கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் சூர்யா நடிப்பில் தமிழிலில் வெளியான 7 ம் அறிவு திரைப்படத்தில் சீனாவில் இருந்து இந்தியாவில் பரவும் வைரஸால் மனிதர்கள் ஆங்காங்கே விழுந்து இறந்தனர். அவர்களை காப்பாற்ற மருந்து இல்லை என்ற நிலையில் அந்தப் படம் நகர்ந்தது.

இப்போது அந்த படத்தின் காட்சிகளை மெய்ப்பிக்கும் வகையில் சீனாவில் பரவி வருகிறது கொரானா என்ற வைரஸ். இந்த வைரஸில் இருந்து மக்களை காப்பாற்ற மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், இதுவரை சுமார் 25 க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். அதனால் பல நகரங்கள் போக்குவரத்து உள்பட அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அவதிப்பட்டுவருகின்றனர்.
மற்ற உலக நாடுகளிலும் சீனாவில் இருந்து வருபவர்களுக்கு மருத்துவச் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். அதே போல இந்தியாவில் நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மருத்துவம் படிக்க சீனாவுக்கு சென்று அங்கே உணவுக்கு கூட வழியில்லாமல் தவித்து வருகின்றனர். அவர்களை இந்தியா அனுப்பவும் முடியவில்லை. அதில் தமிழ்நாட்டு மாணவர்கள் அதிகமானோர் உள்ளனர். அதே போல சீனாவை ஒட்டியுள்ள தீவுகளிலும் தமிழர்கள் தவித்து வருகின்றனர்.
அங்கே என்ன நடக்கிறது என்பது பற்றி சீனா அருகில் உள்ள மக்காவ் தீவில் உள்ள தமிழக பொறியாளர் போஸ்வீராவை தொடர்பு கொண்டு கேட்டோம். அப்போது, "மக்காவ் தீவில் சுமார் 20 ஆயிரம் பேர் வசிக்கிறார்கள். இதில் தமிழர்கள் 200 பேர் வேலை செய்கிறார்கள்.சீனாவிற்கு அருகில் உள்ள தனி தீவு இது. சீனர்கள் அடையாள அட்டையை காட்டிவிட்டு இங்கு வரலாம். சூதாட்டத்திற்காக சீனர்கள் வந்து செல்வதால் இந்த தீவிற்கு வருமானம் கிடைக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சீனாவில் இருந்து வந்த ஒரு ஆண், ஒரு பெண் ஆகிய இருவருக்கு கொரானா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு பாதுகாப்பு எற்பாடுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. வெளியே சென்றால் மாஸ்க் இல்லாமல் செல்லக் கூடாது. வெளியில் செல்லும் போது இருமல், தும்மல் வந்தால் அந்தப் பகுதியில் உள்ள போலீசார் கூட உடனே அவர்களை அழைத்துச் சென்று மருத்துவப் பரிசோதனை செய்வார்கள்.
முதலில் டெம்பரேச்சர் பார்ப்பார்கள். 30 டிகிரிக்கு மேல் டெம்பரேச்சர் இருந்தால் உடனே அவரை மருத்துவமனைக்குஅனுப்பிவிடுவார்கள். மேலும் நெற்றியில் தெர்மா மீட்டர் வைத்தே சோதனைகள் செய்யப்படுகிறது. அனைவரும் மாஸ்க் போட வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் மாஸ்க் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதாவது ஒரு பாக்கெட்டில் 8 மாஸ்க் இருக்கும். ஒரு பாக்கெட் விலை 10 டாலர்கள். வாரத்திற்கு ஒரு பாக்கெட் தான் கிடைக்கும் அடையாள அட்டையை மெடிக்கல்களில் காண்பித்து பதிவு செய்து கொண்டே மாஸ்க் வாங்க முடியும். வேறு எங்கேயும் விற்பனை இல்லை. தற்போது மாஸ்க் தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டதால் நியூசிலாந்தில் இருந்து 2 கோடி மாஸ்க் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதாவது சீனர்கள் வரவு இல்லாமல் மக்காவ் தீவில் ஏதும் நடக்காது என்பதால் அவர்களின் வருகை தடை செய்யப்படவில்லை" அவர் தெரிவித்தார்.