Skip to main content

ஆண்டாள் பாசுரத்தையே உணராத ஜீயர்

Published on 08/02/2018 | Edited on 08/02/2018
ஆண்டாள் பாசுரத்தையே உணராத ஜீயர் - நாஞ்சில் சம்பத் ஆவேசம்! 



ஆண்டாள் பாசுரத்தையே உணராத ஜீயர், வைணவ சம்பிரதாயத்தை மீறி போராட்டத்தில் ஈடுபடுவது தவறு. இதில் ஏதோ சதி இருக்கிறது என்றும், வைரமுத்து மன்னிப்புக் கேட்கத் தேவையில்லை என்றும் நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.

இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திற்கு கருத்து தெரிவித்த நாஞ்சில்சம்பத்,

ஜீயரை வகுப்புவாத சக்திகள் தூண்டிவிடுகிறார்கள். வகுப்புவாத சக்திகள் வீசிய வலையில் விழுந்துகிடக்கிறார் மதிப்பிற்குரிய ஜீயர். தன்னை இப்படி வெளிக்காட்டிக் கொள்வதன் மூலம், ஜீயர் தன்னுடைய வைணவ சம்பிரதாயத்தையே குழித்தோண்டி புதைத்துவிட்டார். வைணவ சம்பிரதாயப்படி, ஒருவர் தான் இருப்பதையே காட்டிக்கொள்ளக் கூடாது. ஒரு வைணவன் எப்படி இருப்பான் என்று கேட்டால் உப்பைப்போல் இருப்பான் என்பார்கள். அதென்ன உப்பைப்போல் இருப்பான். உப்பில்லாமல் ஒரு உணவை நாம் உண்ண முடியாது. ஆனால் உப்பு உணவில் தனியாக தெரிவதில்லை. அது மறைந்துதான் இருக்கும். அதைப்போல் ஒரு வைணவன், ஒரு நல்ல காரியம் செய்தால் அதனைத் தான் செய்ததாக காட்டிக்கொள்ள விரும்பமாட்டான். ஆனால் ஒரு அயோக்கியத்தனமான ஒரு காரியத்தில் ஒரு வைணவர், ஒரு ஜீயர் ஈடுபடுவது தமிழ்நாட்டிற்கு புதிது.

ஆண்டாளிடத்தில் அன்னாந்து பார்க்கிற உயரத்தில் இருக்கிற கவிஞர், ஆண்டாள் குறித்து சொன்னதற்கு அவர் வருத்தம் தெரிவித்துக்கொள்வதாக கூறிவிட்டார். இங்கே வா, ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வா என்று அழைக்கிறார்கள் என்றால் அவர்கள் ஏதோ வன்முறைக்கு திட்டமிட்டிருக்கிறார்கள் என்றே கருதுகிறேன்.

வைரமுத்துவை மன்னிப்பு கேட்க சொல்லுவதற்கு ஜீயருக்கு எந்த தகுதியும் கிடையாது. ஜீயர் என்ன ஆண்டாளின் அத்தாரிட்டியா? ஆண்டாளை இலக்கிய ரீதியில் இருந்துதான் விமர்சித்திருக்கிறார் வைரமுத்து. மன்னிப்பு கேட்க சொல்ல ஜீயர் யார்? நாஞ்சில் சம்பத் சொல்கிறேன் ஆண்டாள் ஏற்கனவே வைரமுத்துவை மன்னித்துவிட்டாள். ஆகவே இனி மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற பிரச்சனைக்கே இடமில்லை.

ஆண்டாள் தன்னுடைய பாசுரத்தில் சொல்லுகிறாள்

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றுமணிவிளக்கை
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசுஆகும் செப்புஏல்ஓர் எம்பாவாய்

என்று பாடியிருக்கிறாள்.

போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசுஆகும் செப்புஏல்ஓர் எம்பாவாய்

என்று சொன்ன மாத்திரத்திலேயே வைரமுத்துவை ஆண்டாள் மன்னித்துவிட்டாள். அதைத்தான் ஆண்டாளின் பாசுரம் நமக்கு உணர்த்துகிறது. ஆண்டாளின் பாசுரத்தையே உணர்ந்துகொள்ளாதவர்கள் ஜீயர்களாக இருப்பது வெட்கக்கேடு என்றார்.

-வே.ராஜவேல்

சார்ந்த செய்திகள்