15 இந்தியர்களின் தூக்கு ரத்து!
குவைத் நாட்டில் ஏராளமான இந்தியர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர். இந்த சூழலில் பல்வேறு குற்றங்களில் சிக்கி ஏராளமான இந்தியர்கள் குவைத் சிறையில் அடைக்கப்ப ட்டிருந்தனர். இவர்களில் 15 பேருக்கு அந்நாட்டு அரசு தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டிருந்தது. மேலும் பலர் இன்னும் குவைத் சிறையில் அடைபட்டுள்ளனர்.
இந்த சூழலில் குவைத் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் தண்டனையை குறைக்க வேண்டும் என மத்திய அரசு சார்பில் வெளியுறவுத்துறை வேண்டுகோள் விடுத்தது. இந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட குவைத் அரசு 15 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய முடிவு செய்தது. இதையடுத்து 15 பேருக்கும் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து அந்நாட்டு மன்னர் ஷேக் ஜாபர் அல் அகமது அல் சபா உத்தரவிட்டார்.
மன்னரின் உத்தரவின் பேரில் இந்தியர்களின் தண்டனை குறைக்கப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் சுஷ்மா தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் குவைத் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 119 இந்தியர்களின் தண்டனையை குறைக்கவும் அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு குவைத் அரசுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் சுஷ்மா தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.