புற்றுநோய்க்கு முட்டையில் மருந்து: ஜப்பான் விஞ்ஞானிகளின் சாதனை
வரும்காலத்தில் புற்றுநோய் உள்ளிட்ட சில நோய்களை முட்டையை வைத்தே சிகிச்சையளிக்க முடியும். என்ன நம்புவதற்கு சிரமமாக இருக்கிறதா?
ஜப்பான் கான்சாய் பகுதியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தற்சமயம் அந்த ஆராய்ச்சியில்தான் இருக்கிறார்கள். இதற்காக மரபணுரீதியாக மாற்றம் செய்து கோழிகளை வளர்க்கிறார்கள். இத்தகைய கோழிகள் இடும் முட்டையில் சில வகை புற்றுநோய்கள், திசு இறுக்கம் எனும் செலரோஸிஸ் நோய்களைக் குணப்படுத்தும் மருந்துப் பொருள் காணப்படும்.

நச்சுயிர்ப் பெருக்கத்தைத் தடுக்கும் இன்டர்பெரான் பீட்டா எனும் ஒருவகை புரதம் இந்த முட்டையில் காணப்படும். செலரோஸிஸ், புற்றுநோய்களைக் குணப்படுத்த இந்தப் புரதம் உதவும். விஞ்ஞானிகள் தற்சமயம் இன்டர்பெரான் பீட்டா கொண்ட முட்டைகளை இடும் மூன்று கோழிகளை உருவாக்கியுள்ளனர்.
இந்த ஆராய்ச்சியெல்லாம் முடிந்து, மருத்துவரீதியான அனுமதியையெல்லாம் பெற்று நடைமுறைக்கு வருவதற்கு சில வருடம் ஆகுமாம். அப்போது இத்தகைய நோய்களுக்கான மருந்துகளின் விலை கணிசமாகக் குறையும் என்கிறார்கள்.
லேபரட்டரியில் மருந்து உருவாக்கிய காலம்போய் முட்டையிலேயே மருந்தை வளர்க்கும் காலம் வந்துவிட்டது. இன்னும் கொஞ்சம் நாள்போனால் தக்காளி, வெங்காயத்திலேயே காய்ச்சல் முதல் கான்சர் வரை அனைத்து நோய்களுக்கும் மருந்துப் பொருளுடன் வளர்க்கும் காலம் வந்தாலும் வரலாம்.