Marxist Communist Party condemns bjp Front defamation

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது வன்முறையில் ஈடுபட்ட இந்து முன்னணி மற்றும் பாஜகவினர் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சி.பி.எம். கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்கள் உரிமை சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் பிரச்சார இயக்கம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் ஒன்றியம், தாடிக்கொம்பில் போலீசாரிடம் அனுமதி பெற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது இந்து முன்னணியைச் சேர்ந்த வினோத்குமாரும் அவரது கூட்டாளிகளும் இடையூறு செய்ததுடன் ஒன்றியச் செயலாளர் சரத்குமார் உள்ளிட்ட தோழர்களை கடுமையாக தாக்கியுள்ளனர்.

Advertisment

இதைத்தொடர்ந்து திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தோழர்களை பார்க்கச் சென்றவர்களையும் கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில் பெண்கள் உட்பட பலரும் படுகாயமடைந்துள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சாரத்தை பொறுத்துக் கொள்ள முடியாமல் இந்து முன்னணி மற்றும் பாஜகவினர் திட்டமிட்ட வன்முறையில் இறங்கி கோரத்தாண்டவம் ஆடியுள்ளனர். ஆனால், உண்மைகளை மறைத்து திசை திருப்பும் வகையில் இந்து முன்னணியின் மாநில செயலாளர் வி.எஸ். செந்தில்குமார் என்பவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை பயங்கரவாதிகள் என்று குறிப்பிட்டுள்ளார். உண்மையில், நாடு முழுவதும் பயங்கரவாதத்தை நிகழ்த்தி மதவெறி வெறுப்பு அரசியலை வளர்த்து வருவது யார் என்பதை மக்கள் நன்கறிவார்கள்.

மேலும், அந்த அறிக்கையில் மத மற்றும் கடவுள் துவேசத்தை முன்வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பேசியதாக கூறியதானது கலப்படமற்ற அப்பட்டமான பொய்யாகும். அரசமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ள வழிபாடு, நம்பிக்கை போன்றவற்றை அவரவர் உரிமையாக கருதுகிறோம். மதத்தில் அரசியல் கலப்பதையும், எளிய மக்களின் மத உணர்வுகளை தங்களின் குறுகிய அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்துவதையுமே எதிர்க்கிறோம்.

இந்த பிரச்சார இயக்கத்தின் போது ஒன்றிய பாஜக அரசின் விலைவாசி உயர்வு, வேலையின்மை, பொதுத்துறை தனியார்மயமாக்கம், கார்ப்பரேட் ஆதரவுக் கொள்கை, ஜி.எஸ்.டி. வரி உயர்வு, பேரிடர் நிவாரண நிதி தர மறுப்பு உள்ளிட்டு தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் தொடர்ந்து இழைத்து வரும் துரோகங்கள், சிறுபான்மை மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் போன்ற பிரச்சனைகளையும், தமிழ்நாட்டில் மக்கள் ஒற்றுமையையும் மத நல்லிணக்கத்தையும் சீர்குலைக்க இந்து முன்னணி மற்றும் பாஜக சங்பரிவார் அமைப்புகள் மேற்கொள்ளும் சதித்திட்டங்களுக்கு தமிழக மக்கள் இரையாகமாட்டார்கள் என்பதையுமே தோழர்கள் பேசியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த இந்து முன்னணி மற்றும் பாஜகவினர் தாடிக்கொம்பிலும், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் மீது கொடூரமான தாக்குதலை நடத்தியுள்ளனர். அதிலிருந்து தப்பிக்கவும், மக்களை திசை திருப்பவும் தங்களது வழக்கமான அவதூறு பொய் பிரச்சாரத்தை மேற்கொள்கின்றனர். இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். மாநில அளவிலான இந்த அரசியல் பிரச்சார கருத்துக்களில் மாறுபாடு இருந்தால் இந்து முன்னணி தனியாக கூட்டம் போட்டு அவர்களது மாற்றுக்கருத்துக்களை முன்வைக்கலாம். அதைவிடுத்து வன்முறையில் இறங்குவது பதில் சொல்ல அவர்கள் திராணியற்று இருப்பதையும், ஜனநாயகம், அரசியல் நாகரீகம் என அனைத்தையும் காலில்போட்டு மிதிப்பதையுமே வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது.

Advertisment

உண்மையில், இவர்கள் தான் மதவெறி அரசியலை முன்னெடுத்து சிறுபான்மை மக்களுக்கு எதிரான வெறுப்பு அரசியலை மேற்கொண்டு தமிழ்நாட்டை அமளிக்காடாக மாற்ற முயல்கிறார்கள். மாறாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அமைதியையும், நல்லிணக்கத்தையும் நிலைநிறுத்தவே போராடி வருகிறது. எனவே, வன்முறையில் ஈடுபட்ட இந்து முன்னணி மற்றும் பாஜகவினர் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், பிரச்சாரத்தில் ஈடுபட்டதற்காக வழக்கு பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் அனைவரையும் எவ்வித நிபந்தனையுமின்றி விடுதலை செய்ய வேண்டுமென்றும் தமிழக அரசையும், காவல்துறையையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.