Skip to main content

தமிழில் தந்தியை கண்டுபிடித்த புலவர் சிவலிங்கம் உடல் அரசு மருத்துவ கல்லூரிக்கு தானம் 

Published on 17/12/2018 | Edited on 17/12/2018
si

 

திருச்சி கே.கே.நகர் பகுதியில் உள்ள சேஷாயி நகரை சேர்ந்தவர் புலவர் சிவலிங்கம். 1924ல் பிறந்தவர். 1944ல் அஞ்சல் எழுத்தராகி 1945ல் தந்தி பயிற்சி பெற்றவர். 1955ல் கறம்பகுடியில் பணியாற்றும் போது தமிழ்தந்தியை கண்டுபிடித்தார். தமிழ்த்தந்தி, கலைஞர் ஆட்சி காலத்தில் அறிமுகம் ஆனது. அதற்கான விருதினையும் பொற்கிழியும் பெற்றார். அஞ்சல் துறை ஊழியர்களின் உயர்விற்காக போராட்டங்களை நடத்தியவர்.

 

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் திருச்சி மாவட்டத் தலைவராக பொறுப்பேற்று, அதன் செயலாளராக இருந்த மறைந்த தோழர். இரா.இரகுபதி அவர்களுடன் இணைந்து மிகச் சிறப்பாக பணியாற்றியவர். கவிஞர். இசை ஞானமுள்ளவர். நல்ல பாடகர், சோவியத் கவிதைகள் உட்பட பல்வேறு மொழிபெயர்ப்புகளை தமிழுக்கு கொடுத்தவர். பணி ஓய்வுக்கு பின்னர் திருக்குறளுக்கு விளக்கம் உள்பட பல புத்தகங்களை எழுதி உள்ள புலவர் சிவலிங்கம், திருக்குறள் குறித்து தொடந்து ஆய்வு செய்து பல புத்தகங்கள் எழுதியவர்.

 

தன் மகள், மகனுக்கு கலப்புமணம் செய்து வைத்தவர். இறுதி மூச்சு உள்ளவரை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இலட்சியங்களை ஏற்று வாழ்ந்தவர். இன்று.. டிசம்பர் 16 காலை திருச்சி கே.கே.நகரில், ஷேசாயி நகரில் உள்ள அவரது இல்லமான தமிழ்தந்தி இல்லத்தில் காலமானார்!

 

வயது முதிர்வின் காரணமாக தனது 94 வயதில் மரணம் அடைந்தார். இவருடைய மனைவி சரஸ்வதி கடந்த 2002-ம் ஆண்டு இறந்து விட்டார். சிவலிங்கத்திற்கு தமிழ்செல்வன், மோர்ஸ் என்ற மகன்களும், மனோன்மணி என்ற மகளும் உள்ளனர். இறந்த பிறகு தனது உடலை மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சி படிப்புக்காக தானமாக வழங்க வேண்டும் என்று சிவலிங்கம் உறுதி அளித்து இருந்தார். அதன்படி திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவ கல்லூரிக்கு சிவலிங்கத்தின் உடலை தானமாக வழங்கினர். 

 

சார்ந்த செய்திகள்