Kamal Haasan says Kannada was born out of Tamil, faces backlash

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தக் லைஃப்’. இப்படத்தில் சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, அபிராமி, நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜ்கமல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை கமலுடன் இணைந்து ரெட் ஜெயண்ட் நிறுவனம் வழங்குகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம் வருகிற ஜூன் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதையொட்டி படக்குழுவினர் புரொமோட் செய்யும் பணிகளில் கடந்த சில வாரங்களாக படு பிஸியாக இருக்கின்றனர்.

Advertisment

அந்த வகையில் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 24ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக கன்னட முன்னணி நடிகர் சிவ ராஜ்குமார் பங்கேற்றார். இவர் குறித்து மேடையில் பேசிய கமல், “கன்னடத்தில் இருந்து இங்கு வந்த சிவ ராஜ்குமார், என் மகனாகவும் ரசிகனாகவும் உங்கள் பிரதிநிதியாகவும் வந்திருக்கிறார்” என்றார். பின்பு அவரது தந்தை ராஜ்குமார் குறித்து தனது அனுபவங்களை குறிப்பிட்டு, சிவ ராஜ்குமாரை பார்த்து, “இவர் அந்த ஊரில் இருக்கும் என் குடும்பம். அதனால் தான் என் பேச்சை ஆரம்பிக்கும் போது, உயிரே, உறவே, தமிழே என ஆரம்பித்தேன். தமிழில் இருந்து பிறந்தது தான் உங்கள் பாஷையும். அதனால் நீங்களும் அதில் உட்படுவீர்கள்” என்றார்.

Advertisment

கமலின் இந்த பேச்சுக்கு, கர்நாடகாவில் தற்போது எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கன்னட மொழியை அவமதித்து விட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. பா.ஜ.க. கர்நாடக மாநிலத் தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா தனது எக்ஸ் பக்கத்தில், “தாய்மொழியை நேசிக்க வேண்டும், ஆனால் அதன் பெயரில் அவமரியாதை செய்வது பண்பாடற்ற செயல். குறிப்பாக கலைஞர்கள் ஒவ்வொரு மொழியையும் மதிக்கும் பண்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும். கன்னடம் உட்பட பல இந்திய மொழிகளில் நடித்த கமல்ஹாசன் தனது தமிழ் மொழியைப் போற்றும் போது, சிவ ராஜ்குமார் உட்பட கன்னட மொழியை அவமதித்துள்ளார். இது ஆணவத்தின் உச்சம்.

Kamal Haasan says Kannada was born out of Tamil, faces backlash

இந்தியா உட்பட உலகின் பல பகுதிகளில் பல நூற்றாண்டுகளாகக் கன்னடம் ஒரு முக்கிய மொழியாக இருந்து வருகிறது. கன்னடம் உலகின் மிகவும் மதிக்கப்படும் மொழி என்பதை கமல்ஹாசன் போன்ற குறுகிய மனப்பான்மை கொண்டவர்கள் அறிந்திருக்க வேண்டும். கன்னடத்தை அவமதிப்பதற்கு முன்பு கன்னட படங்களிலும் நடித்த கமல்ஹாசன், கன்னட மொழி மற்றும் கன்னட மக்களின் தாராள மனப்பான்மையை மறந்து, நன்றியற்ற ஆளுமையை வெளிப்படுத்தியுள்ளார். தென்னிந்தியாவிற்கு நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டிய கமல்ஹாசன், கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து இந்து மதத்தை அவமதித்து, மத உணர்வுகளைப் புண்படுத்தி வருகிறார். இப்போது, ​​6.5 கோடி கன்னடர்களின் சுயமரியாதையைப் புண்படுத்தி கன்னடத்தை அவமதித்துள்ளார். கமல்ஹாசன் உடனடியாக கன்னடர்களிடம் நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்க வேண்டும்.

Advertisment

ஒரு மொழி இன்னொரு மொழியில் இருந்து பிறந்தது என்று சொல்வதற்கு கமல்ஹாசன் ஒரு வரலாற்றாசிரியர் அல்ல. கன்னட மொழி, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டது. மேலும் இந்திய வரைபடத்தில் நல்லிணக்கத்தைக் கொண்டது” எனக் குறிப்பிட்டுள்ளார். இவரை தவிர்த்து கன்னட ரக்‌ஷன வேதிகே அமைப்பு உள்ளிட்ட சில கன்னட அமைப்புகளும் கமல்ஹாசனுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் அவர்கள் பெங்களூருவில் தக் லைஃப் பட ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் அதற்காக வாழ்த்தி வைத்திருந்த ரசிகர்களின் பேனர்கள் மற்றும் போஸ்டர்களை கிழித்து, கமல்ஹாசனுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதனால் அப்பகுதி சிறிது பரபரப்புடன் காணப்பட்டது.