Skip to main content

தமிழகம் டூ மலேசியா; முதன்முறையாக ஏற்றுமதியாகும் உணவு பொருள்!

Published on 16/12/2022 | Edited on 16/12/2022

 

Tamil Nadu to Malaysia; Exported food for the first time!

 

திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த விமான சேவைகளை தற்போது அதிக அளவில் பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த விமான நிலையத்தில் இருந்து பால் பொருட்கள், பழங்கள் உள்ளிட்ட உணவு பொருட்கள், இலைகள், பூக்கள் போன்றவை அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. கொரோனா பரவலால் 2 ஆண்டுகளாக குறைந்த அளவில் ஏற்றுமதி நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஓராண்டாக மீண்டும் ஏற்றுமதி அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

இந்த நிலையில் தமிழ்நாட்டில் முதல் முறையாக நாமக்கல் மாவட்டத்தில் இருந்து திருச்சி வழியாக மலேசியாவிற்கு தனியார் நிறுவனத்தின் சார்பில் கோழி முட்டைகளை ஏற்றுமதி செய்வதற்கான ஏற்பாடுகளை திருச்சி விமான நிலைய அதிகாரிகள் செய்து வந்தனர். இதைத்தொடர்ந்து நேற்று மாலை திருச்சியில் இருந்து மலேசியாவிற்கு முதல் முறையாக கோழி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

 

இதையொட்டி முன்னதாக நாமக்கல்லில் உள்ள தனியார் நிறுவனத்தில் இருந்து முட்டைகள் வாகனம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதன் தொடக்க விழாவில் அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு முட்டை ஏற்றுமதியை தொடங்கி வைத்தார். இதையடுத்து அந்த முட்டைகள் விமானத்தில் மலேசியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதில் 2 லட்சம் முட்டைகள் மலேசியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும், இந்த முட்டைகளின் மதிப்பு சுமார் ரூ.25 லட்சம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

இந்த நிகழ்ச்சியின்போது திருச்சி மாநகர மேயர் அன்பழகன், விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி, துணைப் பொது மேலாளர் ஜலால், முனைய மேலாளர் சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். திருச்சி விமான நிலையத்தில் இருந்து முட்டை ஏற்றுமதி செய்யப்படுவது, கார்கோ பிரிவில் மேலும் அதிக அளவில் வளர்ச்சி ஏற்பட ஏதுவாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழப்பு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
6-year-old boy lost their live in private college bus crash

நாமக்கல்லில் தனியார் கல்லூரி பேருந்து மோதி ஆறு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஈரோடு சாலையில் உள்ள  தோட்ட வாடி கிராமத்தில் உள்ள பேருந்து நிலைய பகுதியில் கூட்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் தன்னுடைய 6 வயது மகனுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்திற்குப் பின்புறம் வந்த தனியார் கல்லூரி பேருந்து எதிர்பாராத விதமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 6 வயது சிறுவன் தலை நசுங்கி உயிரிழந்தார். தந்தை சதீஷ்குமாரின் கை முறிந்து துண்டானது.

இந்தச் சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்த, உடனடியாக அங்கு வந்த போலீசார் சிறுவனின் உடலைக் கைப்பற்றி  பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்தப் பகுதிகளில் காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதாகவும், அந்த நேரத்தில் தனியார் பேருந்துகள் மிகுந்த வேகத்துடன் செல்வதால் சாலைத் தடுப்பு, வேகத்தடை ஆகியவற்றை அமைத்துக் கொடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்செங்கோடு காவல் நிலைய போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.