
கடலூர் மாவட்டம், பன்ருட்டி வட்டம், பட்டம்பாக்கம் கிராமத்தில் வசித்து வரும் ரேவதி என்பவரது கணவர் சுப்பிரமணி. கடந்த 2015 ம் ஆண்டு காவல்துறையினரால் ஒரு வழக்கு விசாரணைக்காக நெய்வேலி டவுன்சிப் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அப்போது அங்கு பணியில் இருந்த காவல் ஆய்வாளர் ராஜா மற்றும் காவலர்கள் செந்தில்வேல், சௌமியன் ஆகியோர் கூட்டாக சேர்ந்து மிருகத்தனமாக தாக்குதல் நடத்தியதில் மரணமடைந்தார். சுப்பிரமணி மரணம் தொடர்பான வழக்கு (குற்ற எண் 269 / 2015 ) சிபிசிஐடி காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்டு, இவ்வழக்கின் விசாரணையும், கடலூர் மாவட்டம் சிதம்பரம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்திலும் (S.C. No 95/2019) நடைபெற்று வருகிறது. இவ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள போலீசார் மீது கொலை வழக்கு (302) பதிவு செய்வதற்கு மாறாக, 304 A II என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது முறையற்றதாகும்.
கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆய்வாளர் ராஜா மற்றும் காவலர்கள் செந்தில்வேல், சௌமியன் ஆகியோர் வழக்கு துவங்கிய நாள் முதல் இன்று வரை ஒரு நாள் கூட பணியிடை நீக்கம் செய்யப்படாமல் தொடர்ந்து பணியில் நீடித்து வருகின்றனர். வழக்கமாக கொலை குற்றச்சாட்டுக்குள்ளானவர்கள் கைது செய்யப்படும் நடைமுறை இவர்கள் மீது மேற்கொள்ளப்படவில்லை. அனைத்திற்கும் மேலாக இந்த குற்றம் சாட்டப்பட்ட காவலர்கள் குற்றம் நடந்துள்ள அதே கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து பணியில் நீடித்து வருகின்றனர்.
இதனால் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி ரேவதி மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள், உறவினர்களையும் மிரட்டி வழக்கை வாபஸ் வாங்கச் செல்லி கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். வழக்கின் விசாரணைக்கும் முறையாக ஆஜராகாமலும், வழக்கை நீர்த்துப் போகச் செய்யும் வகையிலும் இழுத்தடிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதுடன், சாட்சிகளையும் மிரட்டி வருகின்றனர். இதுகுறித்து தி ரேவதிகடலூர் மாவட்ட கண்காணிப்பாளரிடமும் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையில்லாததால், காவல்துறை தலைவர் (டிஜிபி) அவர்களுக்கும் புகார் மனு அனுப்பியுள்ளார்.
பாதிக்கப்பட்ட ரேவதி தனக்கு நஷ்ட ஈடு வேண்டுமெனக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் அவருக்கு ரூ. 30,09,648/- நட்ட ஈடு வழங்கிட வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இத்தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையிட்டு மனுவினையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. ஆனால் தற்போதுவரை அவருக்கு நஷ்டஈடு வழங்கவில்லை.
இந்த வழக்கு சிதம்பரம் இரண்டாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது அப்போது சௌமியன் மட்டும் ஆஜர் ஆனார். மற்றவர்கள் ஆஜர் ஆகவில்லை. இதனையெடுத்து வழக்கு விசாரணைக்கு ஆஜராகத காவல் ஆய்வாளர் ராஜா, மற்றும் காவலர் செந்தில்வேல் ஆகியோருக்கு வெளியில் வர முடியாத வகையில் பிடியாணையை அறிவித்து நீதிபதி ப.உ செம்மல் உத்திரவிட்டார். மேலும் சிபிசிஐடி போலீசார் இருவரையும் பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி உத்தரவிட்டுள்ளார்.
ஆய்வாளர் ராஜா தற்போது விருத்தாசலத்தில் மதுவிலக்கு அமல் பிரிவில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆய்வாளர் ஏ1 கொலை குற்றவாளியாக வழக்கில் இருந்து வருகிறார் ஆனால் மாவட்ட காவல்துறை ஆய்வாளர் உள்ளிட்ட காவலர்களுக்கு தொடர்ந்து பணி வழங்கி வருகிறது. இது அனைத்து தரப்பினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் ஆய்வாளர் ராஜா அவர் பணிசெய்யும் இடங்களில் பொதுமக்களுக்கும் சட்டத்திற்கு புறம்பாக பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இவரது நடவடிக்கையை கண்டித்து காட்டுமன்னார்கோவில் பகுதியை சேர்ந்த விவசாய சங்க தலைவர் இளங்கீரன் தட்டிக்கேட்டார். இதனை மனதில் வைத்து கொண்டு ஏழை மக்களுக்காக போராட்டத்தில் ஈடுபட்டபோது அவரை தாக்கினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இப்படி அராஜக முறையில் நடந்துகொள்ளும் ஆய்வாளர் தொடர்ந்து பணியில் இருந்து வருவது வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் பேச்சாக உள்ளது. .
எனவே, இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையிலான கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மாண்புமிகு. தமிழக முதலமைச்சரை நேரடியாக சந்தித்து முதல்வர் இந்த பிரச்சனையில் தலையிட்டு கணவனை இழந்து தனது குழந்தைகளுடன் நிர்க்கதியாக நிற்கும் அபலைப் பெண் ரேவதிக்கு உரிய நீதி கிடைப்பதற்கு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என கேட்டுக்கொண்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)