Skip to main content

அண்ணா மறைவு – கலைஞர் முதல்வர் – இன்னொரு பிளவு!

Published on 13/11/2017 | Edited on 13/11/2017


 
திமுக தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் மக்கள் மத்தியில் புதிய நம்பிக்கை ஏற்பட்டது. இது சாமானியர்களுக்கான ஆட்சி என்றும், தமிழ் உணர்வாளர்களின் ஆட்சி என்றும் மக்கள் கொண்டாடினர். 

அண்ணா முதல்வர் பொறுப்புடன் பொது நிர்வாகம், நிதி, திட்டம், மதுவிலக்கு, அகதிகள் மறுவாழ்வு ஆகிய துறைகளையும் ஏற்றுக் கொண்டார். நெடுஞ்செழியன் கல்வி, தொழில், மின்சாரம், சுரங்கங்கள், கனிமம், ஆட்சிமொழி, கைத்தறி, அறநிலையங்கள் ஆகிய துறைகளின் அமைச்சரானார். கலைஞர் பொதுப்பணித்துறை, சாலைகள், போக்குவரத்து, துறைமுகங்கள் ஆகிய துறைகளின் அமைச்சரானார். கே.ஏ.மதியழகன் உணவு அமைச்சராகவும், ஏ.கோவிந்தசாமி விவசாய அமைச்சராகவும், எஸ்.ஜே.சாதிக்பாட்சா சுகாதாரத்துறை அமைச்சராகவும், சத்தியவாணிமுத்து தாழ்த்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும், எம்.முத்துச்சாமி உள்ளாட்சித் துறை அமைச்சராகவும், எஸ்.மாதவன் சட்டம் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சராகவும், என்.வி.நடராசன் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றனர்.

மக்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடியே சுயமரியாதைத் திருமணங்களை அங்கீகரிக்கும் சட்டம், அரசு அலுவலகங்களில் கடவுள் பட நீக்கம், ஏழை மக்களுக்கு தீப்பிடிக்காத வீடுகள் கட்டும் திட்டம், கல்லூரி வரை இலவசக் கல்வி, பள்ளிகளில் இந்தியை அகற்றி, தமிழ், ஆங்கிலம் என இருமொழித் திட்டம், சென்னை மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் என பல்வேறும் முற்போக்கான சட்டங்களையும் திட்டங்களையும் நிறைவேற்றினார் அண்ணா.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அண்ணா 1969 ஆம் ஆண்டு பிப்ரவரி 3 ஆம் தேதி மரணமடைந்தார். அண்ணாவின் மரணம் தமிழகத்தை அதிரவைத்தது. அண்ணாவின் இறுதி ஊர்வலத்தில் ஒன்னரைக் கோடி பேர் பங்கேற்றனர். இது கின்னஸ் சாதனையாக பதிவுபெற்றது.






 
தமிழ்நாடு முழுவதும் தங்கள் குடும்பத் தலைவரை இழந்தது போல துயரமடைந்தனர். எல்லா ஊர்களிலும் மக்கள் பங்கேற்புடன் இறுதி நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
 
அண்ணாவின் மறைவையொட்டி கலைஞர் பாடிய கவிதாஞ்சலி மக்கள் மனதை உருக்கும் வகையில் இருந்தது. ஆனால், சமுதாயத்தின் கீழ்நிலையிலிருந்து உயர்ந்து முதல்வர் பொறுப்பை ஏற்ற கலைஞருக்கு எதிராக அப்போதே இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை பரப்பினார்கள்.
 
அண்ணாவின் ஆபத்தான உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் தமிழ்நாடு பெயர் மாற்ற விழாவில் அண்ணாவை பங்கேற்கச் செய்தது கலைஞர்தான் என்றும் அதன்காரணமாகவே அண்ணா உயிரிழந்தார் என்றும் வதந்திகளை பரப்பினார்கள்.
 
அண்ணாவின் அமைச்சரவையில் இரண்டாம் இடத்தில் இருந்தவரும், தற்காலிக முதல்வர் பொறுப்பை ஏற்றிருந்தவருமான நெடுஞ்செழியனை மீறி கலைஞருக்கு எம்எல்ஏக்கள் மத்தியில் பெரும்பான்மை ஆதரவு இருந்தது. இதற்கு முக்கிய காரணம் நெடுஞ்செழியன் கட்சிக்காரர்கள் மத்தியில் ஒரு அதிகாரியைப் போல நடந்துகொள்கிறவர் என்பதுதான். கலைஞர் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை தாண்டி கடைக்கோடி தொண்டர்களிடமும் நெருக்கமான உறவை வளர்த்திருந்தார்.

