
திமுக ஆட்சி அதிகாரத்திற்குள் வந்து ஏறக்குறைய இரண்டு வருடங்களுக்குள் எதிர்பாராத விதமாக வந்ததுதான் இந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல். ஏற்கனவே வழங்கியது போல் காங்கிரஸ் கட்சிக்கு இத்தொகுதியை திமுக கொடுத்தது. இத்தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேராவின் தந்தையான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
இந்த தொகுதியில் தேர்தல் ஆணையம் அறிவிப்பு கொடுத்த அடுத்த நாளே தேர்தல் பணியை தொடங்கியவர் திமுகவின் மாவட்டச் செயலாளரான அமைச்சர் முத்துசாமி, வேட்பாளர் யார் என்ற அறிவிப்பு வராததற்கு முன்பே கட்சியினரோடு தொகுதிக்குள் மக்களிடம் வாக்கு கேட்க தொடங்கிவிட்டார். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அமைச்சர் முத்துசாமி மக்களிடம் வாக்கு கேட்க சென்று கொண்டே இருக்கிறார். அமைச்சர் கே.என் நேரு, செந்தில் பாலாஜி, போன்றவர்களும் ஈரோடு வந்து மக்களிடம் வாக்கு கேட்டார்கள். அதேபோல் அமைச்சர் ஆவடி நாசர், காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வப் பெருந்தகை ஆகியோரும் 27ஆம் தேதி ஈரோட்டுக்கு வந்து வாக்கு வேட்டையில் ஈடுபட்டார். தொடர்ந்து ஈரோட்டில் திமுக தரப்பு கூட்டணி என்ற பாகுபாடெல்லாம் இல்லாமல் வேட்பாளர் திமுக தான் என்ற உணர்வோடு வாக்கு கேட்டு வருகிறார்கள்.