Rajinikanth will not attend murugan conference madurai

மதுரை பாண்டி கோயில் அருகே உள்ள அம்மா திடலில் நாளை(22.06.2025) இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதற்காக ஒரே இடத்தில் அறுபடை வீடுகள் அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் அதன் பின்பகுதியில் 8 லட்சம் சதுர அடிபரப்பளவில் மேடை, இருக்கை வசதிகள் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisment

மாநாடு நாளை பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறுகிறது. பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளுடன் நடக்கும் இந்த நிகழ்வில் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆந்திரா துணை முதலமைச்சர் பவன் கல்யாண் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு முக்கிய பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அரசியல் வட்டாரத்தில் இந்த நிகழ்வு முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வில் ரஜினிகாந்த் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் உலா வந்த வண்ணம் இருந்தது.

Advertisment

இந்த நிலையில் ரஜினி முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவதாக வெளியான தகவல் குறித்து ரஜினி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரஜினியின் பி.ஆர்.ஓ. ரியாஸ் அஹ்மது, “வரும் ஜூன் 22ஆம் தேதி அன்று மதுரையில் நடைபெற இருக்கும் முருகன் பக்தர்கள் மாநாட்டில் ரஜினிகாந்த் கலந்து கொள்கிறார் என்று உலாவரும் செய்தி பொய்யானது . ரஜினிகாந்த் கலந்து கொள்ள போவதில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.