
பூந்தமல்லி நகராட்சி அலுவலகம் அருகே நாவலடி என்ற பிரபல தனியார் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் நேற்று முன்தினம் ஒரு குடும்பத்தினர் மதியம் உணவு சாப்பிடச் சென்றுள்ளனர். அங்கு ஒரு பிரியாணி மற்றும் அசைவு உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டு கொண்டு இருந்தனர். இந்த நிலையில் ஊழியர்கள் கொண்டு வந்து கொடுத்த மட்டன் குழம்பை ஊற்றிச் சாப்பிட முயன்ற போது அதில் பெரிய அளவிலான ஒரு முழு தேரை அப்படியே இறந்த நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து உணவக நிர்வாகத்திடம் கேட்ட நிலையில் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, உணவில் முழு தேரை கிடந்ததை தங்களது செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி நிலையில், இதுகுறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
இதனைத் தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட உணவகத்தில் சோதனை நடத்தினர். உணவு பாதுகாப்புத் துறை ஆய்வாளர் வேலவன் தலைமையில் அங்கிருந்த உணவுப் பொருட்களையும் சோதனைக்காக எடுத்துச் சென்ற அதிகாரிகள் தற்காலிகமாக உணவகத்தை மூடி சென்றனர். இதனால் உணவகத்திற்கு வந்த வாடிக்கையாளர்கள் பாதியிலேயே திரும்பிச் சென்றனர். மேலும் உணவகத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்று நடைபெறவிருந்த நிலையில் உணவகம் மூடப்பட்டதால் நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டது.