Skip to main content

நூதன முறையில் ஏமாற்றி நகைக் கொள்ளை

Published on 13/09/2017 | Edited on 13/09/2017

நூதன முறையில் ஏமாற்றி நகைக் கொள்ளை: இருவர் கைது

கோவை மாவட்டம், பெரியநாயக்கன் பாளையம் காவல்நிலைய  எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள பூட்டிய வீடுகளில், குறிப்பாக பகல் நேரங்களில் அதிகமான திருட்டுகள் நடந்து வந்தன.

புதுார் என்ற இடத்திலுள்ள சங்கர்குமார் என்பவரின் வீட்டில் ஏழு பவுன், ஒரு கிலோ வெள்ளிப் பொருட்கள், தெற்குப்பாளையம் பகுதியை சேர்ந்த ஸ்ரீதேவி என்பவரின் வீட்டில் நான்கு பவுன் நகை, நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த இரமேஷ் என்பவர் வீட்டில் இரண்டு வெள்ளிக் கொலுசு; நாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த சுப்பம்மாள் என்பவரின் வீட்டில் ஏழு பவுன் நகை ஆகியவை அடுத்தடுத்து திருட்டுப்போயின.

இச்சம்பவங்களில் தொடர்புடைய திருடனை கண்டுபிடிக்க  பெரிய நாயக்கன்பாளையம் போலீசார் அந்தப்பகுதியில் உள்ள சில நிறுவனங்களில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு மேற்கொண்ட விசாரணையில் சந்தேகம் கொண்ட சிலரை பிடித்து விசாரணை செய்தனர்.

அப்போது, இந்த பகல் கொள்ளையில், பல்லடம் பகுதியை சேர்ந்த  பிரகாஷ் (வயது-24). ஆனந்தகுமார் (வயது-27). ஆகியோர் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.

இவர்கள் போலீசாரிடம் மேற்கொண்ட விசாரணையில், 'பகல் நேரத்தில் காஸ் ஸ்டவ் ரிப்பேர் செய்பவர்கள் போல தெருக்களில் சுத்தியல், கட்டிங் பிளேயர் அடங்கிய டூல்ஸ் பையை தூக்கிக்கொண்டு செல்வோம்.

 பூட்டியிருக்கும் வீட்டுக்கு முன்பு காஸ் ஸ்டவ்வை ரிப்பேர் செய்வது போல கடை விரித்து வேலை செய்வோம். ஆட்கள் நடமாட்டமில்லாத நேரத்தில், சாவகாசமாக அந்த வீட்டின் பூட்டை உடைத்து, வீட்டுக்குள் சென்று கொள்ளையடிப்போம்.

இதுவரை எங்களை யாரும் சந்தேகப்பட்டதில்லை. தொடர்ந்து நாங்கள் அந்தப் பகுதியிலேயே சுற்றிக்கொண்டு இருந்ததால், கண்காணிப்பு கேமராவில் சிக்கிவிட்டோம்...” என்று கூறியுள்ளனர்.

இவர்களிடமிருந்து, 18 பவுன் நகை, ஒரு கிலோ வெள்ளிப் பொருட்களை பெரிய நாயக்கன்பாளையம் போலீசார் கைப்பற்றினர்.

சிவசுப்பிரமணியன்

சார்ந்த செய்திகள்