
விழுப்புரம் அருகே உள்ள ஆண்டிபாளையம் கிராமத்தில் வடிவேலு என்பவரின் வீட்டுக்கு அருகே மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் வாலிபர் ஒருவர் கழுத்தறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். அந்த வழியாக சென்ற பொதுமக்கள் வாலிபரின் சடலத்தை பார்த்துவிட்டு வளவனூர் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து போன வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்த வாலிபரின் முகத்திலும் உடலிலும் ரத்தக்காயங்கள் இருந்துள்ளன. அவர் யார், எந்த ஊர் என்பது குறித்த விபரங்கள் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை. கொலை செய்யப்பட்ட வாலிபர் சுமார் 30 வயது இருக்கலாம் என்றும், நள்ளிரவு நேரத்தில் வெளியூர்களில் இருந்து அந்த வாலிபரை இங்கு கொண்டு வந்து கொலை செய்து விட்டு காரிலோ அல்லது வேறு வாகனங்களிலோ குற்றவாளிகள் தப்பிச்சென்று இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
கொலை செய்யப்பட்டு கிடந்த வாலிபர் எந்த ஊர், எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பதை கண்டறிவதற்காக விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் காணாமல் போனவர்கள் குறித்த விபரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். விழுப்புரம் அருகே இரவு நேரத்தில் வாலிபர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.