
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமத்தில் கடந்த 5 ந் தேதி இரவு இரு தரப்பு இளைஞர்களிடையே ஏற்பட்ட பிரச்சனையில் ஒரு தரப்பு குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த மற்றொரு தரப்பு இளைஞர்களால் மோதல் ஏற்பட்டு இரு தரப்பிலும் பலர் காயமடைந்தனர். போலீசார் ஒருவரும் காயமடைந்தார். இந்த சம்பவத்தில் அந்த குடியிருப்பில் ஆள் இல்லாத வீடு, 3 இரு சக்கர வாகங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது மேலும், பல வீடுகளின் கூறைகள், மோட்டார் சைக்கிள்கள், கார்கள் உடைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் சிகிச்சையில் உள்ளவர்கள் உள்பட இதுவரை ஒரு தரப்பில் 20 பேரும் மற்றொரு தரப்பில் 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தப் பிரச்சனை மாநில அளவில் எதிரொலித்துள்ள நிலையில் பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சியினரும் வந்து இரு தரப்பினரையும் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். இந்த நிலையில் இன்று தமிழ்நாடு மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத் தலைவர் நீதியரசர் தமிழ்வாணன் தலைமையிலான குழுவினர் வடகாடு பகுதிக்குச் சென்று பாதிக்கப்பட்ட பகுதிக்குச் சென்று சேதமடைந்துள்ள வீடுகள், கார்கள், பைக்குகளை பார்வையிட்டு ஆய்வு செய்த குழுவினர் அப்பகுதி மக்களிடம் சம்பவம் நடந்தது பற்றி விபரங்களையும் கேட்டறிந்துள்ளனர். இந்த ஆய்வுக் குழு அறிக்கை விரைவில் அரசுக்கு அளிக்கப்படும் என்கின்றனர்.