
திருவிழாவில் சண்டையிட்ட இளைஞர்களுக்கு காவல்துறையினர் நூதன தண்டனை விதித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாட்டம் மரப்பாலம் அருகே உள்ள புகழ்பெற்ற ஐயப்பன் கோவிலில் மேளம் தாளம் முழங்க நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அப்போது அங்கு வந்த 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தனர். அப்போது அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்படவே யாரும் எதிர்பாராத வகையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் தகராறில் ஈடுபட்ட அனைவரையும் காவல்நிலையம் அழைத்து சென்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக உதவி காவல் ஆய்வாளர் கவியரசன் அவர்களிடம் விசாரணை நடத்தினார். பின்னர் அந்த இளைஞர்களிடம் மனப்பாடமாக 100 திருக்குறளை படித்து பார்க்காமல் எழுத வேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் வேறு வழியில்லாத இளைஞர்கள் பலமணி நேரம் மனப்பாடம் செய்து திருக்குறைளை எழுதி கொடுத்துள்ளனர். பின்னர் இளைஞர்கள் அனைவருக்கும் உதவி ஆய்வாளர் அறிவுரை சொல்லி வீட்டுக்கு அனுப்பியுள்ளார். மாணவர்கள் 100 திருக்குறை மனப்பாடம் செய்ய மிகுந்த கஷ்டப்பட்டதாக அங்கிருந்த காவலர் ஒருவர் சிரிப்புடன் கூறினார்.