1961 கட்சித் தேர்தலிலேயே கலைஞர் பொதுச்செயலாளர் ஆகியிருக்க வேண்டிய சூழ்நிலை நிலவியது. ஆனால், அவர் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்கவே, எம்எல்ஏ, எம்.பி.க்கள் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தடைவிதிக்கும் திருத்தத்தை ஈ.வே.கி.சம்பத் கொண்டுவந்து நிறைவேற்றினார்.
 
இப்போதும் கலைஞர் முதல்வராவதை எதிர்த்து நெடுஞ்செழியன் போட்டியிட தயாரானார். ஆனால், கலைஞருக்கு சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு அதிகமாக இருப்பதை உணர்ந்த நெடுஞ்செழியன் போட்டியிலிருந்து விலகினார். கலைஞரின் அமைச்சரவையிலும் இணையாமல் ஒதுங்கினார். ஆனால், பின்னர் கலைஞரின் அமைச்சரவையில் கல்வித்துறையை ஏற்றுக் கொண்டார்.
 
கலைஞர் முதல்வரான காலகட்டத்தில்தான் மத்தியில் பிரதமரான இந்திரா காந்திக்கும் காமராஜர் உள்ளிட்ட மூத்த தலைவர்களுக்கும் இடையே கருத்து மோதல் தொடங்கியது. இந்திரா தனக்கு ஆதரவான தலைவர்கள் குழுவை உருவாக்கியிருந்தார். அவர்கள் சோவியத் ரஷ்யாவின் பொதுவுடமை கருத்துக்களுக்கு ஆதரவானவர்களாக இருந்தனர்.
 
வங்கிகள் தேசியமயம் உள்ளிட்ட முற்போக்கான திட்டங்களை நிறைவேற்ற இந்திரா விரும்பினார். இதை மூத்த தலைவர்கள் எதிர்த்தனர். இந்நிலையில்தான் குடியரசுத்தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அந்தத் தேர்தலில் இந்திரா தனது கொள்கைகளுக்கு சாதகமான ஒருவர் வெற்றிபெற வேண்டும் என்று நினைத்தார்.
 
காங்கிரஸ் தலைவராக இருந்த நிஜலிங்கப்பா, காமராஜர் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் சஞ்சீவரெட்டியை குடியரசுத் தலைவர் பதவி்க்கு வேட்பாளராக அறிவித்தனர். அவரை எதிர்த்து வி.வி.கிரியை தனது வேட்பாளராக அறிவித்தார் இந்திரா.
 
இதையடுத்து, இந்திரா காங்கிரஸ் கட்சியிலிருந்து விலக்கப்பட்டார். ஆனால், மொத்தம் இருந்த 283 மக்களவை உறுப்பினர்களில் 65 பேர் மட்டுமே இந்திராவுக்கு எதிராக இருந்தனர். இந்திராவுக்கு 218 உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே இருந்தது.
 
காங்கிரஸ் இரண்டாகியது. சிண்டிகேட் காங்கிரஸ், இண்டிகேட் காங்கிரஸ் என்று பெயர்பெற்றது. காங்கிரஸின் காளைமாட்டுச் சின்னம் முடக்கப்பட்டது. இந்திரா காங்கிரஸுக்கு பசுவும் கன்றும் சின்னம் ஒதுக்கப்பட்டது. பழைய காங்கிரஸுக்கு ராட்டை சின்னம் ஒதுக்கப்பட்டது.





 
இந்நிலையில்தான் கலைஞரின் ஆதரவை கேட்டார் இந்திரா. கலைஞரை டெல்லிக்கே வரவழைத்து குடியரசுத்தலைவர் தேர்தலில் வி.வி.கிரிக்கும், நாடாளுமன்றத்தில் தனக்கும் ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டார்.
 
