Counterfeit currency printing issue Former VCK executive arrested

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ளது அதர்நத்தம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேற்கு மாவட்ட பொருளாளராகவும் பதவி வகித்து வந்தவருமான பரம செல்வத்திற்கு சொந்தமாக விளைநிலம் உள்ளது. இந்த நிலத்தில் ஷெட் அமைத்து கள்ளநோட்டு அச்சடிக்கப்பட்டு வருகிறது என ராமநத்தம் போலீசாருக்கு கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதி (31.03.2025) அதிகாலை ரகசியத் தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்கு 85 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 500 ரூபாய் கள்ளநோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதோடு அச்சடிக்கும் இயந்திரம், பணம் எண்ணும் இயந்திரம், வாக்கி டாக்கி மற்றும் ஏர்கன் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இது தொடர்பாக போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர். விளைநிலத்தில் கள்ளநோட்டுகள் அச்சடிக்கப்பட்டுக் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது.

Advertisment

இதற்கிடையே கள்ளநோட்டு விவகாரம் தொடர்பாக விசிக மேற்கு மாவட்ட பொருளாளர் பதவியில் இருந்து பரம செல்வம் நீக்கப்பட்டார். அதே சமயம் கள்ளநோட்டு அச்சடித்த வழக்கில் பரம செல்வம் போலீசார் தொடர்ந்து தேடப்பட்டு வந்தார். இந்நிலையில் ஒரு மாதத்திற்கு பிறகு பரம செல்வம் கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடகாவில் கூட்டாளியோடு தலைமறைவாக இருந்த செல்வத்தை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அவரோடு அவரது கூட்டாளிகள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து கைது செய்யப்பட்டவர்கள் தமிழகம் அழைத்து வரப்பட உள்ளதாக தமிழக காவல்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.