கர்நாடகத்துக்கு மணல் கடத்த முயன்ற லாரிகள் பறிமுதல்; ஆறு பேர் கைது
திருச்சி மாவட்டம், தொட்டியம் பகுதியிலிருந்து நாமக்கல், சேலம் வழியாக கர்நாடக மாநிலத்துக்கு மணல் கடத்துவதாக புதுசத்திரம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து புதுசத்திரம் போலீஸார் நாமக்கல்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை மாலை சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த வழியாகச் சென்ற சந்தேகத்துக்கு இடமான சில லாரிகளை பிடித்து சோதனையிட்டனர். அதில் மூன்று லாரிகளில் சாக்குப்பைகளில் நிரப்பப்பட்ட மணல் மூட்டைகளை பெங்களூருவுக்கு கடத்தி கொண்டு செல்வது தெரியவந்தது.
இதையடுத்து, சேலம் மாவட்டத்தில் ஓமலூர் மற்றும் மேட்டூர் பகுதிகளைச் சேர்ந்த லாரி ஓட்டுநர்கள் வி.குமார், மாதேசன், கிளீனர்கள் சுரேஷ், குமார், ஆதிசிவன், உரிமையாளர் எஸ்.குமார் ஆகிய ஆறு பேர் கைது செய்யப்பட்டு நாமக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர்களை சிறையில் அடைத்துள்ளனர்.
சிவசுப்பிரமணியம்