அன்றைய பேச்சுவார்த்தையில், சேலத்தில் உருக்காலையை அமைக்க இந்திரா ஒப்புக்கொண்டார். வி.வி.கிரி வெற்றிபெற்றதும் கலைஞரை தனது வீட்டிற்கு அழைத்து அவருடைய கையால் விருந்து கொடுத்தார் இந்திரா. 1969ல்தான் மாநில முதல்வர்களே சுதந்திரக் கொடியை ஏற்றும் உரிமையையும் கலைஞர் பெற்றுத்தந்தார்.
 
காங்கிரஸ் பிளவுபட்ட நிலையில் பிரதமர் இந்திராவுக்கு பெரும்பான்மை ஆதரவில்லாத நிலையில் கிழக்கு பாகிஸ்தான் மக்களின் தனிநாடு கோரிக்கையை ஒடுக்க மேற்கு பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது. ஆயிரக்கணக்கான எதிர்க்கட்சியினர் கொல்லப்பட்டனர். மக்கள் அகதிகளாக இந்திய எல்லையில் உள்ள மேற்கு வங்க மாநிலத்திற்குள் வந்தார்கள்.
 
இதையடுத்து, இந்திராவின் உத்தரவுப்படி இந்திய ராணுவம் கிழக்கு பாகிஸ்தானுக்கு ஆதரவாக களத்தில் இறங்கியது. 18 நாட்களில் போர் முடிந்து சுதந்திர வங்கதேசம் உருவாக்கப்பட்டது. முஜிபுர் ரஹ்மான் பிரதமரானார்.
 
இந்த வெற்றியை தனக்குச் சாதகமாக்கும் வகையில் மக்களவைக்கு பதவிக்காலம் முடிவதற்கு ஒரு ஆண்டு இருக்கும்போதே முன்கூட்டி பொதுத்தேர்தல் அறிவித்தார் இந்திரா. தமிழக சட்டமன்றத்தையும் கலைத்துவிட்டு தேர்தலைச் சந்திக்க தயாரானார் கலைஞர்.
 
இந்தத் தேர்தலில் திமுக கூட்டணியில் நாம் தமிழர் கட்சி, முஸ்லீம் லீக், ஃபார்வார்டு ப்ளாக், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பிரஜா சொஷலிஸ்ட் கட்சி ஆகியவை இடம் பெற்றிருந்தன. திமுகவுக்கு இந்திரா காங்கிரஸ் ஆதரவளித்தது. அந்தக் கட்சி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை. மாறாக  மக்களவைத் தேர்தலில் 9 இடங்களில் மட்டுமே போட்டியிட்டது.
 
திமுகவிற்கு எதிராக காமராஜரின் சிண்டிகேட் காங்கிரஸ், சுதந்திரா கட்சி, சம்யுக்தா சோஷலிஸ்ட் கட்சி, தமிழ் நாடு உழைப்பாளர் கட்சி, தமிழ் அரசு கழகம், குடியரசு கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிட்டன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் இரு கூட்டணிகளிலும் சேராமல் தனித்துப் போட்டியிட்டது.
 
திமுக 203 தொகுதிகளில் போட்டியிட்டு 184 தொகுதிகளில் வெற்றிபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 10 இடங்களில் போட்டியிட்டு 8 இடங்களில் வெற்றிபெற்றது. பார்வர்ட் பிளாக் 9 தொகுதிகளில் போட்டியிட்டு 7 இடங்களிலும், பிரஜா சோசலிஸ்ட் கட்சி 4 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களிலும், முஸ்லிம் லீக் கட்சி 2 தொகுதிகளில் போட்டியிட்டு 2 இடங்களிலும் வெற்றி பெற்றன.
 
காமராஜரின் பழைய காங்கிரஸ் 201 தொகுதிகளில் போட்டியிட்டு 15 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. சுதந்திரா கட்சி 19 இடங்களில் போட்டியிட்டு 6 இடங்களிலும் வெற்றிபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 37 இடங்களில் போட்டியிட்டு ஒரு இடத்தி்ல்கூட வெற்றிபெறவில்லை.
 
மக்களவைத் தேர்தலில் திமுக 23 இடங்களிலும், இந்திரா காங்கிரஸ் 9 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 4 இடங்களிலும், முஸ்லிம் லீக், பார்வர்ட் பிளாக் தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன. காமராஜ் தலைமையிலான காங்கிரஸில் காமராஜர் மட்டும் வெற்றி பெற்றார்.




