Skip to main content

106 ஆண்டுகள் பழமையான பழ கேக் உண்ணும் நிலையில் கண்டுபிடிப்பு!

Published on 11/08/2017 | Edited on 11/08/2017
106 ஆண்டுகள் பழமையான பழ கேக் உண்ணும் நிலையில் கண்டுபிடிப்பு!

அண்டார்டிகாவில் உள்ள கேப் அடேர் பகுதியில், அண்டார்டிக் பாரம்பரிய அறக்கட்டளையின் சார்பில் ஒரு ஆய்வு மேற்கொண்டது. இந்தக் குழுவினரால், கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆய்வாளர் ஒருவர் தங்கியிருந்த வீட்டில் இருந்து 106 ஆண்டுகள் பழமையான பழ கேக் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அது உண்ணும் நிலையில் இருப்பதுதான்.



இந்த கேக் பிரிட்டிஷ் நாட்டின் ஹண்ட்லீ & பால்மர்ஸ் என்னும் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. இதனை அந்தப் பகுதிக்கு எடுத்துச் சென்றவர், 1910 - 1913 காலகட்டத்தில் டெர்ரா நோவா பயணம் மேற்கொண்ட ராபர்ட் ஃபால்கான் ஸ்காட் எனும் பிரிட்டிஷ் ஆய்வாளர் ஆவார். 2016-ஆம் ஆண்டிலிருந்து ஆய்வுமேற்கொண்டிருக்கும் ஒரு குழு, ராபர்ட் தங்கியிருந்த வீட்டில் இந்த கேக்கினைக் கண்டுபிடித்துள்ளனர்.

கடந்த நூறு ஆண்டுகளாக உறைநிலையில் இருந்த வீட்டிற்குள் உள்ள சமையலறையில், சில பொருட்கள் கிடைத்துள்ளன. அவற்றில் பல உபயோகப்படுத்த முடியாத நிலையில் இருந்துள்ளன. அவற்றில் மோசமான நிலையில் இருந்த ஒரு தகரப்பெட்டிக்குள் இந்த கேக் காகிதத்தில் சுற்றிவைக்கப்பட்டு இருந்துள்ளது. 

இந்த ஆய்வுக்குழுவின் தலைவர் லிஸ்ஸி மீக் ஆங்கில ஊடகமொன்றில் பேசியபோது, ‘வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த வீட்டில் நாங்கள் ஆய்வினை மேற்கொண்டிருந்தோம். அப்போது ஒரு சின்ன மேசையின் கீழ் இந்த தகரப்பெட்டி கிடைத்தது. அதைத் திறந்து பார்த்தபோது, நாங்கள் மிகப்பெரிய ஆச்சர்யத்திற்குள்ளானோம். அது உண்ணும் நிலையில் உள்ள ஒரு பழ கேக்! அது பார்ப்பதற்கு நேற்று தயாரித்ததைப் போல இருந்தது. அதன் வாசனை கெட்டுப்போன வெண்ணெயை ஒத்திருந்தது. ஆனாலும் அது மிகவும் அழகாக இருந்தது. 

கடந்த பல ஆண்டுகளாக அங்கு நிலவும் உறைநிலையும், அந்த சேதமடைந்த தகரப்பெட்டியும் தான் அந்த பழ கேக்கைப் பாதுகாத்திருக்கின்றன. இந்த வகை கேக்குகள் அண்டார்டிகாவின் உறைநிலையில் மிகுந்த சக்தியைக் கொடுக்கக்கூடியவை. இத்தனை வருடங்கள் உறைநிலையில் இருந்த இந்த கேக் என்ன சுவையில் இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது. ஏனென்றால், இதுமாதிரியான ஆய்வில் இருப்பவர்கள் கிடைக்கும் பொருட்களை சுவைத்துப்பார்க்கக் கூடாதல்லவா(?)’ என்கிறார் நகைச்சுவையாக.



தற்போது இந்த கேக் அது இருந்த இடத்திலேயே வைக்கப்பட்டுள்ளது. அங்கு செல்பவர்கள் அதைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கலாம். ஆண்டொன்றுக்கு நூற்றுக்கணக்கான சுற்றுலாப் படகுகள் கேப் அடேர் பகுதிக்கு செல்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

- ச.ப.மதிவாணன்

சார்ந்த செய்திகள்