Headmaster gets 47 years in jail

சிவகங்கையில் பள்ளி சிறுமிகள் ஆறு பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமை ஆசிரியருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

Advertisment

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே உள்ளது பெரிய நரிக்கோட்டை கிராமம். இங்கு செயல்பட்டு வரும் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காளையார் கோவில் அண்ணா நகர்ப் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். கடந்த 2015 ஆம் ஆண்டு அதே பள்ளியில் பயின்ற ஆறு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. பாதிக்கப்பட்ட சிறுமியின் பாட்டி ஒருவர் இது தொடர்பாக சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

Advertisment

அந்த புகார் அடிப்படையில் தலைமை ஆசிரியரை விசாரித்த பொழுது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கினை நடத்தி வந்தனர். தொடர்ந்து இந்த வழக்கில் பல கட்டங்களாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சரத்ராஜ் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளார். தீர்ப்பில் ஆறு குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் முருகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை, 47 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.

இந்த குற்றத்திற்கு அபராதத்தொகையாக 69 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட ஆறு சிறுமிகளுக்கும் தமிழ்நாடு அரசு சார்பில் 29 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

Advertisment