
உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதனை லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் நேரில் கண்டு களிப்பர். தங்கக் குதிரையில் கம்பீரமாக வலம் வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது. மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு வரும் 12ஆம் தேதி (12.05.2025) சித்திரா பௌர்ணமி அன்று நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியின் போது ஏராளமான பக்தர்கள் நேர்த்திக் கடனாகக் கள்ளழகர் மீது தண்ணீரைப் பீச்சை அடிப்பது வழக்கம். அதே சமயம் கடந்த சில ஆண்டுகளாக அதிக விசைத்திறன் கொண்ட குழாய்கள் மூலம் தண்ணீர் பீச்சி அடிக்கப்படுவதால் சிலை சேதமடைய வாய்ப்புள்ளது எனவும், கோவில் பட்டர்கள் மீதும் அதிகமான தண்ணீர் பீச்சி அடிக்கப்படுவதால் மிகுந்த சிரமம் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனைக் கருத்தில் கொண்டு கருதி இந்த ஆண்டு கோவில் நிர்வாகம் சார்பில் இது த் தொடர்பாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், “அதிக விசைத் திறன் கொண்ட பைப்புகள் மூலம் தண்ணீரைப் பீச்சி அடிக்கக்கூடாது வேதிப் பொருட்கள் மற்றும் வாசனைத் திரவியங்கள் அடங்கிய தண்ணீரை அழகர் உச்சவ சிலை மீது அடிக்கக்கூடாது எனப் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.
எனவே தண்ணீரைப் பீச்சி அடிப்பதற்காக விரதம் இருக்கும் பக்தர்கள் ஐதீக முறைப்படி குறைந்த விசைத் திறன் கொண்ட பைப்புகள் மூலம் தண்ணீரைப் பீச்சை அடித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்துமாறு கோவில் நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் இது தொடர்பாக மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அப்போது இந்த மனுவை விசாரித்து உயர்நீதிமன்றம், “அப்பொழுது அதிக திறன் விசை கொண்ட பம்புகளை பயன்படுத்தக் கூடாது. நீரில் வேதிப்பொருள் கலக்கக் கூடாது” என உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.