Skip to main content

‘24 மணி நேரமும் கடைகள் செயல்படலாம்’ - தமிழக அரசு அரசாணை!

Published on 09/05/2025 | Edited on 09/05/2025

 

Tamil Nadu government orders Shops can operate 24 hours a day

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் பகுதியில் நடைபெற்ற வணிகர் சங்க மாநாட்டில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு 6 அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது அவர், வணிகர்களுக்காக 6 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், மக்கள் நலன் கருதி 24 மணி நேரமும் கடை திறக்க வழங்கப்பட்ட அரசாணை ஜூன் 4ஆம் தேதியோடு முடியும் நிலையில், மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்ற வாக்குறுதியை அளித்திருந்தார். 

இந்த நிலையில், 24 மணி நேரமும் கடைகள் செயல்படலாம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில், ‘தமிழ்நாடு முதலமைச்சர், 05.05.2025 அன்று 42வது வணிகர் தினத்தையொட்டி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் மதுராந்தகத்தில் நடைபெற்ற மாநாட்டில், பொதுமக்களின் நலன் கருதி கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அனைத்து நாட்களும் 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி அளித்து வழங்கப்பட்ட அரசாணை வரும் ஜுன் 4-ம் தேதியுடன் முடிவடைவதால் இதனை மேலும், 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து அரசாணை வெளியிடப்படும்" என அறிவித்தார்.

தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவிப்பிற்கிணங்க, பொதுமக்களின் நலன் கருதி 10 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்களை பணியமர்த்தியுள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் வாரத்தின் 7 நாட்களும் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் அனுமதி அளிக்கப்பட்டு, 05.06.2025 முதல் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையால், அரசாணை (டி) எண்.207, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் (கே) துறை, நாள் ஆணை 08.05.2025 மூலம் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் வணிகர்களும்,பொதுமக்களும் பயனடைவார்கள்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்