/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/accident1_0.jpg)
தமிழக காவல்துறை தலைவர் டிஜிபி அலுவலக உத்தரவுப்படி தினமும் ஒவ்வொரு காவல்நிலையமும் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை மடக்கி வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்க வேண்டும் என்கிற உத்தரவுப்படி வேலை செய்து வருகின்றனர். அதன்படி, வேலூர் கிராமிய காவல்நிலையம், கணியம்பாடி என்கிற கிராமத்தில் உள்ளது. இந்த காவல்நிலையம் வேலூர் – திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலை ஓரம் அமைந்துள்ளது. இந்த காவல்நிலையத்தின் சார்பில் வழக்கம் போல் பிப்ரவரி 8ந்தேதி மாலை 5 மணி முதல் வேலூர் – திருவண்ணாமலை சாலையில் வாகன சோதனை நடத்திக்கொண்டு இருந்தனர்.
அப்போது கண்ணமங்களத்தில் இருந்து வேலூரை நோக்கி ஒரு இருசக்கர வாகனம் வேகமாக வந்துள்ளது. அந்த வாகனத்தை ஒரு போலீஸ்காரர் லத்தியை காட்டி மடக்கியுள்ளார். அந்த பைக்கை ஓட்டி வந்த இளைஞர்கள் பைக்கை நிறுத்தாமல் வேகமாக செல்ல முயன்றுள்ளனர். தங்கள் முன்பு ஒரு லாரி செல்ல அதை க்ராஸ் செய்து போலீஸிடம் சிக்காமல் தப்பிக்கலாம் என நினைத்து ஓட்டியதாக கூறப்படுகிறது.
அங்கு சாலையின் குறுக்கே வேகத்தை குறைக்க வைக்கப்பட்டிருந்த தடுப்பு கம்பியில் பைக் மோதி, பின்னர் லாரி மீது மோதியதில் வண்டியை ஓட்டி வந்த வேலூர் சலவன்பேட்டையை சேர்ந்த விக்ரம் தூக்கி வீசப்பட்டு அதிஷ்டவசமாக லேசான காயத்தோடு உயிர்தப்பினான். பின்னால் உட்கார்ந்திருந்த விக்னேஷ் என்கிற 20 வயது இளைஞன் லாரியில் மோதி கீழே விழுந்து இறந்தான்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/accident2.jpg)
போலீஸ் லத்தியால் தாக்கியதால் தான் அவன் கீழே விழுந்து இறந்தான் என கணியம்பாடியின் ஒருப்பகுதி மக்கள், காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். பின்னர் சாலை மறியல் செய்தனர். இதனால் சாலையின் இரண்டு புறமும் வாகனங்கள் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு வரிசைக்கட்டி நின்றன. தவறு செய்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனால் இரவு வரை நீண்ட இந்த பிரச்சனையில் வேலூர் ஏஐடியூசியினரும் வந்து கலந்துக்கொண்டனர். இறுதியில் தவறு செய்தது யார் என விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் வாக்குறுதி தந்தபின்பே 2 மணி நேர மறியலை கைவிட்டனர்.
இன்று பிப்ரவரி 9ந்தேதி காலை 11 மணியளவில் உடற்கூறாய்வு முடிந்து உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இவர்கள் மீண்டும் போராட்டத்தில் இறங்கிவிடக்கூடாது என வேலூர் சலவன்பேட்டையில் போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். அதோடு, தற்போது, வண்டியை நிறுத்தாமல் போன இளைஞர்களை காவலர்கள் தாக்கினார்களா?, அல்லது அவர்கள் தவறுதலாக மோதி விபத்தில் சிக்கி இறந்தார்களா என காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)