Skip to main content

ஆக்ஷன் கோதாவில் சூர்யா -ரெட்ரோ விமர்சனம்

Published on 01/05/2025 | Edited on 01/05/2025
nn

சூரரைப் போற்று, ஜெய் பீம் ஓடிடி ரிலீஸ்களுக்கு பிறகு மிகப்பெரிய வெற்றி படங்கள் எதுவும் கொடுக்காத நடிகர் சூர்யா இந்த முறை கார்த்திக் சுப்புராஜுடன் கூட்டணி அமைத்து ரெட்ரோ மூலம் மீண்டும் திரையரங்கில் ஒரு வெற்றி படம் கொடுக்க கோதாவில் குதித்து இருக்கிறார். அதில் அவருக்கு வெற்றி கிட்டியதா இல்லையா?

சிறுவயதிலிருந்தே சிரிக்கத் தெரியாத சூர்யா தனது அப்பா ஜூஜார்ஜுடன் இணைந்து கள்ளக் கடத்தல் அடிதடி என ரவுடிசம் செய்து வருகிறார். இவருக்கும் பூஜா ஹெக்டேவுக்கும் காதல் மலர்ந்து அது திருமணம் வரை சென்று விடுகிறது. பூஜா ஹெக்டேவிற்கோ சூர்யாவின் ரவுடிசம் பிடிக்கவில்லை. ரவுடிசத்தையும் விட்டுவிட்டால் தன்னை திருமணம் செய்து கொள்ளலாம் என சூர்யாவை வற்புறுத்துகிறார் பூஜா ஹெக்டே. பூஜாவுக்காக அனைத்தையும் துறந்து திருமணம் செய்யும் நேரத்தில் சூர்யாவை மீண்டும் அடிதடியில் இறக்குகிறார் அவரது தந்தை ஜோஜு ஜார்ஜ். இதனால் அவரை பூஜா பிரிந்து விட்டு அந்தமானுக்கு சென்று விடுகிறார். அதேசமயம் சூர்யாவிடம் ஜோஜு ஜார்ஜின் தங்க மீன் ஒன்று சிக்கி இருக்கிறது. அந்த தங்க மீனை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என எண்ணும் அவர் சூர்யாவை பல்வேறு விதங்களில் டார்ச்சர் செய்கிறார். இதற்கிடையே அந்த தங்க மீன் ஜோஜுவிடம் சிக்கியதா இல்லையா? பிரிந்த சூர்யா பூஜா ஒன்று சேர்ந்தார்களா இல்லையா? சூர்யா சிரிக்காமல் இருப்பதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன? என்பதே ரெட்ரோ படத்தின் மீதி கதை.

கார்த்திக் சுப்புராஜ் வழக்கம்போல் தனது ட்ரேட்மார்க்கான ஒரு கேங்ஸ்டர் படத்தை சூர்யாவை வைத்து இயக்கியிருக்கிறார். படத்தின் மேக்கிங் மற்றும் ஸ்டண்ட் காட்சிகள் மூலம் உலகத்தரம் வாய்ந்த ஒரு படத்தை கொடுத்திருக்கும் கார்த்திக் சுப்புராஜ் திரைக்கதையில் ஏனோ சற்றே தடுமாறி இருக்கிறார். ஒரே படத்தில் மூன்று விதமான கோணத்தில் கதை பயணிக்கிறது. அதில் எந்த கதையை நாம் பாலோ செய்ய வேண்டும் என்ற சந்தேகம் பார்ப்பவர்களுக்கு ஏற்படுகிறது. ஒவ்வொரு கதைகளுக்கும் இடையே இருக்கும் கிளை கதைகளும் அதை ஒன்றிணைக்க கச்சிதமாக சேர்க்கப்பட்டிருந்தாலும் படத்தின் நீளமும் சொல்ல வந்த விஷயத்தை விட்டுவிட்டு வேறு வேறு பாதையில் கதை செல்வதும் பார்ப்பவர்களுக்கு சற்று அயர்ச்சியை கொடுத்திருக்கிறது. கதைக்கான காரணத்தை திரைக்கதைக்குள் அழுத்தமாகவும் ஆழமாகவும் சொன்ன இயக்குனர் இந்த கால ட்ரெண்டுக்கு ஏற்ப ஒரு கேங்ஸ்டர் படமாக கொடுத்திருப்பது இளைஞர்களை தவிர்த்து மற்றவர்களை கவர மறுத்து இருக்கிறது. மற்றபடி படத்தை எடுத்த விதம் காட்சிகள் திரைக்கதை வேகம் இசை மேக்கிங் என அனைத்தையும் பிரம்மாண்டமாகவும் விறுவிறுப்பாகவும் கொடுத்த கார்த்திக் சுப்புராஜ் திரைக்கதைக்கு இன்னமும் கூட முக்கியத்துவம் கொடுத்து அவருடைய மற்ற படங்களைப் போல் இன்னமும் விறுவிறுப்பாக கொடுத்து இருக்கலாம். அதேபோல் படத்தில் வரும் காட்சி அமைப்புகள் பல இடங்களில் குழப்பத்தை உண்டு செய்வது பார்ப்பவர்களுக்கு சில விஷயங்கள் புரியாத வண்ணம் இருக்கிறது. மற்றபடி காதல் காட்சிகள் கார்த்திக் சுப்புராஜுகே உண்டான ட்ரீட் மார்க் காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டு படத்தையும் கரை சேர்க்க உதவி இருக்கிறது.

