
தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்துவரும் நிலையில், மாநிலத்தின் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பிவருகின்றன. பல இடங்களில் ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில், சென்னையின் பல பகுதிகளில் விட்டுவிட்டு மழைபொழிந்துவரும் எனவும், சென்னையில் இன்னும் இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பொழியும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாகச் சிவகங்கை மாவட்டத்தின் திருபுவனம், திருவண்ணாமலை மாவட்டத்தின் ஜமுனாமாத்தூர் ஆகிய பகுதிகளில் தலா 7 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. புதுக்கோட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், பள்ளிப்பட்டு, வாணியம்பாடியில் 6 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. வேலூர் மாவட்டம் செதுக்கரை மலை அடிவாரத்தில் குடிசை மீது பாறை உருண்டு விழுந்ததில் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர். நேற்று (19.11.2021) வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் வீடு இடிந்துவிழந்து தூங்கிக்கொண்டிருந்த 9 பேர் உயிரிழந்த சம்பவம் குறிப்பிடத்தக்கது.