Skip to main content

புயலுக்கு தஞ்சம் புகுந்த இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

Published on 10/12/2022 | Edited on 10/12/2022

 

 Two people who took refuge in the storm were electrocuted

மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று நள்ளிரவு பலத்த காற்று வீசியது. அதிகாலை வேளையில் புயல் கரையைக் கடக்கத் தொடங்கியது. வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்பு படி புதுச்சேரி-ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரத்திற்கு அருகே புயல் கரையைக் கடந்தது. இதனால் சென்னை பெருநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பலத்த காற்று வீசியது.

 

கடந்த 121 ஆண்டுகளில் சென்னை-புதுச்சேரி இடையே கரையேறிய 13 வது புயல் இது ஆகும். இதன் காரணமாக சென்னையுடன் புதுச்சேரியை இணைக்கும் ஈசிஆர் சாலையில் தற்காலிகமாகப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மேலும் சென்னையின் பல இடங்களில் மரங்கள் சாலையில் விழுந்து கிடந்தது. பல இடங்களில் மின் இணைப்பும் தடைப்பட்டது. தொடர்ந்து சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

 

இந்நிலையில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த இருவர் உயிரிழந்த சம்பவம் சென்னையில் நிகழ்ந்துள்ளது. சென்னை மடிப்பாக்கம் ராம்நகர் 7 மெயின் ரோட்டில் உள்ள வாகனம் நிறுத்தும் இடத்தில்  அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த லட்சுமி, அவரது அண்ணன் மகன் ராஜேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். புயலின் போது குடிசை வீட்டிலிருந்த இவர்கள் பாதுகாப்பிற்காக மற்றொரு வீட்டு வாகனம் நிறுத்தும் இடத்திற்கு தஞ்சம் புகுந்து சென்ற நிலையில், தூங்குவதற்குப் பாய் எடுத்து வரும்போது அறுந்து கிடந்த மின் கம்பியின் மீது இரண்டு பேரும் கால் வைத்ததால் இருவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்