Skip to main content

முதிய தம்பதிகளை கொலை செய்து நகைக் கொள்ளை; அண்புமணி கண்டனம்!

Published on 02/05/2025 | Edited on 02/05/2025

 

Anbumani condemns incident and jewelry robbery of an elderly couple

தமிழகத்தில் அடுத்தடுத்து நடக்கும் கொலைகளும், அதற்குக் காரணமானவர்கள் கண்டுபிடிக்கப்படாததும் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இது  தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரோடு மாவட்டத்தின் விளாங்காட்டு வலசு கிராமத்தில் தோட்டத்து வீட்டில்  தனியாக  வாழ்ந்து  வந்த முதிய  இணையரான ராக்கியப்பன், பாக்கியம்  ஆகியோரை கொள்ளையர்கள் அடித்துக் கொலை செய்து விட்டு,  15 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர் என்ற செய்தியறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும்  தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் அண்மைக்காலமாகவே பணம், நகைக்காக வயது முதிர்ந்த இணையர்கள் படுகொலை செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள சேமலைக்கவுண்டன்பாளையம் கிராமத்தில் தோட்டத்து வீட்டில் வசித்து வந்த 78 வயது தெய்வசிகாமணி, அவரது மனைவி அலமாத்தாள், செந்தில்குமார் ஆகிய மூவரும் கடந்த நவம்பர் 28-ஆம் தேதி  கொடூரமாக படுகொலை செய்யப்பட்டு, நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த நிகழ்வு நடந்து 150 நாள்களுக்கு மேலாகியும் இதுவரை துப்பு துலங்கவில்லை.

அடுத்தடுத்து நடக்கும் கொலைகளும், அதற்குக் காரணமானவர்கள் கண்டுபிடிக்கப்படாததும் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையை மாற்றி மக்களிடம் நம்பிக்கையையும், பாதுகாப்பு  உணர்வையும் ஏற்படுத்த வேண்டியது  தமிழக அரசின் கடமை ஆகும். இதை உணர்ந்து தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்”  எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்