Skip to main content

மாயமான வெள்ளிப் பல்லக்கு - ஐ.ஜி.யிடம் சிக்கிய குற்றவாளி!

Published on 29/09/2017 | Edited on 29/09/2017
மாயமான வெள்ளிப் பல்லக்கு - ஐ.ஜி.யிடம் சிக்கிய குற்றவாளி!



கல்ப கோடி காலமாக சைவம் பெரிதா வைணவம் பெரிதா என இருதரப்பினர் மோதிக் கொண்ட விவகாரத்தில் ஒற்றுமை ஏற்படுத்துகிற நோக்கில் தன் உடலில் ஒரு பாதி அரியாகவும், மறுபாதி சிவனாகவும் ஒரு சேர அவதாரமெடுத்த சிவபெருமான் சைவமும் வைணவமும் ஒன்றே என்ற தத்துவத்தை உணர்த்தினார். அந்த அரிய சம்பவக் காட்சி நெல்லை மாவட்டத்தின் சங்கரன்கோவிலில் நடந்ததாக வரலாறு. அக்காட்சியை தனக்கும் காட்டியருளவேண்டும் என்று அன்னை பார்வதி தேவியார் சிவபெருமானிடம் வேண்ட, அவரது அருள்வாக்கின் படி உமையவள் பார்வதி அம்மை, சிவனை வேண்டி பொதிகையடியில் உள்ள புன்னைவனத்தில் தவமிருக்க, அன்னையின் தவத்தை மெச்சிய சிவபெருமான், அரியாகவும், சிவனாகவும் ஒரு சேரக் காட்சி தந்தார்.

அதனையே ஆடித்தபசு திருவிழாவாக சங்கரன்கோவில் நகரில் கொண்டாடப்படுகிறது. அங்கே சிவபெருமானுக்கென்று மூன்று பெரிய பிரகாரங்களைக் கொண்ட தென் மாவட்டத்தில் மிகப்பெரிய ஆலயமாக சங்கரநாராயணர் ஆலயம், வான் நோக்கி நிற்கிறது. இந்த அரிய காட்சி காரணமாக சங்கரன்கோவில் ஆலயம் நாள்தோறும் பக்தர்களின் திரளான கூட்டத்தால் காட்சியளிப்பது குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் அத்தகைய பெருமை மிகு ஆலயத்தில் பள்ளியறை பூஜைக்காக சுவாமியின் பாதங்களைக் கொண்டு செல்கிற 24 கிலோ கொண்ட வெள்ளிப் பல்லக்கு அண்மையில் மாயமானதை நக்கீரனின் இணையதளத்தில் வெளிப்படுத்தியிருந்தோம். ஆலயத்தின் முந்தைய துணை ஆணையரான பொன்சுவாமிநாதனின் புகாரின் பேரில் நகர காவல் நிலைய போலீஸ் அதிகாரிகளால் விசாரணை மேற் கொள்ளப்பட்டது.

இந்தச் சூழலில் சிலை கடத்தல் தொடர்பாக விசாரணையின் பொருட்டு மதுரையில் முகாமிட்டிருந்த ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலுக்கு, வெள்ளியை உருக்கி பந்து போன்று எடை கொண்டது போல் உருண்டையாக்கி மார்க்கெட்டில் விற்பதற்காக நபர் ஒருவர் வந்திருப்பதாகத் தகவல் கிடைத்திருக்கிறது. சந்தேகத்தின் பேரில் அந்த நபரை பொன்.மாணிக்கவேல் விசாரித்திருக்கிறார். தன்னுடைய பெயர் நாகராஜன் என்பதையும், சங்கரன்கோவிலில் நகைப்பட்டறை வைத்திருப்பதாகச் சொன்னவர் அங்குள்ள ஆலயத்தின் வெள்ளிப் பல்லக்கின் தகடுகளை சிலர் கொடுத்ததால் அதனை உருக்கி விற்பனைக்குக் கொண்டு வந்திருப்பதகாச் சொன்னார், அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் அதில் தொடர்புடைய ஆலய ஊழியர்களான காளிதாஸ் என்ற கபாலி, திலக்ராஜ், பட்டத்துராஜா மூன்று பேரோடு நாகராஜனும் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து மூன்று கிலோ வெள்ளியும் கைப்பற்ப்பட்டிருக்கிறது.

இவர்களில் நாகராஜன் தவிர மற்ற மூவரும் ஆலய ஊழியர்கள். இவர்களில் பட்டத்துராஜா ஒப்பந்த அடிப்படையிலான ஆலய துப்புறவு ஊழியர் இவர்கள் பல்லக்கிலிருந்து வெள்ளியை பார்ட் பார்ட்டாகக் கழட்டிக் கொடுத்ததால் அதனை உருக்கியுள்ளார் நாகராஜன். என்றகிறார் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல். அவர்களில் பட்டத்துராஜாவை ரிமாண்ட் செய்த போலீசார் மற்ற மூவரையும் விசாரணைக்குப் பின் ரிமாண்ட் செய்வதாகத் தெரிவித்தனர் இன்று கோர்ட்டிற்கு கொண்டு வரப்பட்ட பட்டத்துராஜா, தனக்கு வேலையை நிரந்தமாக்கித் தருவதாக கூட்டாளிகள் சொன்னதால் உடந்தையாகி விட்டேன் அதற்காக தனக்கு 100 கிராம் வெள்ளி கொடுத்ததாக சொன்னார்.

விசாரணை போகும் பட்சத்தில் முக்கியப் புள்ளிகள் சிலரும் சிக்குவார்கள் என சூசகமாகத் தெரிவிக்கிறார்கள் இதன் எஸ்.ஐ.டி.யினர்.

 
-பரமசிவன்
படங்கள்: ப.இராம்குமார்

சார்ந்த செய்திகள்