Skip to main content

அசத்தும் ஆந்திரா! ஏமாற்றும் தமிழகம்!

Published on 05/02/2018 | Edited on 05/02/2018

துவும் மாநிலம்தான்; இதுவும் மாநிலம்தான். ஆனால், அதுபோல இது ஏன் இல்லை எனக் கேட்கிறார்கள் ஆந்திராவின் செயல்பாட்டைக் கவனிக்கும் தமிழக அதிகாரிகளும் தொழில்துறையினரும்.

சென்னையிலிருந்து கொல்கத்தா செல்லும் நெடுஞ்சாலையில் எண்ணூர் -காட்டுப்பள்ளி துறைமுகத்தில் இருந்து பதினாறாவது கிலோமீட்டரில் அமைந்திருக்கிறது "ஸ்ரீசிட்டி' என்கிற தொழிற்பேட்டை. தமிழக எல்லைப்பகுதியான ஆரம்பாக்கத்தில் இருந்து வெறும் ஆறு கிலோ மீட்டரில் ஆந்திர மாநில அரசு உருவாக்கியுள்ள சிறப்பு பொருளாதார மண்டலமான ஸ்ரீசிட்டிக்குள் நுழைந்ததுமே நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது.

சாலைகளே பிரமிக்க வைக்கின்றன. வருடம் முழுவதும் பூக்கும் "காகிதப் பூக்கள்' என அழைக்கப்படும் போகன்வில்லா மலர்கள் வெள்ளை, சிகப்பு, ஊதா என பல வண்ணங்களில் நம்மை வரவேற்கின்றன.

என்.எச்.5 எனப்படும் தேசிய நெடுஞ்சாலை தமிழக எல்லையான ஆரம்பாக்கத்தை தாண்டும் வரை ஒருவித தூங்குமூஞ்சி கிராமத்தையே நினைவுபடுத்தும்; ஸ்ரீசிட்டிக்குள் நுழைந்ததும், சிங்கப்பூருக்குள் நுழைந்தது போலிருந்தது. கே.வி.ராங்க் என்கிற சிங்கப்பூர் நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்ட நகரம் இது. அதனால்தான் சிங்கப்பூர் போல இருக்கிறது என்கிறார்கள் ஸ்ரீசிட்டியைச் சேர்ந்தவர்கள்.

அழகான, வழுவழுப்பான சாலைகள். அதில் உலக புகழ்பெற்ற அமெரிக்க கம்பெனிகள் வரிசையாக அணிவகுக்கின்றன. சாக்லெட் தயாரிக்கும் காட்பெரி, பிரபல பற்பசை கம்பெனியான கோல்கேட், குளிர்பான கம்பெனியான பெப்ஸி, நல்ல சுவைதரும் சிப்ஸ்களை தயாரிக்கும் கெலாக்ஸ் போன்ற பிரபலமான அமெரிக்க கம்பெனிகளுடன் ஜப்பான் நாட்டு கார் நிறுவனமான இசுசு, ஜப்பான் நாட்டு க்ரேன் கம்பெனியான கோபால்கோ போன்ற மிகப்பிரபலமான கம்பெனிகளும் ஸ்ரீசிட்டியில் அமைந்துள்ளன.

அத்துடன் அதிக பிரபலம் இல்லாத இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்வீடன், பஹ்ரைன், சீனா, தாய்லாந்து, சிங்கப்பூர் கம்பெனிகளுக்கும் இடம் தரப்பட்டுள்ளன. ""சென்னையில் ஓடும் மெட்ரோ ரயில் பெட்டிகள்கூட ஆல்ஸ்டோம் என்கிற கம்பெனி ஸ்ரீசிட்டியில் உற்பத்தி செய்கிறது'' என விளக்குகிறார் ஸ்ரீசிட்டியின் பி.ஆர்.ஓ.வான ஸ்ரீவர்சன்.



நாம் ஸ்ரீசிட்டியில் ஒரு பிரம்மாண்டமான ஏரியையும், அங்கு பணிசெய்யும் தொழிலாளர்கள் தங்குவதற்கு அபார்ட்மெண்ட்கள் அமைக்கப்பட்டிருப்பதையும் பார்த்தோம். மொத்தம் 1 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும் 75,000 தொழிலாளர்கள் மறைமுகமாகவும் வேலை பார்க்கிறார்கள். 2008-ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஸ்ரீசிட்டியில் வருடத்திற்கு ஒரு லட்சத்து 75,000 கோடி முதலீடாக வருகிறது. மொத்தம் ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஸ்ரீசிட்டி, ஆந்திர மாநிலம் மொழிவாரியாக பிரிக்கப்படுவதற்கு முன்பு தமிழகத்தின் வடஆற்காடு மாவட்டத்தில் இடம் பெற்றிருந்தது. செம்மரங்கள் நன்கு வளரும் செம்மண் நிறைந்த பகுதியில் பட்டையை கிளப்பும் சர்வதேச நகரத்தை அமைத்து ஆச்சரியப்படுத்தியிருக்கிறார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு.

இதில் வேலை செய்யும் தொழிலாளர்களில் 75 சதவிகிதம் பேர் தமிழர்கள். உற்பத்தியாகும் பொருட்களின் ஏற்றுமதி வசதிக்காக சென்னை துறைமுகமும் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணபட்டினம் துறைமுகமும் பயன்படுத்தப்படுகிறது என்கிறது ஸ்ரீசிட்டி பற்றி கிடைக்கும் புள்ளி விவரங்கள்.

தமிழகத்திலும் பிரம்மாண்டமாக உலக முதலீட்டாளர் மாநாடு நடந்தது. மறுபடியும் நடத்துவோம் என்கிறார்கள். பலன்...?

-தாமோதரன் பிரகாஷ்


சார்ந்த செய்திகள்