
தேனி அருகேயுள்ள வடபுதுப்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் பங்கேற்று பி.எட் பயிற்சி முடித்த பயிற்சி ஆசிரியர்களுக்கு பட்டமளித்து கௌரவித்தார். தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் உரையாற்றினார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் இஸ்ரோ தலைவர் நாராயணன் பேசுகையில், ''சந்திரயான்-2 செயற்கைக்கோள் வெற்றியடையாமல் போனது குறித்து கண்டறிய 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு ஒரு மாத காலமாக தூக்கம் இன்றி கடுமையாக உழைத்து 8 மாதங்களில் செய்கின்ற பணியை ஒரு மாதத்தில் முடித்து பின் சந்திரயான்-3 செயற்கைக்கோளை வெற்றிகரமாக நிறைவேற்றினோம்.
சந்திரயான்-4 திட்டம் 9,600 கிலோ கிராம் எடை கொண்டது. சந்திரயான்-3 திட்டம் நிலவில் தரையிறங்கி 14 நாட்கள் மட்டுமே ஆய்வு செய்தது. ஆனால்சந்திராயன்-4 நிலவில் இறங்கி ஆழமாகச் சென்று மாதிரிகளை எடுத்துக்கொண்டு மீண்டும் பூமிக்கு திரும்பும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகளில் செயல்பட்டு வருகிறோம்.
மேலும் சந்திராயன்-5 திட்டம், சந்திராயன்-3 போல் ஒரு லேண்டர். இது 100 நாட்கள் நிலவில் ஆய்வு செய்யும் வகையில் உருவாக்கப்படுகிறது. நிலவிற்கு மனிதர்களை அனுப்பும் பெரிய திட்டம் 2040ஆம் ஆண்டில் நடைபெறும். அதற்கான பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இஸ்ரோவின் மூன்றாவது ஏவுதள மையம் ஶ்ரீ ஹரிஹோட்டாவில் அமைக்க உள்ளோம். இரண்டாவது ஏவுதளம் மையம் குலசேகரப்பட்டினத்தில் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக 95% இடங்களை தமிழக அரசு ஒதுக்கி தந்துள்ளது. 2026 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் குலசேகரப் பட்டினத்தில் இருந்து ராக்கெட் விண்ணில் ஏவப்படும்'' என்று கூறினார்.