தமிழகத்திலும் அனைத்து சாதியினரை அர்ச்சகராக்குக! - முதல்வரிடம் திருமா கோரிக்கை
கேரளாவில் பிராமணர் அல்லாதவர்களை அர்ச்சகர்களாக நியமித்ததைப் போல, தமிழகத்திலும் அனைத்து சாதியினரை அரச்சகர்களாக நியமிக்குமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் விசிக தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார்.

கேரள மாநிலத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற அரசாணை வெளியிடப்பட்டு, கேரள பொதுத் தேர்வாணயத்தின் சார்பில் நடத்தப்பட்ட தேர்வுகளின் அடிப்படையில் தலித்துகள் உட்பட பலர் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அறிவிப்பை அடுத்து தமிழகத்திலும் அதையே நிறைவேற்றக்கோரி பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்களாக்கி கோவில் கருவறைக்குள் அனுமதித்ததைப் போல, தமிழகத்தில் நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் அதே கோரிக்கையை நிறைவேற்றி சமூகநீதியை நிலைநாட்டவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் ஏற்பட்டுவரும் பாதிப்புகள் குறித்தும் அவர் விவாதித்தா என தகவல்கள் தெரிவிக்கின்றன.