Skip to main content

வேலைவாய்ப்பு மோசடி: நீதிபதிக்கு நேர்முகத் தேர்வு அழைப்பு விடுத்த நிறுவனம்!

Published on 03/10/2017 | Edited on 03/10/2017
வேலைவாய்ப்பு மோசடி: நீதிபதிக்கு நேர்முகத் தேர்வு அழைப்பு விடுத்த நிறுவனம்!

திருப்பூர் ரிலையன்ஸ் இண்டஸ்டிரியல், திருச்சி ஏர் டெக் சொலியூசன்ஸ், திருப்பூர் ரெனால்ட், திருப்பூர் வால்வோ, கோவை டயம்னட் ஆகிய தனியார் நிறுவனங்கள் நீதிபதி வைத்தியநாதனுக்கு பல்வேறு தேதிகளில் வெவ்வேறு பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக கூறி தனித்தனியாக அழைப்பு கடிதம் அனுப்புயுள்ளன. அதில் பதிவுக்கட்டணமாக 250 ரூபாய் முதல் 750 ரூபாய் வரை வெவ்வேறு கட்டணம் நிர்ணயித்துள்ளனர். மத்திய மாநில அரசு இலச்சினைகளுடன் (emblem) பாரதிராஜா என்பவருக்கு பணி நியமன உத்தரவும் இந்த நிறுவனங்கள் வழங்கியுள்ளன.

இந்த 5 நிறுவனங்கள் தொடர்பாக தலைமை நீதிபதி கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.வைத்தியநாதன் தலைமையில் சிறப்பு அமர்வாக அக்டோபர் 1ஆம் தேதி மாலை விசாரித்தது. இந்த வழக்கில் மத்திய மாநில அரசுகள், தமிழக டிஜிபி, சென்னை காவல் ஆணையர் ஆகியோருடன், 5 ஆள் சேர்பு நிறுவனங்களும் எதிர்மனுதாரராக இணைக்கப்பட்டனர்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ராஜரத்தினம் ஆஜராகி குறிப்பிட்ட 5 நிறுவனங்கள் குறித்து விசாரித்ததாதாகவும், அவர் நம்பகமான (genuine) நிறுவனங்கள்தான் என்றும், ஆனால் நீதிபதியின் பெயருக்கு அழைப்பு கடிதம் அனுப்பியது குறித்து விசாரிக்க சைபர் கிரைம் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,
 
"வேலை தேடிவருபவர்களையும் இளைஞர்களையும் ஏமாற்றும் நோக்குடன் இதுபோன்ற போலி தனியார் நிறுவனங்கள் செயல்படுவது, மிகப்பெரிய ஊழலாக அல்லது மோசடியாக உள்ளது. வேலைவாய்ப்புக்கான போதிய வழியை தமிழக அரசு ஏற்படுத்திக் கொடுக்காததே இதுபோன்ற நிறுவனங்கள் செயல்படுவதற்கான முக்கிய காரணமாக உள்ளது. இந்த விவகாரம் குறித்து மாநில அரசுகள் விரிவான விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இந்த 5 நிறுவனங்கள் மூலம் எத்தனை பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டு, எவ்வளவு வசூலிக்கப்பட்டுள்ளது? எத்தனைபேர் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர்? மத்திய மாநில அரசுகளின் இலச்சினைகள் எப்படி திருட்டுத்தனமாக பயன்படுத்தப்படுகிறது? நாடு தழுவிய அளவிலான மிகப்பெரிய சைபர் கிரைம் மோசடிக்கான ஒருபகுதியாக இதுபோன்ற அழைப்பு கடிதங்கங்கள் அனுப்பும் நிறுவனங்கள் செயல்படுகிறதா? என்பவை குறித்த விளக்கமும் அறிக்கையில் இடம்பெறவேண்டும்.

இந்த வழக்கு அக்டோபர் 13ஆம் தேதிக்கு 2:15மணிக்கு ஒத்திவைக்கப்படுகிறது, அதுவரை ஐந்து நிறுவனங்களும் கட்டணங்கள் ஏதும் வசூலிக்கக்கூடாது என உத்தரவிட்டார்.

- ஜீவா பாரதி
 

சார்ந்த செய்திகள்