 
தமிழ்நாட்டில் இரண்டாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்ற கலைஞர் தலைமையிலான அமைச்சரவையில் கல்வி அமைச்சராக நெடுஞ்செழியனும், ராஜாராம் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும், பேராசிரியர் அன்பழகன் சுகாதாரத்துறை அமைச்சராகவும், அன்பில் தர்மலிங்கம் விவசாயத்துறை, சாதிக்பாட்சா பொதுப்பணித்துறை, சத்தியவாணிமுத்து தாழ்த்தப்பட்டோர் நலத்துறை, எம்.கண்ணப்பன் அறநிலையத்துறை, எஸ்.மாதவன் தொழில்துறை, ஓ.பி.ராமன் மின்சாரத்துறை, ஆதித்தனார் கூட்டுறவுத்துறை, பண்ருட்டி ராமச்சந்திரன் போக்குவரத்து துறை அமைச்சர்களாகவும் பொறுப்பேற்றனர்.
 
திமுகவின் அசுரபலம் இந்திராவின் கண்களை உறுத்தியது. கலைஞரின் மாநில உரிமைகள் குறித்த சிந்தனைகள், மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்ற முழக்கம், தமிழகத்திற்கென புலி, வில், மீன் சின்னம் பொறித்த தனிக்கொடி உருவாக்கம் இதெல்லாம் இந்திராவுக்கு பிடிக்கவில்லை.
 
இதையடுத்து, கட்சியில் செல்வாக்குப் பெற்றிருந்த எம்.ஜி.ஆரை வருமான வரித்துறையைக் கொண்டு மிரட்டினார் இந்திரா. அதன் விளைவாக, திமுகவின் பொருளாளராக இருந்த எம்ஜியார் திமுக தலைமைக்கு எதிரான கருத்துக்களை பொதுவெளியில் தெரிவித்து நெருக்கடியை ஏற்படுத்தினார்.
 
மதுரை மாநாடுதான் அவருக்கு காங்கிரஸ் தூண்டில் போட முக்கிய காரணமாகியது. அந்த மாநாட்டில் கலைஞர் தனது மூத்தமகன் மு.க.முத்துவை குதிரை மீதமர்ந்து அணிவகுக்கச் செய்தார். இது தன்னை ஒழிக்க கலைஞர் செய்யும் ஏற்பாடு என்று எம்ஜியார் நினைத்தார். அவருக்கு அப்படியே தூபம் போடப்பட்டது.
 
மு.க.முத்து சினிமாவில் நடிப்பதையும் அவர் ஏற்கவில்லை. எல்லா அதிருப்தியையும் மொத்தம் சேர்த்து, திமுகவை பிளக்க இந்திரா பயன்படுத்தினார்.





 
எம்ஜியாரின் கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக அவரை கட்சியிலிருந்து நீக்கி திமுக பொதுக்குழு முடிவெடுத்தது. திமுக மீண்டும் உடைந்தது. இந்தமுறை தமிழகம் முழுவதும் எல்லா திமுக கிளைகளிலும் செயல்பட்ட எம்ஜியார் மன்றங்கள் அனைத்தும் எம்ஜியாருக்கு ஆதரவான கிளைகளாக மாறின.
 
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கிய எம்ஜியார் கலைஞர் அரசுமீது ஊழல் புகார் தயாரித்து இந்திராவிடம் கொடுத்தார். அவருக்கு அரசியல் ஆலோசகராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.கல்யாணசுந்தரம் இருந்தார்.
 
அவர் கட்சி தொடங்கிய நேரத்தில் திண்டுக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்த ராஜாங்கம் மரணமடைந்தார். அங்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் எம்ஜியாரின் அதிமுக இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டது.
 
தேர்தல் முடிவில் திமுக மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் இரண்டாவது இடத்தை பெற்றது.
 
தமிழகத்தில் அரசியல் கூத்துகள் அரங்கேறத் தொடங்கின.
 
(எமர்ஜென்சியும் திமுக ஆட்சிக் கலைப்பும் – இந்திரா தோல்வியும் பற்றி வியாழக்கிழமை பார்க்கலாம்)
 
-ஆதனூர் சோழன்

முந்தைய பகுதிகள்:


சார்ந்த செய்திகள்