Skip to main content

“31 லட்சம் வேலை வாய்ப்பை உருவாக்க ரூ.9.74 கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளோம்” - முதல்வர் ஸ்டாலின்

Published on 21/08/2024 | Edited on 21/08/2024
We have attracted investments of Rs 9.74 crore to create 31 lakh jobs says cm stalin

சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று  (21.08.2024)  முதல் ‘தமிழ்நாடு முதலீட்டு மாநாடு- 2024’ நடைபெற்று வருகிறது. முதலீட்டாளர்கள் மாநாட்டில் முடிவுற்ற 19 புதிய திட்டங்களை  முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ரூ. 51,157 கோடி மதிப்பிலான 28 தொழில் திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். 

இதனைத் தொடர்ந்து முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “நமது பொருளாதார திறனை உலகு எடுத்துக்காட்டும் நாளாக இந்த நாள் அமைந்துள்ளது. ஜனவரியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தினோம். மாநாடுகள் மூலம் எவ்வளவு முதலீடுகளை ஈர்த்துள்ளோம் என்பதில் தான் வெற்றி அடங்கியுள்ளது.

3 ஆண்டுகளில் 31 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் வகையில் ரூ.9.74 கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளோம். இன்று நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் 19 வகையிலான திட்டங்களைத் தொடங்கி வைத்துள்ளேன். ரூ.51,157 கோடி மதிப்பீட்டில் 28 வகையான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளேன்.  இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ள திட்டங்கள் மூலம் 1 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

தமிழ்நாட்டில் நிம்மதியாகத் தொழில் நடத்தலாம் என்ற நம்பிக்கை முதலீட்டாளர்களுக்கு வந்துள்ளது. தொழில்துறையினர் மத்தியில் ஏற்பட்டுள்ள நம்பிக்கையின் அடையாளமாகக் கடந்த 3 ஆண்டுகளில் ஏராளமான முதலீடுகள் வந்துள்ளன. தமிழ்நாட்டில் தொழில் தொடங்கியுள்ள தொழிலதிபர்கள் தங்களுக்குத் தெரிந்த நிறுவனங்களையும் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைக்க வேண்டும்.

அனைத்து துறை வளர்ச்சி, அனைத்து சமூக வளர்ச்சி, அனைத்து மாவட்டங்கள் வளர்ச்சி எனத் தமிழ்நாட்டில் பரவலான மற்றும் நிலையான வளர்ச்சியை ஏற்படுத்துவதை உறுதிசெய்வதே திமுக அரசின் நோக்கம். இந்தியாவிலேயே திறன் மிகு தொழிலாளர்களைக் கொண்ட மாநிலம், அதிக பெண் தொழிலாளர்களைக் கொண்ட மாநிலம் தமிழ்நாடு. அதேபோல் நாட்டிலேயே தொழில் தொடங்க பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என்பது உலகுக்கே தெரியும்.” என்றார்.

சார்ந்த செய்திகள்