சூர்யா இந்த படத்தில் வேறு ஒரு சூர்யாவாக தெரிகிறார். தனக்கு என்ன வருமோ அதை எல்லாம் செய்து விட்டு அதற்கு மேலும் என்னவெல்லாம் கதாபாத்திரத்திற்கு வலு சேர்க்க முடியுமோ அதையெல்லாம் தன் உடல் பொருள்  ஆவி என அனைத்தையும் கொடுத்து சிறப்பான பங்களிப்பை அளித்திருக்கிறார். இவரது நடிப்பு அந்த கதாபாத்திரத்தை இன்னமும் மேலே தூக்கிச் சென்று தியேட்டரில் கைதட்டல்களை கொடுத்திருக்கிறது. குறிப்பாக ஆக்சன் காட்சிகள் மற்றும் காதல் காட்சிகளில் வேற லெவலில் மாஸ் காட்டியிருக்கிறார். நாயகி பூஜா ஹெக்டே அமைதியான பெண்ணாக வந்து நம்மை அப்படியே கவர்ந்து இழுத்துச் சென்றிருக்கிறார். இவரது மெச்சூரிட்டியான நடிப்பு கதாபாத்திரத்திற்கு நன்றாக வலு சேர்த்து இருக்கிறது. குறிப்பாக இவருக்கும் சூர்யாவுக்கும் ஆனா கெமிஸ்ட்ரி வேற லெவல். அதுவே படத்துக்கு உயிராக அமைந்து பார்ப்பவர்களை உயிர்ப்புடன் வைத்துக் கொள்ள உதவி இருக்கிறது. படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக வரும் ஜோஜு ஜார்ஜ், நாசர், ஜெயராம், விது, ராமச்சந்திரன் துரைராஜ், பிரகாஷ்ராஜ், கஜராஜ், தமிழ் ஆகியோர் அவரவர் வேலையை சிறப்பாக செய்து காட்சிகளுக்கும் கதாபாத்திரத்திற்கும் வலு சேர்த்து படத்தையும் கரை சேர்க்க உதவி இருக்கின்றனர். குறிப்பாக வில்லன் விதுவின் கதாபாத்திரம் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டு அதற்கு அவர் நன்றாகவே நியாயமும் செய்திருக்கிறார். அவருடைய சிரிப்பு அழகாக இருக்கிறது. கடமைக்கு வந்து செல்கின்றனர் சிங்கம் புலி மற்றும் கருணாகரன் ஆகியோர். அவர்கள் படத்தில் எதற்காக இருக்கின்றனர் என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.

கனிமா, கண்ணால உட்பட பாடல்கள் மூலம் தியேட்டர் மூவ்மெண்ட்சை சிறப்பாக கொடுத்து இருக்கிறார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். இவரது பாடல்கள் ஒரே நேரத்தில் குத்தாட்டம் போடவும் முனகவும் வைத்து பார்ப்பவர்களுக்கு நல்ல ட்ரீட்டாக கொடுத்திருக்கிறது. அதேசமயம் பின்னணி இசையும் ஹாலிவுட் தரத்தில் சிறப்பாக கொடுத்து படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறார். இவரது பின்னணியை செய் படத்தை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு சந்தோஷ் நாராயணனிடம் இருந்து ஒரு நல்ல இசை வெளிப்பட்டிருக்கிறது. ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில் காட்சிகள் உலகத்தரம். குறிப்பாக முதல் 20 நிமிடம் வரும் சிங்கள் ஷாட் பாடல் மற்றும் சண்டைக் காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டு படத்துடன் நம்மை ஒன்ற வைத்துள்ளது. இவரது நேர்த்தியான ஒளிப்பதிவு படத்தை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்று இருக்கிறது. படத்தின் இன்னொரு நாயகன் ஸ்டண்ட் காட்சிகள். இந்தப் படத்தின் ஸ்டண்ட் இயக்குனர் மிக மிக சிறப்பாக ஸ்டண்ட் காட்சிகளை அமைத்து பார்ப்பவர்களுக்கு ஒரு நல்ல ஆக்சன் படம் பார்த்த உணர்வை கொடுத்திருக்கிறார். இவரது இந்த படத்திற்கான ஸ்டண்ட் கண்டிப்பாக விருது பெறும்.

படத்தின் மேக்கிங் ஒலிப்பதிவு பாடல்கள் ஆக்சன் காட்சிகள் என அனைத்துமே சிறப்பாக கொடுத்து ஒரு மூன்று மணி நேர ஆக்சன் கேங்ஸ்டர் படமாக கொடுத்த இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் திரைக்கதையில் இன்னும் கூட தெளிவும் வேகமும் கூட்டி இருந்தால் இன்னமும் இந்த படம் சிறப்பாக அமைந்திருக்கும்.


ரெட்ரோ - ஸ்டைலிஷ்!

சார்ந்த செய்திகள்