
தமிழகத்தில் 2024 - 25 ஆம் கல்வியாண்டுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் 3 ஆம் தேதி முதல் மார்ச் 25 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை தமிழகம் முழுவதும் உள்ள 4.24 லட்சம் மாணவியர்களும், 3.78 லட்சம் மாணவர்களும் எழுதியிருந்தனர். குறிப்பாக 18,344 தனித் தேர்வர்களும், 145 சிறைவாசி தேர்வர்கள் என மொத்தமாக தமிழகம் முழுவதும் 8 லட்சத்து 21 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதியிருந்தனர். 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே 9ஆம் தேதி வெளியிடப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ஒருநாள் முன்னதாக, நாளை மறுநாள் (08-05-25) காலை 9:30 மணிக்கு வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு அடுத்தக்கட்ட நகர்வுக்கு உதவும் வகையில், 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை, ஒரு நாள் முன்னதாகவே வெளியிட பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.