Skip to main content

“அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் 157 நாளில் தீர்ப்பு” - இ.பி.எஸ்-க்கு கனிமொழி பதிலடி

Published on 28/05/2025 | Edited on 28/05/2025

 

Kanimozhi responds to EPS on Anna University student issue

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியில் நடந்த பொள்ளாச்சி பாலியல் வழக்கையும், திமுக ஆட்சியில் நடந்த அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கையும் ஒப்பிட்டு எடப்பாடி பழனிச்சாமியை திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. கடுமையாகத் தாக்கியிருக்கிறார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரன் மீது சுமத்தப்பட்ட 12 குற்றச்சாட்டுகளில், 11 குற்றச்சாட்டுகள் நிரூபணமாகி உள்ளதாக சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்கிறது. ஜூன் 2-ம் தேதி தண்டனை விவரங்களை அளிப்பதாக நீதிபதி அறிவித்திருக்கிறார். கடந்த டிசம்பரில் நடந்த நிகழ்வில் மிகத் துரிதமாகக் குற்றவாளியைக் கண்டுபிடித்து, குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்து, வழக்கு விசாரணையை முடித்து, குற்றவாளிக்குத் தண்டனையையும் பெற்றுக் கொடுத்திருக்கிறது தமிழக காவல் துறை.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த டிசம்பர் 23-ம் தேதி அதே பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். உடனே குற்றவாளி ஞானசேகரனை போலீஸ் கைது செய்தது. 3 பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்புக் குழு, வழக்கை விசாரித்தது. பாலியல் வழக்கு மட்டுமல்லாது, ஏற்கெனவே ஞானசேகரன் மீதான திருட்டு, ஆள் கடத்தல், வீடு புகுந்து கொள்ளையடித்தல் உள்ளிட்ட பல வழக்குகளையும் காவல் துறை விசாரித்தது. மார்ச் மாதம் முதல் விசாரணை தொடங்கியது. தினந்தோறும் என்ற அடிப்படையில் ஏப்ரல் 23-ம் தேதி முதல் சாட்சிகள் விசாரணை நடைபெற்றது. பாதிக்கப்பட்ட மாணவி உள்பட 29 பேர் சாட்சியம் அளித்தனர். 75 சான்று ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

சம்பவம் நடந்த நாளிலிருந்து சரியாக 157-ஆவது நாளில் குற்றவாளியின் தண்டனையை உறுதி செய்திருக்கிறது தமிழகக் காவல் துறை. இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில், சி.பி.ஐ விசாரணையை கேட்ட போது, ‘சிபிஐ விசாரணை தேவையில்லை’ என டி.ஜி.பி அறிக்கை தாக்கல் செய்தார். சிபிஐ கூட இவ்வளவு துரிதமாக விசாரித்திருக்க முடியுமா? எனக் கேட்கும் அளவுக்கு இந்த வழக்கைத் தமிழகக் காவல் துறை மிகச் சிறப்பாக நடத்தி குற்றவாளியின் குற்றத்தை நிரூபித்திருக்கிறது.

இந்த வழக்கு தொடர்பாகக் கடந்த ஜனவரி 8-ம் தேதி சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, ‘’இந்த வழக்கின் குற்றவாளி மீது தயவுதாட்சணியம் இல்லாமல் காவல்துறை நடவடிக்கை எடுக்கும். இந்த வழக்கில் 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். விரைவு நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிக்கு உச்சபட்சத் தண்டனை கிடைக்கும்’’ என்று சொன்னார். அதனைச் செய்து காட்டியிருக்கிறார். அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் தீர்ப்பு வெளியாவதற்கு 15 நாட்களுக்கு முன்புதான், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்குச் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அந்த வழக்கோடு அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கையும் கொஞ்சம் ஒப்பிட்டுப் பாருங்கள்.

எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் நடந்த பொள்ளாச்சி பாலியல் வழக்கு நாட்டையே உலுக்கியது. பொள்ளாச்சி பாலியல் குற்றச் சம்பவம் கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை நடைபெற்றாலும், 2019-ம் ஆண்டுதான் வெளிச்சத்துக்கு வந்தது. அன்றைக்குத் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் பொள்ளாச்சி பாலியல் வழக்கை வெளிக் கொணராமல் போயிருந்தால் அன்றைய எடப்பாடி பழனிசாமி அரசு விவகாரத்தை மூடி மறைத்திருக்கும். அதிமுகவினர் சம்பந்தப்பட்டிருந்ததால் வழக்கைப் பதியாமல் இழுத்தடித்ததோடு பாதிக்கப்பட்ட மாணவியின் அண்ணனையே தாக்க முயன்றார்கள்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு கடந்த வந்த பாதையைக் கொஞ்சம் திரும்பிப் பாருங்கள்:

2019 பிப்ரவரி 24 - கல்லூரி மாணவி புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்து 3 பேரைக் கைது செய்தனர்.

2019 மார்ச் 4 - முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு கைது.

2019 மார்ச் 12 - சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றம்.

2019 ஏப்ரல் 27 - வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்.

2019 மே 21 - முதல் குற்றப்பத்திரிகை தாக்கல்.

2021 ஜனவரி 6 - இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல்.

2023 பிப்ரவரி 24 - சாட்சி விசாரணை தொடங்கியது.

2024 பிப்ரவரி 23 – குற்றவாளிகள், சாட்சியங்களிடம் தினமும் விசாரணை நடைபெற்றது. 

2025 மே 13 – தீர்ப்பு.

2019 பிப்ரவரி தொடங்கி 2025 மே மாதம் வரையிலான ஆறரை ஆண்டுகள் பொள்ளாச்சி பாலியல் வழக்கு நடைபெற்றது. இத்தனைக்கும் அந்த வழக்கை விசாரித்தது சிபிஐ. ஆனால், அண்ணா பல்கலைக்கழக வழக்கை விசாரித்தது தமிழகக் காவல் துறை. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நியாயம் கிடைக்க ஆறரை ஆண்டு ஆனது. அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் 157 நாளில் தீர்ப்பை பெற்றுக் கொடுத்திருக்கிறோம். 2019 முதல் 2021 மே வரையில் எடப்பாடி பழனிசாமிதான் ஆட்சியில் இருந்தார். பொள்ளாச்சி பாலியல் வழக்கை அவர் நடத்திய லட்சணத்தை இந்த நாடறியும்" என்று காட்டமாகச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

சார்ந்த செய்திகள்