
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் தேதி (23.12.2024) அப்பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த கொடூர சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் மறுநாளே கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் (வயது 37) என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாகச் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தியது. இந்த குழுவின் பரிந்துரையின் பேரில் கடந்த ஜனவரி மாதம் 5ஆம் தேதி ஞானசேகரன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதனையடுத்து கடந்த 20ஆம் தேதி இந்த வழக்கின் அனைத்து சாட்சி விசாரணை மற்றும் குறுக்கு விசாரணைகள் நிறைவடைந்தன. அதன் பின்னர் இரு தரப்பினரும் இறுதி வாதங்களை முன் வைத்தனர். இவ்வாறு இருதரப்பின் இறுதி வாதங்கள் நிறைவடைந்த நிலையில் இந்த வழக்கில் மே 28ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் எனச் சென்னை மகளிர் நீதிமன்றம் அறிவித்திருந்தது. இதனையொட்டி புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஞானசேகரன் அங்கிருந்து மகளிர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு நீதிபதி ராஜலட்சுமி முன் ஆஜர் படுத்தப்பட்டார்.
இந்நிலையில் சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி இன்று (28.05.2025) இந்த வழக்கில் தீர்ப்பளித்துள்ளார். அதில், “இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்படுகிறது. அவர் மீதான 11 பிரிவுகளிலும் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது ” என நீதிபதி வாசித்தார். மக்கள் மத்தில் பெரும் அதிர்வலையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்திய இந்த வழக்கில் 5 மாதங்களில் அனைத்து விசாரணைகளையும் முடிவடைந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.