
விழுப்புரம் அருகே அரசூரை சேர்ந்த அருள்(32) காகுப்பத்தில் உள்ள ஆயுதப்படை பிரிவில் காவலராக பணியாற்றிவருகிறார். இவர் கடந்த 2020 ஆண்டு காலகட்டத்தில் சென்னையில் காவலராக பணிபுரிந்த போது செஞ்சி பகுதியைச் சேர்ந்த பெண் காவலர் ஒருவருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இருவரும் ஒன்றாக பழகி வந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து நாளடைவில் இந்த பழக்கம் நெருக்கத்தை அதிகரிக்க அது காதலாக மலர்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து திருமணம் செய்துகொள்வதாக கூறி அருள் அந்த பெண் காவலருடன் தனிமையில் இருந்துள்ளார். ஆனால், அதன் பின் பெண் காவலரை திருமணம் செய்துகொள்ள மறுத்து மிரட்டல் விடுத்திருக்கிறார்.
இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான பெண் காவலர், விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் காவலர் அருளை கைது செய்தனர். இந்த விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் வழக்குத் தொடர்பான அனைத்து விசாரணைகளும் முடிந்த நிலையில், காவலர் அருளுக்கு ஓர் ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.