68 இடங்களைத் தேர்ந்தெடுத்து, அங்கெல்லாம் இந்த கால தாமதமில்லா அவசர சிகிச்சைப் பிரிவை அமைக்கவும் அரசு முடிவுசெய்தது.



இது முடிவு செய்யப்பட்டு ஒரு ஆண்டு கடந்துவிட்ட நிலையில், கடந்த வாரம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை ஓமந்தூரார் நினைவகத்தில் உள்ள அரசு பல்நோக்கு மருத்துவமனையில் இந்த அவசர சிகிச்சைப் பிரிவை முதற்கட்டமாக திறந்துவைத்தார். ஆனால், நேற்றோ தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இதே சிகிச்சைப்பிரிவை மீண்டும் முதல்கட்டமாக திறந்து வைத்திருக்கிறார். ஒரே திட்டத்தை இரண்டு முறை வெவ்வேறு இடங்களில் முதற்கட்டமாக திறந்துவைக்கும் புதிய வித்தையையும் அரசு கையாண்டு விட்டது.

கால தாமதமில்லா அவசர சிகிச்சைப் பிரிவில் அனைத்து விதமான மருத்துவ உபகரணங்களும் இடம்பெற்றிருக்க வேண்டும். ஸ்கேனிங், அனெஸ்தீசியா எனும் மயக்க மருந்து பிரிவு, வெண்டிலேட்டர் கருவிகள் ஆகிய அனைத்தும் முறையான பராமரிப்பு நிலையில் இருக்க வேண்டும். அறுவைச்சிகிச்சை மேற்கொள்வதற்கான வசதியும் அதே பிரிவுக்குள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இதுவொரு பிரச்சனை என்றால், சிகிச்சை வழங்கும் மருத்துவர்கள் பற்றாக்குறை என்பது மற்றொரு பிரச்சனை. சென்னை பல்நோக்கு மருத்துவமனைகளில் நர்சுகளை வைத்து சிகிச்சை அளிக்கும் கொடுமையை முன்னரே வெளியிட்டது நக்கீரன் இதழ்.



எந்த நலத்திட்டமாக இருந்தாலும் அதை சென்னையில் இருந்து தொடங்குவதையே வழக்கமாக கொண்டிருக்கிறது அரசு. ஆனால், சென்னையிலேயே தேய்ந்துவிடும் இந்தத் திட்டங்கள் இனி மற்ற மாவட்டங்களுக்கு சென்றடையும்போது என்ன நிலையில் இருக்கும் என்ற கேள்வியும் இயல்பாகவே எழுகிறது.

‘தாங்கள் கல்வி கற்கும் காலத்தில் வாங்கப்பட்ட வெண்டிலேட்டர் போன்ற உபகரணங்கள்தான் பயன்படுத்தப்படுகின்றன. கையில் வைத்து இயக்கும் வசதிகளைக் கொண்ட வெண்டிலேட்டர்கள் வந்துவிட்ட சூழலிலும் கூட, 2006, 2009 காலகட்டத்தில் வாங்கப்பட்ட இதுபோன்ற துருப்பிடித்த உபகரணங்களைப் பயன்படுத்திதான் மக்களைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறோம்’ என வேதனையை உடைக்கின்றனர் மருத்துவர்கள்.



விபத்துக் காலத்தில் அவசர சிகிச்சை அளிப்பதற்காக நிதியை ஒதுக்கிவிட்டு, ஒரு வருடகால பொறுமைக்குப் பிறகு எப்போதும்போல ஆமை வேகத்தில் அதன் வேலைகளை தொடங்கியிருக்கிறது அரசு. தனியார்மயத்தின் வேகமான வளர்ச்சிக்கு வழிவகை செய்யும் தன்போக்கை அரசு மாற்றிக் கொள்ளவேண்டும் என்பதே எளிய மக்களின் குரலாக இருக்கிறது.

- ஜீவாபாரதி, மதி

சார்ந்த செய்திகள்