MGR நூற்றாண்டு விழா என்ற பெயரில் பல நூறு கோடிகளை வீணடிப்பதா? வேல்முருகன் கண்டனம்
இதுவரை எந்தவொரு முதலமைச்சரும் எந்தவொரு முதலமைச்சருக்கும் நூற்றாண்டு விழா என்று எடுத்து மக்கள் பணத்தை வீணடித்ததில்லை. அப்படியிருக்க பழனிச்சாமி, “எம்ஜிஆர் நூற்றாண்டு விழா” என்ற பெயரில் பல நூறு கோடிகளை வீணடித்துவருவது விரும்பத்தக்கதில்லை. சுயவிளம்பரம் மற்றும் சுயநலத்திற்காகச் செய்யும் இத்தகு செயலை மக்களுடன் இணைந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது என அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
முதலமைச்சர் என்றால் அவர் ஒட்டுமொத்த மக்களுக்கும் பொதுவானவர், பொறுப்பானவர் என்றுதான் பொருள். ஆனால் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி, தான் முதலமைச்சராக இருப்பது தனக்காகத்தான் என்ற மட்டிலேயே காரியமாற்றுகிறார்.
தனது பெயரை பிரபலப்படுத்த வேண்டும்; அதற்காக தானே தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று இறங்கியிருக்கிறார் பழனிச்சாமி!
முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் பெயரில் நூற்றாண்டு விழா என்று சொல்லி அங்கங்கு பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறார்.
எம்ஜிஆரின் கட்சியைச் சார்ந்தவர் என்ற முறையில் அந்தக் கட்சியின் சார்பில் அந்தக் கட்சியின் பணத்திலோ அல்லது தனது சொந்தப் பணத்திலோ எம்ஜிஆர் விழாவை பழனிச்சாமி எடுப்பதாயிருந்தால் அதை யாரும் கேள்வி கேட்தற்கில்லை.
ஆனால் ஊர்ப்பணத்தை, அரசுப்பணத்தை அதாவது மக்கள் வரிப்பணத்தை எடுத்து எம்ஜிஆர் விழா என்ற பெயரில் விரயமாக்கி சுயவிளம்பரம் தேடிக் கொள்வதை சும்மா பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
இதற்கு முன் எந்த முதலமைச்சருமே செய்யாத காரியமாகும் இது; பல நூறு கோடிகளை இதில் கரியாக்கிக் கொண்டிருக்கிறார் பழனிச்சாமி.
நலத்திட்டங்கள் எதற்கும் பணமின்றி பணிகளே நடக்காமல் முடங்கிக் கிடக்கிறது அரசு நிர்வாகம்; இந்த நிலையில்தான் இப்படி எம்ஜிஆர் விழா என்ற பெயரில் கோடிகளை வாரியிறைத்து பொருளாதாரத்தையே பாழடித்து வருகிறார்.
இயற்கைப் பேரிடர் நிவாரணத்திற்கு வழியில்லை; விவசாயிகள் குறை தீர்க்கத் துப்பில்லை; பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்க வக்கில்லை; நலிந்தோர்க்கு உதவ நிதியில்லை; வறுமைக்கோட்டுக்குக் கீழுள்ள மக்களைக் கைதூக்கிவிடக் காசில்லை; எந்தவொரு திட்டத்துக்குமே நிதி இல்லை.
இப்படிப்பட்ட நிலையில்தான் எம்ஜிஆர் விழா என்று இறைக்கிறார் பல நூறு கோடிகளை எடப்பாடியார்.
நடுவண் மோடி அரசின் வல்லாட்சியால் தமிழகம் பிரச்சனைகளின் களமாகியுள்ளது; காவிரி மேலாண்மை வாரியம், மீனவர், மீத்தேன், ஹைட்ரோகார்பன், ஷேல், நீட், ஜிஎஸ்டி என எந்தப் பிரச்சனைக்கும் தீர்வில்லை.
இதற்கிடையே நீலகிரி மாவட்டம் பந்தலூர் அடுத்த கேரள எல்லையோர ஊரான தாளூரிலிருந்து அதிர்ச்சியளிக்கும் செய்தி ஒன்று வந்திருக்கிறது.
அந்தப் பகுதியில் ஏற்கனவே இருந்த தமிழக-கேரள எல்லையிலிருந்து தமிழகத்திற்குள் சுமார் 100 மீட்டர் தூரம் ஊடுருவி புதிதாக தனது எல்லைக்கல்லை நட்டு நில ஆக்கிரமிப்பு செய்துள்ளது கேரளா.
இதை தாளூர் மக்கள் தெரியப்படுத்தியும் பழனிச்சாமி அரசு இன்னும் நடவடிக்கையில் இறங்கவில்லை.
இப்படி பிரச்சனைகளுக்கு மேல் பிரச்சனைகள் தமிழகத்தைத் தாக்கிக் கொண்டிருக்கையில், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல், மோடியின் தயவில் ஆட்சியில் நீடித்து ஆதாயத்தை மேலும் பெருக்கிக் கொள்ளும் வகையில் தனக்கொரு ஒளிவட்டத்தை உருவாக்கியாக வேண்டும் என்றே எம்ஜிஆருக்கு விழா எடுத்து பொதுப்பணத்தைப் பாழடித்து வருகிறார் பழனிச்சாமி!
அந்த விழாவுக்கும் மக்கள் வருவதில்லை; எனவே கூட்டம் கூட்ட பள்ளி மாணவர்களை வலுக்கட்டாயமாக அழைத்து வருகிறார்; முதல்வரே செய்யும் இந்த வேண்டாத வேலையை உயர் நீதிமன்றம் கண்டித்து, பள்ளி மாணவர்களை அழைக்கக்கூடாது என்றது. ஆனால் பழனிச்சாமி கேட்பதாக இல்லை.
சுயவிளம்பரம் மற்றும் சுயநலத்திற்காக “எம்ஜிஆர் நூற்றாண்டு விழா” என்ற பெயரில் மக்கள் பணத்தைப் பாழடிக்கும் எடப்பாடியின் அடாத செயலை மக்களோடு இணைந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது! இவ்வாறு கூறியுள்ளார்.